31 August 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


முத்திநெறி அறியாத
மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப்
பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச்
சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

              -மாணிக்கவாசகர்  (8-51-1)


பொருள்: முத்தி வழியை அறியாத மூர்க்கரோடு கூடி அவர் வழியில் முயல்கின்ற எனக்குப் பத்தி வழியை அறிவித்து, என் பழவினைகள் ஓடும்படி மனமாசு அகற்றிச் சிவ வடிவமாக்கி என்னை ஆண்டருளினன், எமது தந்தையாகிய சிவபெருமான். அப்பெருமான் அருள் செய்த பேற்றைப் பெற வல்லவர் வேறு யாவர்?

30 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுல காளப்
புகழி னால்அருள் ஈந்தமை யறிந்து
மிக்க நின்கழ லேதொழு தரற்றி
வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மானுனை யடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

                    -சுந்தரர்  (7-66-5)


பொருள்: வேதம் ஓதுபவனே . உலகிற்கு முதலாய மூர்த்தியே , உன் அரையில் எலும்பை அணிந்த பெருமானே , திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , நீ , மூன்று ஊர்களில் ஓங்கி எரிகின்ற நெருப்பை ஒருசேர எழுப்பியபொழுது , அங்கு உன்னையே நினைத்திருந்த மூவராகிய அவர் மட்டில் உய்ந்து , உன் திருவடியை அடைந்து , மேல்உலகத்தை ஆளும் வண்ணம் , அவர்கட்கு , புகழத்தக்க வகையில் திருவருள் ஈந்தமையை அறிந்து , அடியேன் , மேலான உனது திருவடியையே தொழுது முறையிட்டு , உன்னை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

29 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர விலங்கைக் கோமான் விலங்கலை யெடுத்த ஞான்று
பருவரை யனைய தோளு முடிகளும் பாறி வீழத்
திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே.

                         -திருநாவுக்கரசர்  (4-67-10)


பொருள்: திருக்கொண்டீச்சரத்துப் பெருமான் நறுமணம் கமழும் கரிய மெல்லிய கூந்தலையும் விளங்குகின்ற அணிகலன்களையும் வேல்போன்ற ஒளிபொருந்திய கண்களையும் உடைய பார்வதி அஞ்சுமாறு இராவணன் மலையை எடுத்த போது அவனுடைய பருத்த மலைபோன்ற தோள்களும் முடிகளும் சிதறி விழுமாறு அழகிய கால் விரலை ஊன்றினார் .

28 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறந்தான்கருதி வலியைநினைந்து மாறா யெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறைய வருள்செய்தார்
திறந்தான்காட்டி யருளாயென்று தேவ ரவர்வேண்ட
அறந்தான்காட்டி யருளிச்செய்தார் அண்ணா மலையாரே.

                         -திருஞானசம்பந்தர்  (1-69-8)


பொருள்: தனது வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர் களை அழித்து அருள் புரியுமாறு தேவர்கள் வேண்ட, தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன், தன் வலிமையையும், பெற்ற வெற்றிகளையும் பெரிதாக எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத்தான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள் ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன் வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன்.

24 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


 கைதொழுது நடமாடும்
கழலுன்னி அழல்புக்கார்
எய்தியஅப் பொழுதின்கண்
எரியின்கண் இம்மாயப்
பொய்தகையும் உருவொழித்துப்
புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க
வேணிமுடி கொண்டெழுந்தார்.

                     -திருநாளைப்போவார்  நாயனார்  (32)


பொருள்: கைகளைக் கூப்பித் தொழுது நடமாடி  சேவடி களை மனத்தில் நினைந்து, அந்நெருப்பினுள் புகுந்தார். புகுந்த அப்பொழுதின்கண், அந்நெருப்பிடத்து மாயையின் விளைவாய பொய்ம்மை நிரம்பிய ஊன் உடம்பை நீக்கிப் புண்ணியம் நிறைந்த பெருமுனிவரின் வடிவாகி, திருமேனியில் திகழ்கின்ற வெண்ணூல் விளங்கிட, சடைமுடி கொண்ட ஒரு தவமுனிவராக மேலே எழுந்தார். 

23 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே. 

                  -திருமூலர்  (10-2-14,2)


பொருள்: சிவபெருமான், உடலை அமைத்து, அதில் உயிரைக் கூட்டிய குறிப்பை உணர்ந்து, அவ்வுடல் நிலை பெறுதற் பொருட்டு அதில் நீர்மடைபோல் உள்ள ஒன்பான் துளைகளையும் அமைத்து, உறுதிப்பாடுள்ள நெஞ்சத் தாமரையின் மேல் தனது உருவத்தைத் தீயின் முனைபோல வைத்துள்ள அவனையே கூடி நான் இன்புறுகின்றேன்.

22 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நரியைக் குதிரைப் பரியாக்கி
ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம்
பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவினாசி
அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதீ
செய்வ தொன்றும் அறியேனே.

                      -மாணிக்கவாசகர்  (8-50-7)


பொருள்: நரியைப் பரியாக்கி உலகம் எல்லாம் பரவச் செய்து, மதுரைப் பகுதி முழுதும் பித்தேற்றிய பெருந்துறைப் பெருமானே! அரும் பொருளே! அவினாசி அப்பனே! பாண்டி நாட்டின் கடலே! தெரிதற்கரிய மேலான ஒளியே! நான் உய்யும் பொருட்டு விடுப்ப தாகிய காரியத்தைச் சிறிதும் அறிந்திலேன்.

21 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

                   -சுந்தரர்  (7-66-2)


பொருள்: எங்கள் முதற்கடவுளே , தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று , தனது வாயினின்றும் உண்டாகும் நூலால் அழகிய பந்தரை உறுதிப்பட ஆக்க , அச் சிலந்தியை , சுருண்ட , சிவந்த சடையை உடையையாகிய நீ சோழ னாய்ப் பிறக்கச்செய்த திருவருளை அறிந்து , அடியேன் , எனது எதிர் வினைக்கு அஞ்சித் துணுக்குற்று , உனது அழகிய மலர்போலும் திரு வடியில் விழுந்து புரண்டு , ` போற்றி ! போற்றி !` என்று துதித்து , அன்பினால் அழுது , உன்னை வந்து அடைந்தேன் ; என்னை  ஏற்றுக்கொள் திருவாவடுதுறை பெருமானே 

18 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை




வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே யடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத் தண்ணலே யஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

                    -திருநாவுக்கரசர்  (4-67-1)


பொருள்: அலைகள் உலாவுகின்ற வயல்களால் சூழப்பட்ட திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! இடையில் பாம்பினை விளங்குமாறு அணிந்த அண்ணலே ! ஐம்புல வேட்கையை நீக்கும் ஆற்றல் இல்லேனாய் , நீக்குதற்கு அரிய பிறவியாகிய வஞ்சனைப் படுகுழியிலே விழுந்து அதனினின்றும் கரையேறும் வழியைக் காணேனாய் உள்ள அடியேனுக்கு அஞ்சேல் என்று அருள் செய்வாயாக !.

17 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்க ளெரித்தவன்று மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் னிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.

                     -திருஞானசம்பந்தர்   (1-69-1)


பொருள்: நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய, அதனைக் கேட்டு அஞ்சிய காட்டுப் பசுக்களின் மந்தைகளான வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை இறைவர், அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத் தூவி வழிபடவும், வானோர்கள் புகழ்ந்து போற்றவும், அழியாவரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய பெருமையுடையவர்.

16 August 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


இப்பிறவி போய்நீங்க
எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன்
முன்னணைவாய் எனமொழிந்
தப்பரிசே தில்லைவாழ்
அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருளா னார்அருளி
அம்பலத்தே மேவினார்.

                -திருநாளைப்போவார்  நாயனார்  (28)


 பொருள்: இப்பிறவி நீங்கிட நெருப்பிடத்தே நீ முழ்கி எழுந்து, பின்பு முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய தில்லைவாழ் அந்தணருடன் என்முன்பு வந்திடுவாய்` என மொழிந்தருளி, அத் தன்மையாகவே தில்லைவாழ் அந்தணர்க்கும் அன்று இரவின்கண் அவர்கள் கனவில் `நந்தனார்க்கு நெருப்பு அமைத்துக் கொடுத் திடுக` என மெய்ப்பொருளாகிய சிவபெருமானும் அருள்புரிந்து தில்லையம் பலத்துள் மேவினார்.

14 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே. 

                -திருமூலர்  (10-2-14,2)


பொருள்: ஆறு ஆதாரங்களினும் முதலாவதாக அறியப் படுகின்ற மூலதாராத்திற்குமேல் உதராக்கினியும், உணவாக உண்ணப் படும் நீரும் நிறைந்திருக்கின்ற சுவாதிட்டானத் தானத்தில், பூதசார சரீரம், யாதனா சரீரம் என்பவற்றிற்கேனும், அவை இரண்டுமின்றித் தனக்கேனும் (சிவனுக்கேனும்) சுமையாய் நின்ற உயிர் வந்து பொருந்துமாற்றை எண்ணி, முதற்கண் செந்நீராகிய நிலைக்களத்தை நிற்பித்து, அந்நிலையை அக்கரு வெளிப்போதுதற்குப்  பத்துத் திங்கள் என்னும் சுமைக் காலத்தையும் சிவபிரான் ஆக்குகின்றான்.

11 August 2017

தினம் ஒரு திருமுறை


 தினம் ஒரு திருமுறை


சீல மின்றி நோன்பின்றிச்
செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி
வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக்
கொடியேன் என்றோ கூடுவதே. 

                -மாணிக்கவாசகர்  (8-50-3)


பொருள்: ஒழுக்கம் முதலானவை இல்லாமல் தோற்பாவை யின் கூத்தை நிகழ்த்திச் சுழன்று கிடக்கின்ற என்னைத் தன்னிடத்து அன்பு முதலியவற்றைக் கொடுத்து ஆண்டருளின இறைவனைக் கொடியேன் சேர்வது எந்நாளோ?

10 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க
நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டுநின் பொற்கழ லடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறு
நிலவு தென்றிரு நின்றியூ ரானே

                   -சுந்தரர்  (7-65-7)


பொருள்: பெண் மயில்கள் போலவும் , இளைய பெண் மான்கள் போலவும் , இளைய கிளிகள் போலவும் , பிறை போலும் நெற்றியையுடைய மகளிர் , உயர்ந்த மாடங்களையுடைய மாளிகை தோறும் விளங்குகின்ற , , நான்கு கொம்புகளையுடைய யானை , உன்முன் நின்று , தனது உடல் , அன்பினால் நடுங்கத் துதித்தபொழுதே , முன்னை வடிவத்தையும் , விண்ணுலகத்தை அடையும் பெருமையையும் பெற்ற தன்மையைக் கேட்டு அடியேன் , உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன்  என்னை கொண்டருள்

09 August 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும் நாகவீச்ச சரவ னாரே. 

                 -திருநாவுக்கரசர்  (4-66-8)


பொருள்: திருநாகேச்சுரத்துப் பெருமான் இன்பம் நிறைந்த காளியின் கொங்கைகளைத் தழுவும் புனிதராய், விரைந்து செல்லும் காளையை உடையவராய், வெண்ணீறணிந்த திருமேனியின் ஒருபாகமாகத் திருமாலை உடையவராய், மேருமலையாகிய வில்லையும், பாம்பாகிய நாணையும் உடையவராய் உள்ளார்.

08 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஊணாப்பலிகொண் டுலகிலேற்றா ரிலகு மணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார் புகழு மிருவர்தாம்
பேணாவோடி நேடவெங்கும் பிறங்கு மெரியாகிக்
காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலை மலையாரே.

                  -திருஞானசம்பந்தர்   (1-68-9)


பொருள்: மகளிர் இடும் பலியை உணவாகக் கொண்டு அதனை ஏற்றவர். விளங்கும் மணிகளைக் கொண்டுள்ள நாகங்களை அனிகலனாகப் பூண்டவர். எல்லோராலும் புகழப்பெறும் திருமால் பிரமர்கள் அடிமுடி காண விரும்பிச் சென்று தேட எங்கும் விளங்கும் எரியுருவோடு அவர்கள் காணாதவாறு உயர்ந்து நின்றவர் கயிலைமலை இறைவர் ஆவார்.

07 August 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


இப்பரிசா யிருக்கவெனக்
கெய்தலரி தென்றஞ்சி
அப்பதியின் மதிற்புறத்தின்
ஆராத பெருங்காதல்
ஒப்பரிதாய் வளர்ந்தோங்க
உள்ளுருகிக் கைதொழுதே
செப்பரிய திருவெல்லை
வலங்கொண்டு செல்கின்றார்.


                   -திருநாளைப்போவார்  நாயனார்  (25)


பொருள்: எனக்கு இவ்வெல்லையினின்றும் உட்போதல் அரிது என்று மிகவும் அஞ்சி, அம்மதிலின் புறத்தே பெருமானின் திருவடிகளில் ஆராத பெருவிருப்பாய், அன்பு தனக்கு வேறு ஒப்பரிதாய் வளர்ந்து ஓங்கிட உள்ளம் உருகி, அங்கு நின்றவாறே கை தொழுது, சொலற்கரிய பெருமை வாய்ந்த தில்லைப் பதியின் திருஎல்லையைப் பலகாலும் வலங்கொண்டு வந்தார்.

02 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.

                    -திருமூலர்  (10-2-13,5)


பொருள்: சிவபெருமான் `சுத்தம், மிச்சிரம், அசுத்தம்` என்பனவாக உலகங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நல்லூழி, தீயூழி, பொதுவூழி` என்பனவாகக் காலங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நிலம், நீர், தீ, வளி, வான்` எனப் பூதங்களை ஐந்தாகப் படைத்ததும், உடம்பு களை, தேவஉடம்பு, மக்கள்உடம்பு முதலாக ஏழு வகையாகப் பலவேறு வகைப்படப் படைத்ததும் எல்லாம் உயிர்கள் உய்ய வேண்டும் என்று விரும்பினான் 

01 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மின்னே ரனைய பூங்கழல்க
ளடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னே ரனைய மனக்கடையாய்க்
கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக்
கூடும் வண்ணம் இயம்பாயே. 

                  -மாணிக்கவாசகர்  (8-50-1) 


பொருள்: நினது  திருவடியை அடைந்த அன்பர்கள் இவ்வுலக மாயையைக் கடந்து தேவர்கள் எல்லாம் மலர்களால் அருச்சிக்குமாறு  வணங்க  நின்றார்கள். அப்படி இருக்கும் போது, கல்லை நிகர்த்த மனத்தை உடையவனாய்க் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை அடையும் வகையைச் சொல்வாயாக.