29 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
 
           - சுந்தரர் (7-24-1)

 

பொருள்: பொன்போன்ற  திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து , மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே ,  உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?

26 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக் கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
 
                     - திருநாவுக்கரசர் (4-30-2)

 

பொருள்: அடியவர்கள் வீடு பேற்றை விரும்புமாறும் , வேள்விகளை நிகழ்த்துமாறும் , பண்களைப் பாடுமாறும் , திருவடி வழிபாட்டில் பயிற்சி உறுமாறும் செய்தவர் . நெற்றியில் கண்ணுடைய அப்பெருமான் உலகங்களை அளக்குமாறு நீண்ட வடிவெடுத்த திருமாலுக்கும் அருள்பாலித்தவர் கழிப்பாலைச் உள்ளவராவர் 

25 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்
பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-31-11)

 

பொருள்: இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் பாடவல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.

24 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புரிந்தவர் கொடுத்த வாளை
அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில்
அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன்
என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப்
பிடித்தனன் வாளுங் கையும்.

           - எரிபத்தநாயனார் புராணம் (46)

பொருள்: புகழ்ச் சோழ நாயனார் விரும்பிக் கொடுத்த உடைவாளை எறிபத்த நாயனார், தம் கழுத்தில் சேர்த்து அறுக்கத் தொடங்கும் பொழுது, புகழ்ச் சோழநாயனாரும், இப் பெரியவரின் செய்கை இவ்வாறிருக்க யானே கெட்டேன் என்று கூறி, இரங்கி, அவர் எதிரே விரைந்து போய்த் தம் பெரிய கைகளினால் அவர் தம் வாளையையும், கையையும் தடுத்துப் பிடித்தார்.

23 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புண்ணியன் புண்ணியல் வேலையன்
வேலைய நஞ்சனங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன்
காரணன் காரியங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன்
பாணி கொளவுமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடலன்
நாடற் பசுபதியே.
 
                  - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-30)

 

பொருள்: பசுக்களாகிய உயிர்கட்கெல்லாம் பதியாகிய சிவன் நல்லோருடைய புண்ணியங்களின் பயனாய் உள்ளவன்; கொடி யோருடைய குருதி ஒழுகும் முத்தலை வேலை ஏந்திய தலைவன்; கடலில் தோன்றிய நஞ்சைக் கண்டத்திலே உடையவன். எலும்பு மாலையன்; கண் பொருந்திய நெற்றியை உடையவன்; ஆகாய கங்கையைத் தரித்தவன்; உமையவள் தாளம் இட ஆடுபவன்; பண் பொருந்திய பாடலைப் பாடுபவன். அவனையே, நெஞ்சே, நாடுக

22 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
 
                 - திருமூலர் (10-4-27)

 

பொருள்: குருவினது திருவுருவைச் சிவனது அருட்டிரு மேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெய ராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுதல், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருளா ணையாகப் போற்றிக் கேட்டல், அவரது திருவுருவை உள்ளத்துள் உள்குதல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.

19 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
வளர்இளந் திங்களை முடிமேற்
கங்கையோ டணியுங் கடவுளைக் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ டுலகில் அரசுவீற் றிருந்து
திளைப்பதும் சிவனருட் கடலே.
 
               - கருவூர்த்தேவர் (9-13-11)

 

பொருள்: உமையோடு  இருந்தே யோகம் செய்ப வனாய், வளரும்  பிறைச்சந்திரனை முடியின் மீது கங்கையோடு அணிந்து கொண்டுள்ள தெய்வமாய் உள்ள கங்கைகொண்ட சோளேச் சரத்தானைப்பற்றி அழகிய கையில் பிச்சை எடுக்கும் ஓட்டினை ஏந்தி உணவுக்காகத் திரியும் கருவூரர்  பாடியுள்ள சொல்மாலை யாகிய இப்பதிகத்தைப் பாடி வழிபடுபவர்கள் ஆணைச் சக்கரம் ஏந்திய கையோடு இவ்வுலகில் அரசர்களைப் போலச் சிறப்பாக வாழ்ந்து மறுமையில் சிவபெருமானுடைய திருவருளாகிய கடலில் மூழ்கித் திளைப்பார்கள்.

18 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கருவாய் உலகினுக்
கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல்
மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில்
அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
                    - மாணிக்கவாசகர் (8-10-14)

 

பொருள்: உலகத்துக்குப் பிறப்பிடமாய், அப்பாலாய், இவ்விடத்து எம்பெருமாட்டியோடும் எழுந்தருளி அருவாய் அந்தணனாகி, என்னை அடிமைகொண்ட அழகிய சிவ பெருமானிடத்தே தும்பியே நீ சென்று ஊதுவாயாக.

17 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பழிசே ரில்புகழான் பர
மன்ப ரமேட்டி
கழியார் செல்வமல்குங் கழிப்
பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலைவல்லார் வா
னோருல காள்பவரே.
 
               -சுந்தரர்  (7-23-10)

 

பொருள்: பழி இல்லாத புகழையுடையவனும் , யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை ,  தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள் , தேவர் உலகத்தை ஆள்பவராவர் .

16 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும் முனிகளா னார்க ளேத்தும்
பூவான மூன்று முந்நூற் றறுபது மாகு மெந்தை
தேவாதி தேவ ரென்றுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.
 
                         - திருநாவுக்கரசர் (4-29-9)

 

பொருள்: திருச்செம்பொன்பள்ளியார் என்றும் அழிதல் இல்லாத வேதத்தை ஓதிக் கொண்டிருக்கும் பிரமனும் , கடல் நிறத்தவனாகிய திருமாலும் காணமுடியாதவராய் , மூத்தலோ பிறத்தலோ இல்லாதவராய் 1080 மலர்களைக் கொண்டு முனிவர்கள் வழிபடும் எங்கள் தந்தையாராய் , என்றும் தேவர்களுக்கு எல்லாம் தேவருமாய் உள்ளார் .

15 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஓடே கலணுண் பதுமூ ரிடுபிச்சை
காடே யிடமா வதுகல் லானிழற்கீழ்
வாடா முலைமங் கையுந்தா னுமகிழ்ந்
தீடா வுறைகின் றவிடை மருதீதோ.
 
                    - திருஞானசம்பந்தர் (1-32-1)

 

 பொருள்:உண்ணும் பாத்திரம் பிரமகபாலமாகும். அவர் உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் நன்முலைநாயகியும் தானுமாய் மகிழ்ந்து பெருமையோடு விளங்கும் திருத்தலமாகிய இடைமருது இதுதானோ?

12 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
 
                  - எறிபத்தநாயனார் புராணம் (42)

 

பொருள்: சிவபெரு மானின் அடியவர்க்கு, இவ்யானை செய்த தீங்கிற்குத் தீர்வு, இங்குப் பாகரோடு யானையையும் துணித்ததனால் அமையாது; இத்தீங்கு நேர்தற்குக் காரணமாகும் என்னையும் கொல்லவேண்டும்; மங்கலம் பொருந்திய மழுவினால் கொல்லுதல் முறைமையன்று; அதற்கு இதுவே தகுதியாகும் என்று, சிவந்த தம்திருக் கரத்தினால் இடையில் செருகியிருந்த வாளை எடுத்து, தம் பிழைக்குத் தீர்வு நேர்வாராய்க் மன்னர் கொடுத்தார்.

11 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொடிமேல் இடபமுங் கோவணக்
கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தின்
நீறும்ஐ வாய்அரவும்
முடிமேல் மதியும் முருகலர்
கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப்
போதும் வருகின்றவே.
 
                -சேரமான்பெருமாள்  நாயனார்  (11-6-20) 

 

பொருள்: கொடிச் சீலையின்மேல் எழுதப்பட்டுள்ள இடபமும், கோவணத்துடன் கூடிய கீளும், முடியின்மேல் ஒப்பற்ற ஒரு கொக்கின் இறகும், திங்களும், நறுமணத்தோடு மலர்ந்த கொன்றை மலர்மாலையும், மார்பில் பூசப்பட்டுள்ள திருநீறும், அங்குத் தவழ்ந்து சென்று முடிக்கு மேலே விரிக்கின்ற படங்களையுடைய ஐந்தலை நாகமும், திருவடியில் கட்டப்பட்டுள்ள கழல்களும், தோள்மேல் சார்த்தியுள்ள இலைவடிவான, கூரிய முத்தலை வேலும் ஆகிய இவை எப்பொழுதும் என் கண்ணில் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன

10 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.
 
                 - திருமூலர் (10-4-24)

 

பொருள்: கடல் நீரில் உள்ள  உவர்ப்புப் பின் ஞாயிற்றின் வெப்பத்தால் உப்பு எனப் பெயர்பெற்ற அப்பொருள், அந்நீரில் சேர்ந்தவழி அவ்வுரு வொழிந்து வேறுகாணப்படாது அந்நீரோடு ஒன்றாகும் முறைமை போல, உயிர் சிவத்தோடு என்றும் ஒன்றாயே இருத்தற் குரியதாயினும், ஆணவ மலத்தின் தடையால், அநாதியே வேறாய்ப் பசுத்தன்மை எய்திச் சீவன் எனப் பெயர்பெற்று மாயை கன்மங்களையும் உடைய தாய் உழன்று, அத்தடை நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தோடு சேர்ந்து வேறாய் நில்லாது ஒன்றாய்விடும்.

09 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர்
அண்டமாம் சிறுமைகொண் டடியேன்
உண்டவூண் உனக்காம் வகையென துள்ளம்
உள்கலந் தெழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற்
குறுகலர் புரங்கள்மூன் றெரித்த
கண்டனே நீல கண்டனே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
 
                -கருவூர்த்தேவர்  (9-13-6)

 

பொருள்: அண்டங்கள் எல்லாம் தன்னோடு ஒப்பிடுங்கால் ஓர் அணு அளவின என்று கூறுமாறு மிகப்பெரிய வடிவினனாகவும், தன்னோடு ஒப்பிடுங்கால் ஓர் அணுவே ஓர் அண்டத்தை ஒத்த பேருருவினது என்று சொல்லுமாறு சிறுமையிற் சிறிய வடிவினனாக வும் உள்ள தன்மையைக் கொண்டு, அடியேன் நுகரும் பிராரத்தவினை உன்னைச் சேர்ந்ததாக ஆகுமாறு அடியேனுடைய உள்ளத்தினுள் கலந்து விளங்கும் மேம்பட்ட ஒளி வடிவினனே! வாசுகி என்ற பாம் பினையே நாணாகக் கொண்டு பெரிய மேருமலை ஆகிய வில்லாலே பகைவர்களின் மும்மதில்களையும் எரித்த வீரனே! நீல கண்டனே! கங்கைகொண்ட சோளேச்சரத்தானே!

08 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நோயுற்று மூத்துநான்
நுந்துகன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செல்வம்
நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை
ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
                  - மாணிக்கவாசகர்  (8-10-10)

 

பொருள்: தும்பியே  பிறவிப் பிணியை அடைந்து முதிர்ந்து, இங்கு இருந்து - நான் தாய்ப் பசுவால் தள்ளப்பட்ட கன்று போல வருந்தி நின்ற என்னைத் தாய் போலக் கருணை செய்தாண்டருளின இறைவனிடத்தே சென்று ஊதுவாயாக.

05 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர்த்தாய் ஆடரவை அரை
ஆர்பு லியதள்மேற்
போர்த்தாய் யானையின்தோல் உரி
வைபு லால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார் வினை
கள்ள வைபோகப்
பார்த்தாய் நுற்கிடமாம் பழி
யில்கழிப் பாலையதே.
 
                   - சுந்தரர் (7-23-6)
 
பொருள்: அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல் , ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே , யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே , உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே , உனக்கு இடமாவது திருக்கழிப்பாலையே

04 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நொய்யவர் விழுமி யாரு நூலினுண் ணெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார் உடலெனு மிடிஞ்சி றன்னில்
நெய்யமர் திரியு மாகி நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளி யாரே.
 
                - திருநாவுக்கரசர் (4-29-2)

 

பொருள்: செம்பொன்பள்ளியார் ஞானவடிவினர் ஆதலின் நொய்யராய் , சீர்மை உடையவராய் , வேதநெறியைக் காட்டும் உண்மை வடிவினராய் , பொய்யிலியாய் , உடல் என்னும் ஓட்டாஞ் சில்லியிலே நெய்யில் தோய்த்த திரியாகவும் நெஞ்சில் ஒளி தருகின்ற விளக்காகவும் உள்ள செந்நிறத்தவராவர் .

03 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கல்லார் மதிற்கா ழியுண்ஞான சம்பந்தன்
கொல்லார் மழுவேந் திகுரங் கணின்முட்டம்
சொல்லார் தமிழ்மா லைசெவிக் கினிதாக
வல்லார்க் கெளிதாம் பிறவா வகைவீடே.
 
             - திருஞானசம்பந்தர் (1-31-11)

 

பொருள்: கருங்கல்லால் இயன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், கையில் கொல்லனது தொழில் நிறைந்த மழுவாயுதம் ஏந்திய குரங்கணில் முட்டத்து இறைவன்மீது பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு எளிதாகும்.

01 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குழையணி காதி னானுக்
கன்பராங் குணத்தின் மிக்கார்
பிழைபடின் அன்றிக் கொல்லார்
பிழைத்ததுண் டென்றுட் கொண்டு
மழைமத யானை சேனை
வரவினை மாற்றி மற்ற
உழைவயப் புரவி மேல்நின்
றிழிந்தனன் உலக மன்னன்.
 
                       - எரிபத்தநாயனார் புராணம் (37)

 

பொருள்: குழையை அணிந்த செவியினை யுடைய சிவபெருமானுக்கு அடியவர் ஆகும் குணத்தால் மிக்க இவர், இவ்யானை பிழை செய்து இருந்தாலன்றிக் கொல்ல மாட்டார்; இஃது அவருக்குத் தீங்கு செய்தது உறுதி என்று தம் உள்ளத்தில் கருதிக் கொண்டு, மழை போலும் மதத்தைச் சொரிகின்ற யானையோடு கூடிய சேனைகளின் வரவினைத் தடுத்து, தாம் ஏறி வந்த வலிமை பொருந்திய குதிரையினின்றும் உலகை ஆளும் அரசராய புகழ்ச் சோழர் இறங்கினார்.