28 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 


பைந்நா ணரவன் படுகடல்
வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
லாட்கென்க ணின்னருளே.

               - திருக்கோவையார் (8-10,9)


பொருள்: பையையுடைய அரவாகிய நாணையுடையான்; ஒலிக்குங் கடலிடத்துப்பட்ட நஞ்சம் அமுதாகும் மை நாணு நீலமணி போலுங் கண்டத்தையுடையான்; அவன் மன்னும் புலியூரைப் பொருந்திய பொன் போல்வாள்; பெருமையையுடைய இம்முதியகடற்கண் யானழுந்தினேனாயினும் தான் என்னின் முற்பட்டழுந்தும்; இந்நாள் இது தேனையுடைய நெடிய குழலாட்கு என் கணுண்டாகிய இனிய அருள் இப்பொழுதித்தன்மைத்தாயிராநின்றது

27 February 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


யாழைப்பழித் தன்னமொழி
மங்கைஒரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்
குண்ணும்மறைக் காடே

               - சுந்தரர் (7-71,1)


பொருள்: யாழின் இசையைப் பழித்த அத்தன்மையையுடைய சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும் , பேழை போலும் சடைமுடியில் பிறையைச் சூடினவனும் ஆகிய இறைவனது இடத்தை அறிந்து வழிபடவேண்டின் , அது , எளிய குரங்குகள் தாழம் புதரூடே புகுந்து , சிறிய புழைகளில் நுழைந்து , வாழைப்பழத்தைப் பறித்து உண்கின்ற திருமறைக்காடேயாகும் .

26 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன வஞ்சு பூத மவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ கிளரொளிச் சடையி னீரே.

                          - திருநாவுக்கரசர் (4-76-10) 


பொருள்: கூற்றுவன் வந்து நெருங்கும்போது உம்மை அறிவதற்கு உடன்படாது என்னைவருத்தும் ஐம்பொறிகளும் என்னை வருத்துவதனைப் பொறுக்க இயலாதேனாய் உயிருக்குத் துணையாக உதவாத இந்த மனித வாழ்விலே பல குற்றங்களும் நிகழ் கின்றமையின் இதனை இகழ்ந்து இப்பிறவிப் பிணியை அடியோடு அழித்தொழிக்க உம் அருளை வேண்டுகின்றேன் செந்நிற ஒளி வீசும் சடையை உடைய பெருமானே

23 February 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மடைச்சுரமறிவன வாளையுங்கயலு மருவியவயறனில் வருபுனற்காழிச்
சடைச்சுரத்துறைவதோர் பிறையுடையண்ணல் சரிதைகள்பரவிநின் றுருகுசம்பந்தன்
புடைச்சுரத்தருவரைப் பூக்கமழ்சாரற் புணர்மடநடையவர் புடையிடையார்ந்த
இடைச்சுரமேத்திய விசையொடுபாட லிவைசொலவல்லவர் பிணியிலர்தாமே.

                                 -திருஞானசம்பந்தர்  (1-78,11)


பொருள்: நீர் மடைகளில் துள்ளுவனவாகிய வாளை மீன்களும் கயல் மீன்களும் வயல்களிடத்து வரும் நீர் வளம் மிக்க காழி நகரில், சடைக்காட்டில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளைப் பரவி உருகும் ஞானசம்பந்தன், அருகருகே வெற்றிடங் களை உடைய மலையின் பூக்கமழ் சாரலில் அழகிய மட நடையினை உடைய மகளிர் பல இடங்களில் தங்கி அழகு செய்வதாகிய இடைச்சுரத்தைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர், பிணிகள் இன்றி வாழ்வர்.

22 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பரவ மேன்மேல் எழும்பரிவும்
பழைய பான்மை மிகும்பண்பும்
விரவ மேதக் கவர்தம்பால்
மேவும் பெருமை வெளிப்படுப்பான்
அரவம் மேவுஞ் சடைமுடியார்
அருளாம் என்ன அறிவழிந்து
குரவு மேவும் முதுமறையோன்
கோபம் மேவும் படிகண்டான்.

                  - சண்டேசுவரநாயனார் புராணம் (48) 


பொருள்: பெருமானைப் பரவுதற்கு மேன்மேலும் எழும் விருப்பும், முன்னைப் பிறப்பால் ஒருங்குவாய்ந்த வழிபாடாற்றும் பண்பும் பொருந்த, விசாரசருமர் தம்பால் கொண்ட அன்பின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், பாம்பையணிகின்ற சடை முடியையுடைய சிவபெருமானின் அருளே இது என்னுமாறு, குராமரத்தின் மீது இருந்த முதிய எச்சதத்தனும், இவர் பூசையைக் கண்டு அறிவழிந்து சினம் மிகப் பார்த்தான்.

21 February 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூசையின் கீழது வாமே. 

              - திருமூலர் (10-2-21,1)


பொருள்: தெளிவுபெற்ற ஞானத்தை உடையராய் உள்ளத்தில் அன்புமிகப் பெறுவோர் பின்னர்த் தேவராவர். அவ்வாறு ஓர்ந்துணரவும், தெளியவும் மாட்டாத கீழ்மக்கள் அப்பெருமானை, எலும்பு, தோல், சாம்பல், வெண்டலை முதலியவைகளை உடைய வனாய்ச் சுடுகாட்டில் ஆடுதல், தலையோடு ஏந்தி இரத்தல் முதலிய வைகளையே நோக்கிச் சிறுதெய்வமாகக் கருதி இகழ்வார்களாயின், அச்செயல், கிளி ஒன்று தானே பூனையின் அருகுசென்று அகப்பட்டு நின்றது போல்வதாய்விடும்.

20 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காய்சின வேலன்ன மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே.

           - திருக்கோவையார் (8-10,2) 


பொருள்:  காய்சினத்தையுடைய வேல்போலும் ஒளியியலுங் கண்ணகிய வலையை; மகளிர் கலந்து வீசினபோது அவ்வலைப்படுதலான் உள்ளமாகிய மீனையிழந்த வர்கள்;  பெரிய தென்புலியூர்க்கணுளனாகிய ஈசனுடைய நீற்றையும் எருக்கம்பூவையும் அணிந்து; ஒரு கிழியைக் கையிற்பிடித்து; பாய வல்ல சினத்தையுடைய மாவெனப் பனைமடலைச் சீறூர்க்கணேறுவர், தம்முள்ளம் பெறுதற்கு வேறுபாய மில்லாதவிடத்து.

19 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால [ உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
சாத லும்பிறப் பும்மறுப் பாரே

              - சுந்தரர் (7-70,10)


பொருள்: வெண்டலையோடு பொருந்தும் பிறையையும் , கொன்றைமலர் மாலையையும் , பாம்பினையும் , தேனையுடைய ஊமத்த மலரையும் ஒருங்கு விரவிச் சூடிக்கொண்ட சிறந்த இண்டை மாலையையுடைய , சிவந்த சடைமுடியையுடையவனும் , முதற் கடவுளும் , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவலோக வாணனும் ஆகிய இறைவனை , அவனுக்கு அணுக்கனாய் நிற்கின்ற வன்றொண்டனாகிய , சிங்கடிக்குத் தந்தை , மிக்க அன்போடும் பாடிய இத்தண்ணிய தமிழ்மாலைகளாகிய பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்கள் , இறத்தலையும் பிறத்தலையும் ஒழித்து , எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள் .

09 February 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


எம்பிரா னென்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை
எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரா னென்னி னல்லா லென்செய்கே னேழை யேனே. 

                      -திருநாவுக்கரசர்  (4-76-3) 


பொருள்: எம்பெருமான்! என்று அடியேன் அழைத்த உடனே என் உள்ளத்தில் புகுந்து நின்று எம் பெருமான் செயற்படுத்தச் செயற்பட்டு, என்னைச் செயற்படுத்தும் தலைவனை எனக்குள்ளேயே தேடித் திரிகின்ற, அடியேன் தன்னை இன்னான் என்று கண்டு கொண்ட பிறகு எம் பெருமான் என்னைத் தன்னுள்ளே மறையச் செய்வான் என்றால் எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றலேயன்றி அறிவற்ற அடியேன் வேறு யாது செயற்பாலேன்?

08 February 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய ரழகினையருளுவர் குழகலதறியார்
கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர் நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன்மிளிர்வன கயலிளவாளை செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி
ஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

                      -திருஞானசம்பந்தர்  (1-78-2)


பொருள்: கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய், அழகும் இளமையும் உடையவராய், கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய், நள்ளிருளில் திருநடம்புரிபவராய், கொன்றை மலர்மாலை சூடியவராய், சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளைமீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு ஆண்குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு என்னே 

07 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறையோர் மொழியக் கேட்டஞ்சிச்
சிறுமா ணவகன் செய்தஇது
இறையும் நான்முன் பறிந்திலேன்
இதற்கு முன்பு புகுந்ததனை
நிறையும் பெருமை அந்தணர்காள்
பொறுக்க வேண்டும் நீங்களெனக்
குறைகொண் டிறைஞ்சி இனிப்புகுதில்
குற்றம் எனதே யாம்என்றான்.

                   -சண்டேசுவரநாயனார் புராணம்  (43) 


பொருள்: அவையோர் மொழிந்ததைக் கேட்ட எச்சதத் தனும், அஞ்சிப், `பெருமை மிக்க அவையோர்களே! என் சிறுபையன் செய்த தீங்கினை, ஒருசிறிதும் இதற்கு முன் அறிந்திலேன். இதற்கு முன்பு நடந்த இதனைப் பொறுக்க வேண்டும்` என்று குறை இரந்து வேண்டி, `இனி இச்செயல் நிகழுமாயின் குற்றம் என்னுடைய தேயாம்` என்றான்.

06 February 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே. 

                 - திருமூலர் (10-2-20,6)


பொருள்: சிவபெருமானது அதோமுகம் பெரியதொரு தாமரை மலராய் நிற்கும் முறையினைக் கேண்மின்கள்; சுத்த மாயை யினின்றும் கீழ்நோக்கி வருகின்ற அவனுடைய அளவில்லாத சத்திகள் அதோமுகமாகி நூறிதழ்களை உடையதாய் விரிந்து நிற்க, அம்மலரின் கண்ணே சிவபெருமான் அமர்ந்திருக்கின்றான்.

05 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆவா விருவ ரறியா
அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந்
தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
வாறின்றொ ராண்டகையே.

              -திருக்கோவையார்  (8-9,1) 


பொருள்: அயனும் அரியு மாகிய இருவரறியாத அடியை மூவாயிரவரந்தணர் வணங்கத் தில்லையம்பலத்து எளிவந்து நின்றவனை நினையாதாரைப்போல வருந்த;  எதிர்ப்பட்டுத் தன் கொடியவாயை உழுவை அங்காந்தது, அங்காப்ப; அதனைச் சிறிதே தப்புவித்து இன்றோராண்டகை மணியையுடைய வேலைப் பணிகொண்டவாறென்வாறு 

02 February 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வெய்ய மாகரி ஈருரி யானே
வேங்கை யாடையி னாய்விதி முதலே
மெய்ய னேஅட லாழியன் றரிதான்
வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிக ழொளியே
செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

             - சுந்தரர் (7-70,7)


பொருள்: யானையினது உரித்த தோலை யுடையவனே , புலித்தோல் ஆடையை உடுத்தவனே , விதிவிலக்குக் களுக்குத் தலைவனே , மெய்ப்பொருளானவனே , அன்று திருமால் வேண்டிக்கொள்ள , வலிமையையுடைய சக்கரத்தை அவனுக்கு அளித்தருளிய இறைவனே , சிவந்த திருமேனியையுடையவனே , ஒளியாய் உள்ளவனே , நெருப்புக்கண்ணை உடையவனே , திருவாவடுதுறை யில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , தேவர்களாகிய விலங்கு கட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவர் உன்னை யன்றி வேறுயாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

01 February 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே.

                        -திருநாவுக்கரசர்  (4-75-8)


பொருள்: மேம்பட்டவனே ! சங்கை ஒத்த வெண்மையான மேனியை உடைய செல்வனே ! இந்த உடம்பு மண்ணிற்பொருந்துமாறு நெடிது வீழ்ந்து விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்துப் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி , உன்னையே ஞான பாவனையால் மனத்திற் கொண்டுள்ளேன் . என் உயிர் போகின்ற அன்று நாயைப் போன்று இழிந்த அடியேன் உன்னை , எங்கிருக்கின்றாய் என்று வினவினால் , இங்கிருக்கிறேன் என்று அருள் செய்வாயாக .