26 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
 
                   - கருவூர்த்தேவர் (9-13-1)

 

 பொருள்:முன்னொரு காலத்தில் திருமால் கூட அறிய முடியாத ஒருவனாய் சத்தி, சிவம் ஆகிய இருபொருள்களாய் இருக்கின் றவனே! முக்கண்ணனே! நான்கு பெரிய நீண்ட தோள்களை உடைய கரும்பே! தேனே! அமுதமே! கங்கைகொண்ட சோளேச்சரம் என்ற திருக்கோயிலில் உகந்தருளியிருப்பவனே! அன்ன வடிவு எடுத்துப் பிரமன் வானத்தில் பறந்து உன் உச்சியைத் தேடுமாறு அவ்வளவு பெரியவனாகிய நீ சிறியனாகிய அடியேனை அடிமை கொள்ள விரும்பி அடியேனுடைய உள்ளத்தில் புகுந்த எளிவந்த தன்மையை அடியேன் ஒருநாளும் மறக்கமாட்டேன்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...