10 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொருட்டிரு மறைகள் தந்த
புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார்
அவர்எறி பத்த ராவார்.
 
                   - எறிபத்த நாயனார்  புராணம் (6)

 

பொருள்: அழகிய மறைகளை அருளிச் செய்த புனிதர் சிவபெருமானை, இனிதாக அக்கோயிலில், உலகியல் உணர்விற்கு ஏதுவாகிய மயக்க நெறிகளை நீக்குமாற்றால் வழிபாடு செய்கின்ற தொழிலை உடையவராய், கருநிறமுடைய நஞ்சு சேர்ந் திருக்கும் திருமிடற்றையுடைய முதல்வராகிய சிவபெருமானுக்கு உரிமையாகிய, அடிமை பூண்ட அன்பர்க்குத் தாம் கொண்ட அருள் நிறைந்த பெரிய திருத்தொண்டைச் செய்து வருகின்ற அடியவர் ஒருவர்; அவர் எறிபத்த நாயனார் என்பவராவர். 

09 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.
 
                   - ஐயடிகள் காடவர் கோன் நாயனார் (11-5-24)

 

பொருள்: இறவாமல் வாழ்வதற்கு ஏதுவான மருந்து சுற்றத்தார் கையைப் பிடித்துக் காட்ட வேண்டிய நிலை வருவதற்கு முன் திருமயானம் சேர். 

06 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.
 
                    - திருமூலர்  (10-4-3)

 

பொருள்: பதி, பசு, பாசம் என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ளது  போல் , ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம்.  பாசங்கள் பசுவைப் பற்றுமேயன்றிப் பதியினிடத்து அணுகமாட்டா. பசு, பதியினிடத்து அணுகும்; அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றிநில்லாது.

05 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
பெரியவர்க் ககலிரு விசும்பின்
முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல்
முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே.
 
                - கருவூர் தேவர் (9-10-11)

 

பொருள்: கித்தி என்னும் விளையாட்டை நிகழ்த்துகின்ற பெண்கள் தெருவில் ஆரவாரம் செய்யும் கீழ்க்கோட்டூரில் ஊமத்த மலரைச் சூடியவனாய், மணியம்பலத்துள் நின்று ஆடும் வலிய வனாகிய சிவபெருமானைப் பற்றி, வேதங்களை ஓதும் இறைப் பித்துடைய அடியேன் பாடிய மணிகள் போன்ற நெடிய பாமாலை பெரியோர்களுக்கு அகன்ற பெரிய சிவலோகத்தில் முத்தியை வழங்கும் என்று உலகத்தவர் இதனை உயர்த்திக் கூறுவாராயின் திருமகள் அவர்களை முகம் மலர்ந்து எதிர்கொள்வாள்

04 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்
காடக மாமலை அன்ன கோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
 
             - மாணிக்கவாசகர் (8-9-7)

 

பொருள்: கைவளையும் தோள்வளையும்  ஒலிக்க, அடியார் கூட்டம் புறப்பட்டு அரகரவென்று முழங்க, நாட்டில் உள்ளார் நம் இயல்பினை நோக்கி நம்மை இகழ்ந்து சிரிக்க, நாமும் அவர்கள் அறியாமையை எண்ணி நகை செய்ய, கால் அணி மென்மையான பாதங்களில் ஒலிக்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவனாகிய எங்களுக்கு மிக மேலானவனும் பெரிய பொன் மலையை ஒத்த தலைவனுமாகிய இறைவனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

03 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொல்லை வளம்புறவிற் றிருக்
கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவுந் திரு
நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்
தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர்
வானுல காள்பவரே.
 
              - சுந்தரர் (7-20-10)

 

பொருள்: கொல்லை வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் இருக்கின்ற பெருமானை , நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான் , தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி , மனம் பொருந்திப் பாடிய இப் பத்துப் பாடல்களையும் பாடவல்லவர் , இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி , அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள் .

02 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

அஞ்சினா லியற்றப் பட்ட வாக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினா லடர்க்கப் பட்டிங் குழிதரு மாத னேனை
அஞ்சினா லுய்க்கும் வண்ணங் காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி யதிகைவீ ரட்ட னீரே.
 
                               - திருநாவுக்கரசர் (4-26-5)

 

 பொருள்: பஞ்சகவ்வியத்தால் அபிடேகிக்கப்படுதலால் விளங்குகின்ற மேனியை  உடைய அதிகை வீரட்டப் பெருமானே ! ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்ட  இவ்வுடலைப் பெற்று அதன்கண் வாழும் ஐம்பொறிகளால் வருத்தப்பட்டு இவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக , அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன்