30 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிப ரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
                - மாணிக்கவாசகர் (8-9-3)
பொருள்: சுந்தர  திருநீற்றை அணிந்து கொண்டு தரையை மெழுகுதல் செய்து மாற்றுயர்ந்த பொற்பொடிகளைச் சிதறி, நவமணி களைப் பரப்பி இந்திரன் உலகிலுள்ள கற்பக மரத்தின் தோகைகளை நட்டு எவ்விடத்தும் அழகிய தீபங்கள் வைத்துக்கொடிகளை ஏற்றுங்கள். விண்ணவர்க்குத் தலைவனும் பிரமனுக்கு முதல்வனும் சக்கரத்தையுடைய திருமாலுக்கு நாயகனும் அழகிய முருகனுக்குத் தந்தையும் எம் நிலையில் உள்ளாரையும் ஆட்கொள்ளுகின்ற உமா தேவியின் கணவனுமாகிய இறைவனுக்குப் பொருந்திய பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

29 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே.
 
                 - சுந்தரர் (7-20-1)

 

பொருள்: திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே , வாள்போலுங் கண்களை யுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் . அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன் , எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன் ; வேறு யாரை வேண்டுவேன் ! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

28 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தடக்கையா லெடுத்து வைத்துத் தடவரை குலுங்க வார்த்துக்
கிடக்கையா லிடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான் முருகமர் கோதை பாகத்
தடக்கினா ரென்னையாளு மதிகைவீ ரட்ட னாரே.
 
                                 - திருநாவுக்கரசர் (4-25-10)

 

பொருள்:   கயிலை மலை நடுங்குமாறு ஆரவாரித்து நீண்ட கைகளால் பெயர்க்க முயன்ற இராவணன் அதன் கீழகப்பட்டுத் துன்பங்கள் மிகுந்து விளக்கமானமண மணிமுடிகள் நசுங்கி அவலமுறுமாறு தம் திருவடிப் பெருவிரலைச் சற்றே வளைத்து ஊன்றினார் . அவரே நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை இடப்பாகமாக அடக்கியவரும் என்னை அடியவனாக்கிக் கொண்ட அதிகை வீரட்டனார் ஆவர் 

25 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.
 
                  - திருஞானசம்பந்தர் (1-27-11)

 

பொருள்: மாடவீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாய், எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன், பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவர்மீது பாடிய பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக.

23 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்துடன் ஏற
அண்டர் தம்பிரான் திருஅரைக் கோவண மதுவும்
கொண்ட அன்பினிற் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்துநேர் நின்றதத் துலைதான்.
 
               - அமர்நீதி நாயனார் புராணம் (44)

 

பொருள்: மிகுந்த அன்பினால் மற்று அவர்கள் மகிழ்ந்து உடனே துலைத்தட்டில் ஏறினார்களாக, அண்டங்கள் அனைத்தையும் தமக்கு உடைமையாகக் கொண்டிருக்கும் பெருமானாகிய இறைவனது திருவரையில் சாத்தும் கோவணமும், அவரிடத்துக் கொண்ட அன்பி னில் குறைபடாத அடியவர் தம் தொண்டும் ஒப்புடையன ஆதலால் அத்துலைதானும் ஒத்து நின்றது

22 April 2014

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
 
                      - ஐயடிகள்  கடவர் கோன் நாயனார் (11-5-15)

 

 

பொருள்: மை மையெழுதிய கண்ணார், நிலைமை வெறுத்து   கூன் விழுந்து   சுடுகாடு சென்றபின் பலர் இருந்து புலம்பாமுன் பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காடு சென்று தொழுவீர்களாக .

21 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.
 
                  - திருமூலர் (10-3-10)

 

பொருள்: கற்றவர் போற்றுகின்ற பதினெண்மொழிகளும் சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் உணர்த்தற்கு அமைத்த வாயிலே. பல மொழிகளையும் உணர்ந்து, அவற்றில் சொல்லியுள்ள முடிந்த பொருளை உணர்ந்தவரே என அறிக.