30 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர வறநெறி மறையொடும் அருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
திணிபொழி றருமண மதுநுகர் அறுபத முரல்திரு மிழலையே.
 
             - திருஞானசம்பந்தர் (1-20-5)

 

பொருள்: கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து தம் திருவடி இணைகளைச் சனகர் சனந்தனர் ஆகிய இருவர் ஒருபுறமும், சனாதனர் சனற்குமாரர் ஆகிய இருவர் மறுபுறமும் பணிய அவர்கட்கு அறநெறியை மறையோடும்  அருளிச்செய்த சிவபிரான் உறையும் இடம், ஒளி பொருந்திய மணிகள் ஒப்பில்லாத மரகதம் ஆகியவற்றை அடித்துவரும் ஆற்று நீர் நிலமெல்லாம் நிறைந்து வளங்களால் அணி செய்யப் பெறுவதும் செறிந்த பொழில்கள் தரும் மணத்தை நுகரும் வண்டுகள் முரல்வதுமான திருவீழிமிழலையாகும்.

29 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.
 
               - மெய்ப்பொருள் நாயனார் புராணம் (1)

 

பொருள்:  சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மையாராகிய சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.

26 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.

                - காரைகாலம்மையார் (11-4-23)


பிறையும், கங்கையும், சீரும் அரவமும் சூடிய நம் சிவபிரான் எமக்கு இறங்க வில்லை என்றாலும், கண்டத்தில் நஞ்சை நிறுத்திய அவருக்கு ஆட்பட்டுவிட்டோம் என்று எது
நடந்தாலும் எம் உள்ளம் இருக்கும்.
   

25 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.
 
                - திருமூலர் (10-1-17)

 

பொருள்: கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற சிவன், யார் எதனை எண்ணினாலும்  அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுவதில்லை . நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.

24 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டுகொண் டேனே.
 
                - (9-5-4)

 

 பொருள்: தன் திருவடிநிழலின் கீழ் அடியேனையும் தடுத்து ஆட்கொண்ட பிறைவிளங்குகின்ற முடியை உடையவனாய், தானே உகந்து என்னிடத்தில்  மூன்று ஆதாரங்களாகிய மூன்று தாமரைகளிலும் உதித்து எழும் சிறந்த சுடராய், அருளாகிய ஒளிபொருந்திய கடலின் நீர்ப்பெருக்காய், திருவீழிமிழலையுள் விளங்குகின்ற வெண்மையான பளிங்குபோன்ற சிவபெருமானுடைய பொன்போன்ற திருவடிக்கண் தொண்டு செய்தலை மேற்கொண்ட அடியேன் அத்திருவடிகள் அடியேன் உள்ளத்தை விடுத்து நீங்கவிடுவேனோ?

22 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச்
சென்றுகுன்றி
விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம்
முழுதுங்கம்பித்
தழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண்
டருளிஎன்னைக்
கழுமணி யேஇன்னுங் காட்டுகண் டாய்நின்
புலன்கழலே.
 
            - மாணிக்கவாசகர் (8-7-27)

 

பொருள்: உடல் முழுதும் நடுங்கப் பெற்று, அழுகின்ற அடியார் நடுவே, என்னைப் பொருத்தி வைத்து அடிமை கொண் டருளி, தூய்மை செய்த மாணிக்கமே! செழுமையாகிய முத்துப் போன்ற அழகிய பல்லினை உடைய மாதரது வலையில் போய் மயங்கி விழுகின்ற அடியேனை விட்டு விடுவாயோ? இனியும் முன்போல உனது ஞானமாகிய திருவடியை அடியேனுக்குக் காட்டுவாயாக.

19 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மட்டார்மலர்க் கொன்றையும்
வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி
ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
 
           - சுந்தரர் (7-13-6)

 

பொருள்: தேன் நிறைந்த மலர்களை யுடையகொன்றை மரம் , வன்னி மரம் இவைகளை முரித்து , அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் , வாத்திய  முழக்கமும் , ஆடலும் , பாடலும் நீங்காது கொண்டு விளங்குகின்ற திருத் துறையூரில் எழுந்தருளியுள்ளவனே  , உன்பால் அடியேன் தவ நெறியையே தவிர வேறொன்றையும் வேண்டேன் கொள்ளேன் .

18 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எத்தீ புகினு மெமக்கொரு தீதிலை
தெத்தே எனமுரன் றெம்மு ளுழிதர்வர்
முத்தீ யனையதொர் மூவிலை வேல்பிடித்
தத்தீ நிறத்தா ரரநெறி யாரே.
 
            - திருநாவுக்கரசர் (4-17-1)

 

பொருள்: தீயின் நிறத்தவராகிய அரநெறிப் பெருமானார் முத்தீக்களைப் போன்று , மூன்று இலைவடிவாக அமைந்த வேலினை ஏந்தித் தெத்தே என்ற பண் ஒன்றினை நுணுகிப் பாடிக் கொண்டு எம் உள்ளத்தில் கூத்து நிகழ்த்துகின்றார் . ஆதலின் எந்தத் தீயினிடைப் புக நேரினும் ,  தீங்கு யாதும் எமக்கு நிகழாது .

17 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு திகிரியை யரிபெற வருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடன்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே.
 
                 - திருஞானசம்பந்தர் (1-20-2)

 

பொருள்: மண்ணுலகையும்  விண்ணுலகையும் நலிவுறுத்துகின்ற வலிமை பொருந்திய சலந்தராசுரனின் மலைபோன்ற தலையை வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கராயுதத்தைத் திருமால் வேண்ட அவர்க்கு அருளியவனும், புகழால் மிக்க கங்கை நதி மதி ஆகியன பொதிந்த சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் தலம், பெரிய அலைகளை உடைய கடற்கரை, மணலால் அழகுபெறும் மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலையாகும்.

16 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கணவனார் தம்மை நோக்கிக்
கறியமு தான காட்டி
இணையிலா தவரை ஈண்ட
அமுதுசெய் விப்போ மென்ன
உணர்வினால் உணர ஒண்ணா
ஒருவரை உணர்த்த வேண்டி
அணையமுன் சென்று நின்றங்
கவர்துயில் அகற்ற லுற்றார்.

              - இளையான்குடிமாற நாயனார் புராணம் (23)

 

பொருள்: சமைத்து முடித்த அம்மையார், தம் கணவரைப் பார்த்து, அக்கீரை அமுதுகளைக் காட்டி, ஒப்பில்லாத அவ்வடியவரை முறையாகத் திருவமுது செய்விப்போம் என்று கூற, உயிர்கள் தம் அறிவால் உணர ஒண்ணாத சிவபெருமானாகிய அவ் வடியவர் அமுது செய்ய வேண்டி, அவரை அணுகச் சென்று அவர் தம் துயிலை அகற்ற முற்பட்டனர் .

15 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

             -காரைகாலம்மையார் (11-4-20)

பொருள்: ஈசன் தன்னாலே அறிவான், நமக்கு அறிவிப்பவனும் நம் அறிவாய் நிற்பவனும் அவனே . நாம் அறிகின்ற விரி சுடர், கதிரும், மதியும், தீயும் மெய்பொருளை இருபவனும் அவனே. 

12 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே.
 
               - திருமூலர் (10-1-16)

 

பொருள்: இறப்பையும், பிறப்பையும் முன்னே  உயிர்களுக்கு அமைத்து வைத்த தலைவன், நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராய்ந்தால் , அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும் ஈசன்  திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.

10 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
மருந்தை என் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற் கரிதுமாய் அடியார்க்
கெளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
குறுகவல் வினைகுறு காவே.
 
                  - (9-5-3)

 

பொருள்: ஞாயிற்றின் ஒளியை வழிபடுதலை தவிர்த்து,  அதன் உட்பொருளாய் என்னால் வழிபடப்பட்ட சிவப்பொரு ளாகிய அமுதமாய், என் ஒப்பற்ற மாணிக்கமாய், முற்காலத்தில் தம் முயற்சியால் அறிய முற்பட்ட  பிரமனுக்கும் திருமாலுக்கும் அறிதற்கு அரியனாய், அடியவர்களுக்கு எளியனாய் இருக்கும் பெரியபவளமலை போல்வானாய், மலரும் பூக்களிலிருந்து வெளிப்படும் தேன் பரந்து பெருக்கெடுக்கும் சோலைகளால் சூழப்பட்ட திருவீழிமிழலை என்ற திருத்தலத்தை ஆளும் கார்மேகம் போன்ற கரியகழுத்தை உடைய எம் மேம்பட்ட குருமணியை வழிபட்டால்  கொடிய வினைகளின் தாக்குதல்கள் நம்மை அணுகாது. 

09 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு
நினைப்பிரிந்து
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன்
கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி
வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக்
கொழுமணியே.
 
             - மாணிக்கவாசகர் (8-6-26)

 

பொருள்: மிக பெரிய கங்கை நீரையுடைய பள்ளத்துள், எதிர்த்து நிற்றலையுடைய சிறிய தோணியின், தோற்றம் போல வெண்மை நிறமும்  பொருந்திய பிறைச்சந்திரன் தவழ்கின்ற சடையினையுடைய, பரமாகாயத்திலுள்ள, செழுமை யாகிய மாணிக்கமே! மிகுந்த நீரானது வற்றிப்போக, சிறிய மீன்கள் வாடினாற்போல உன்னை விட்டு நீங்கிய என்னை விட்டு விடுவாயோ?

08 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மத்தம்மத யானையின்
வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப்
பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
 
           - சுந்தரர (7-13-2)

 

பொருள்:  மதயானைகளின் கொம்புகளைத் தள்ளிக்கொண்டுவந்து அவற்றில் உள்ள முத்துக்களைக் கரையில் எறிவதாகிய  பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ள ,  பக்தர்கள்  பலகாலும் வந்து ஏத்தி வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே , உன்பால் அடியேன் தவநெறியையே  தவிர வேறொன்றையும் வேண்டிகொள்ளேன் .

05 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தா ரிலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்து மாயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
 
           - திருநாவுக்கரசர் (4-16-10)

 

பொருள்: கழுத்துக் கறுத்து நீலகண்டர், தம்  கால் விரலை ஊன்றி இராவணனுடைய பத்துத் தலைகளையும் செயலற்றவை ஆக்கினார் . ஐம்புல நுகர்ச்சியையும் துறந்தவர் . பார்வதியைப் பாகமாகக் கொண்டவர் எம் புகலூர்ப் புரிசடையாரே. 

04 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை கழுமல முறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி யுடையவர் விதியுடை யவர்களே.
 
               - திருஞானசம்பந்தர் (1-19-11)

 

பொருள்: நிறைய  நூல்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை நன்கு உணர்ந்தவனும், மிக்க புகழாளனும் ஆகிய ஞானசம்பந்தன், நீர்த்துளிகளோடு மடங்கும் அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின் கரையில் விளங்கும் கழுமலம் இறைவனது உறைவிடம் என மிகவும் புகழ் பரவிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடிய இப்பத்துப் பாடல்களையும் ஓதி மனம் பொருந்த வைக்கும் அன்பர்கள், நிறைந்த ஞானமும் நல்விதியும்  உடையவர்களே .

03 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்
இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்
தமக்கு நாம்இன் னடிசில் தகவுற
அமைக்கு மாறெங்ங னேஅணங் கேயென.

                - இளையான்குடிமாற நாயனார் புராணம் (11)

 

பொருள்: நம் வீட்டில் நமக்கு முன்னமேயே உணவின்றி வறுமையாக இருப்பினும், மாதை ஒரு கூற்றில் உடைய சிவபெருமானுக்குத் தொண்ட ராகிய இவ்வடியவருக்கு நாம் ஊட்டுதற்குரிய இனிய திருவமுதைத் அமைக்கும் வகை எவ்வாறு? என்று வினவவினார்.

02 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

         - காரைகாலம்மையார் (11-4-16)

பொருள்: எம்பெருமான் அருள் பெற்ற நமக்கு, இனி ஓர் இடர் இல்லை, இனிமேல் மீண்டும் ஒரு வினைக்கடலை உருவாக்கும் பிறவியென்னும் பிறப்பு நமக்கு கிடையாது.    

01 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.
 
               - திருமூலர் (10-1-13)

 

பொருள்: நாம் காயம், கத்தூரி என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு மற்ற  தேவர்களின்  அருள் ஈடாகாது;