09 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

            - மாணிக்கவாசகர் (8-7-1)

பொருள்: பெண்ணே !! முதலும் முடிவும் இல்லாத அருட் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...