25 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

              -திருமந்திரம்  (10-3-1,1)


பொருள்:  சோதிட நூலில் சொல்லப்பட்ட வரிசையான பன்னிரண்டு இராசிகளையும் யாடும் (மேடமும்), அரிமாவும் (சிங்கமும்) முதலாய் நிற்பத் தொடங்கி முடியும் வகைகளில் முறையானே எண்ணி யோக உறுப்புக்கள் எட்டனையும் முன்பு உணர்த்தியருளிய நந்திபெருமான், அவைகளில் முறையான விலக்கு விதிகளை அருளிச் செய்தார்.

24 May 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


விசும்பினுக் கேணி நெறியன்ன
சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே.

             -திருக்கோவையார்  (8-14,2) 


பொருள்: விசும்பிற் கிட்டதோ ரேணிநெறி போலுஞ் சிறுநெறிமேல்; மழை யிடையறாது நிற்றலான் இடையிடையுண்டாகிய அசும்பின்கட் சென்று பொருந்தி யேறுமிடத்து இட்டிமையால் அளை நுழைந்தாற் போன்றிருக்கும்; அதுவேயுமன்றி, எம் வாழ்பதி வழுக்கினான் மெய்யே சிந்தைக்குமேறுதற்கரிது; அதனாலாண்டுவரத்தகாது

22 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கரையுங் கடலும் மலையுங்
காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க் கெல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

              -சுந்தரர்  (7-73-1)


பொருள்:  நிலம் , கடல் , மலை முதலாய எவ் விடத்திலும் , காலை , மாலை முதலிய எப்பொழுதிலும் எம் சொல்லிற் பொருந்தி வருபவனும் , ஒப்பற்றவனும் , உருத்திர லோகத்தை உடைய வனும் , மலையின் இளமையான மகளுக்குக் கணவனும் , தேவர் , அசுரர் முதலிய யாவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் , இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? என்று கேட்டறிமின் .

21 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.

                   -திருநாவுக்கரசர்  (4-81-2)


பொருள்: கூற்றுவனை அடியவன் பொருட்டுக் காலால் ஒறுத்தவனாய்த் தில்லை நகரில் திருச்சிற்றம்பலத்தில் என்று வந்தாய் என்னும் குறிப்புத் தோன்றும்படி கவித்த திருக்கையுடன் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைச் சென்று தொழுமின்கள் . அக்கூத்தினையே மனம் பொருந்தி நினைத்தால் உங்களக்கு குறைபாடு இனி இராது .

18 May 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமா னுரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.

             -திருஞானசம்பந்தர்  (1-80-6)


பொருள்: புதிய  மாந்தளிர் போன்ற மேனியளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, திருமகள் விளங்கும் தில்லை மாநகருள் சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளியவரும், யானைத்தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும் நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமாகிய எம் பெருமான் திருவடிகளை அல்லது என் உள்ளம் வேறொன்றையுமே விரும்பாது.

17 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆண்டகைமைத் தொழிலின்கண்
அடலரியே றெனவுள்ளார்
காண்டகைய பெருவனப்பிற்
கலிப்பகையார் எனும்பெயரார்
பூண்டகொடைப் புகழனார்
பாற்பொருவின் மகட்கொள்ள
வேண்டியெழுங் காதலினால்
மேலோரைச் செலவிட்டார்.

             -திருநாவுக்கரசர் புராணம்  (23)


பொருள்: வீரம் மிக்க போர்த் தொழிலில் வலிய ஆண் சிங்கத்தைப் போன்றவரும், காண்டற்கினிய தக்க பேரழகுடையவரும், ஆன கலிப்பகையார், கொடைத்தன்மை பூண்ட புகழனாரிடம் அவரு டைய ஒப்பில்லாத மகளாரைத் தாம் மணமகனாராகக் கொள்ளும் பொருட்டு விரும்பி எழும் காதலால் உரிய பெரியோர்களை அனுப்பினார்.

16 May 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. 

              -திருமந்திரம்  (10-2-25,6)


பொருள்: எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானை உணர்த் தும் நூலறிவினால் வருகின்ற பெருமையை உடைய கலைஞன், காலக் கழிவின்கண் பிறவிக் கடலைக் கடந்து சிவபெருமான் திருவடியை அடைவான். அந்நூலறிவைத் தன தாக்கிக் கொள்ளும் அனுபூதிமான், அப்பொழுதே சிவனைப் பெற்று, உலகம் உள்ளளவும் வாழ்வான். ஆகையால் சிவமே பெறும் திரு நெறியொழுக்கம் வல்ல சிவானுபூதிச் செல்வரோடேயான் சேர்ந்திருக்கின்றேன்

15 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அளிநீ டளகத்தின் அட்டிய
தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு
கோலந் திருநுதலே.

            -திருக்கோவையார்  (8-13,7)


பொருள்: நீ அளிகள் விடாது தங்கு மளகத்தின்கண் இட்டதாதும்; அணிந்தவணிகளும்; ஒளியையுடைய நீண்ட சுரிகுழல் இடத்துச் சுற்றிய நல்லமாலையும் இவையெல்லாம்; நின்னோடொருதன்மையளாகிய நின்றோழி யாராய்ந்து செய்யுங் கோலமே; திருநுதலாய்; யான்பிறிதோர் கோலஞ் செய்தேனென்று கலங்க வேண்டா;  தெளிவாயாக

14 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்த மிடம்வலம் புரத்தினை
அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே

              - சுந்தரர் (7-72-11)


பொருள்: கரிய கடலின்கண் வருகின்ற மரக்கலங்கள் பலவற்றையும் பேணுதலுடைய உயர் குடிப் பிறப்பினரது இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலத்தினை அரிய குலத்தில் தோன்றிய , அரிய தமிழ்ப் பாடலில் வல்ல , வன்றொண்டனாகிய நம்பியாரூரனது சொல்லால் , பெரிய குழாமாகிய அடியவரோடும் கூடிநின்று துதித்தல் , பெருமையைத் தருவதாம் .

11 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் தடவரையை
வரைக்கைக ளாலெடுத் தார்ப்ப மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்து மணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பதென்னே.

                       -திருநாவுக்கரசர்  (4-80-10)


பொருள்: இராவணன்  தன் தோள் வலிமையை மிகுதியாகக் கருதிப் பெரிய கயிலைமலையைத் தன் மலைபோன்ற கைகளால் எடுத்து ஆரவாரம் செய்ய அதனைக் கண்டு பார்வதி கணவனாகிய  தில்லைச் சிற்றம்பலவன் சிரித்து இராவணனுடைய கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தினையும் நெருக்கி மிதித்த திருக்கால் விரலைக் கண்ட கண்களால் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ !

10 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

                 -திருஞானசம்பந்தர்  (1-80-1)


பொருள்: வேதம்  நூல்களைக் கற்று அவற்றின்கண் ஓதிய நெறியிலே நின்று, வேள்விகளைச் செய்து, இவ்வுலகில் வறுமையை வாராமல் ஒழிக்கும் அந்தணர்கள் வாழும் தில்லையிலுள்ள சிற்றம் பலத்தில் எழுந்தருளியவனும் இளமையான வெள்ளிய பிறை மதியைச் சூடியவனும் ஆகிய முதல்வனது திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் பற்றா.

07 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திலகவதி யார்பிறந்து
சிலமுறையாண் டகன்றதற்பின்
அலகில்கலைத் துறைதழைப்ப
அருந்தவத்தோர் நெறிவாழ
உலகில்வரும் இருள்நீக்கி
ஒளிவிளங்கு கதிர்போல்பின்
மலருமருள் நீக்கியார்
வந்தவதா ரஞ்செய்தார்.

            -திருநாவுக்கரசர் புராணம்  (18)


பொருள்: திலகவதியார் பிறந்தபின், முறையாகச் சில ஆண்டுகள் கழிந்த பின்பு, அளவில்லாத கலைகளின் துறைகள் தழைக்கவும், அரியதவத்தவர் நெறி வாழவும், உலகில் புற இருளை நீக்கி வருகின்ற ஒளியுடைய ஞாயிற்றைப் போலப் பின்னர் அக இருளை நீக்கி மலர்விக்கும் `மருள்நீக்கியார்` தோன்றி அருளினார்.

04 May 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 

                   -திருமூலர்  (10-2-25,1)


பொருள்: கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்,  கற்றவரே வல்லவராவர் என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.

03 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.

              -திருக்கோவையார்  (8-13,1)


பொருள்: ஒரு கரிய பொழில்; புறமெங்குங் கதிரோன் றான்சென்று நுழையாதவிருளாய்; நடுவண் வளவிய வான் மீன்போலத் தேன்கள் நுழையும் நாகப்பூ மலர்ந்து; திகழும் பளிங்கால்;  திங்கட்கடவுள் வானிடத்து வாழ்வையொழிந்து கானிடத்து வாழ்தலைப் பெற்றாற்போலத் தனதெழிலைப் புலப்படுத்தும்.

02 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நரிபுரி காடரங் காநட மாடுவர்
வரிபுரி பாடநின் றாடும்எம் மானிடம்
புரிசுரி வரிகுழல் அரிவைஒர் பான்மகிழ்ந்
தெரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே

              -சுந்தரர்  (7-72-7)


பொருள்: நரிகள் விரும்புகின்ற காடே அரங்கமாக நடனம் ஆடுபவனும் , யாழ் இசையைப்பாட நின்று ஆடுகின்ற எம்பெரு மானும் , பின்னிய , சுரிந்த , கட்டிய கூந்தலையுடைய மங்கையை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்து , எரிகின்ற நெருப்பில் ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே