09 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

            - மாணிக்கவாசகர் (8-7-1)

பொருள்: பெண்ணே !! முதலும் முடிவும் இல்லாத அருட் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!

08 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை
கல்லா தேபல கற்றேன்
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லே னல்லேன் பொன்னடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய
நல்லே னல்லேன் நானுனக் கல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.
 
             - சுந்தரர் (7-15-4)

 

பொருள்: திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் உனது புகழைக் கல்லாதேனல்லேன்,  அடிமைச் செயல்களைப் பிறரிடம் கல்லாமலே நீ உள்நின்று உணர்த்த அவை எல்லா வற்றையும் கற்றேன் ; அங்ஙனங் கற்றதற்குத்தக நினது வழியில் நில்லாதவனல்லேன் ; அங்ஙனம் நின்றாரது வரலாறுகளை நினைய மாட்டாதவனல்லேன் ; உனது பொன் போலும் திருவடிகளைப் பரவு மிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன் ; உனக்கு அல்லது வேறு ஒருவற்கு நான் உறவினன் அல்லேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

05 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏறேற்ற மாவேறி யெண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தில்
நீறேற்ற மேனியனாய் நீள்சடைமே னீர்ததும்ப
ஆறேற்ற வந்தணனை நான்கண்டதாரூரே.
 
              - திருநாவுக்கரசர் (4-19-4)

 

பொருள்: மேம்பட்டதான காளையை வாகனமாக இவர்ந்து எண்வகை அடியவர் கூட்டங்களும் தன்னைப் பின் தொடர வருவானாய், பகைவராய் எதிர்த்தாருடைய வலிய மதில்களைக் கோபித்தவனாய், சுடுகாட்டுச் சாம்பல் பூசிய மேனியனாய், நீண்ட சடைமுடியின் மீது நீர் நிறைந்து அலை எறியுமாறு கங்கையை ஏற்ற சடையனாய் உள்ள பெருமானை நான் தரிசித்த இடம் ஆரூராகும்.

04 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கதமிகு கருவுரு வொடுவுகி ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக ழெயிறத னுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய வெழிலரி வழிபட வருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுர நினைபவர் நிலவுவர் படியிலே.
 
          - திருஞானசம்பந்தர் (1-21-7)

 

பொருள்: வராக அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே மேருமலையை  கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்

03 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்.
 
                - மெய்ப்பொருள் நாயனார் புராணம் (15)

 

 பொருள்: தன் கையில் வைத்திருந்த வஞ்சனையாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள்ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி அந்நாயனார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.

02 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மறுவடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.

           - காரைகாலம்மையார் (11-4-36)

பொருள்: கங்கைவார் சடைமேல் நாகத்தை வைத்தீர். அதற்கு அஞ்சி பிள்ளை மதி வளருமோ!  தேய்ந்து அல்லவா உழலும். பகையான பம்பையும் மதியையும் ஒன்றாக வைத்ததை ஏலனம் செய்வது போல் உயர்த்தி கூறுவது. 

01 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே.
 
         - திருமூலர் (10-1-26)

 

 பொருள்: வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம்போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை `வருக` என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ` என்று சிலர் ஐயுறுவர். `எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே. நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுவதற்கே.