31 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அடையார்தம் புரங்கண்மூன்று மாரழலில் லழுந்த
விடையார்மேனி யராய்ச்சீறும் வித்தகர் மேயவிடங்
கடையார்மாட நீடியெங்கும் கங்குல் புறந்தடவப்
படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவ னீச்சரமே.

                     -திருஞானசம்பந்தர்  (1-65-1)


பொருள்: பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.

30 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அங்கண் மாநகர் அதனிடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி
பங்க னார்அடி மைத்திறம் புரிபசு பதியார்.

                   -உருத்திர பசுபதி நாயனார்  (3)


பொருள்: அருள் நிரம்பிய நகரில், மறையவர் குலத்தினில் தோன்றிய தூய வாழ்வுடையார் ஒருவர்; அவர் சிவந்த கண்களையுடைய ஆனேற்றில் இவர்ந்தருள்பவரும், செழித்த பொன்மலையான இமயத்தில் பூங் கொடி போலும் வடிவுடைய பார்வதியம்மையாரை ஒரு கூற்றில் உடையவருமான சிவபெருமானுக்குத் தொண்டு புரியும் தன்மை உடைய பசுபதியார் என்னும் பெயருடையவர்.

29 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. 

           -திருமூலர்  (10,2,10-1)


பொருள்: என்றும் உள்ளவனாய், எனது உள்ளத்தில் புகுந்து நீங்காது நிற்கின்ற சிவபெருமான், `ஒளி, இருள் - புகழ், இகழ் - உடல், உயிர்` முதலிய மறுதலைப் பொருள்களிலும் அவை அவையாய்த் தொடர்ந்து நீங்காது நிற்கின்றான்.

26 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிபாகன் நம்வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 

              -மாணிக்கவாசகர்  (8-48-3)


பொருள்: நெஞ்சே! காட்டில் வேடனாய் வந்தவனும், கடலில் வலையனாய் வந்தவனும், பாண்டி நாட்டில் குதிரைப் பாகனாய் வந்த வனும், நமது வினைகளைக் கெடுத்து நம்மை ஆண்டருள் செய்கின்ற திருப்பெருந்துறையானும் ஆகிய சிவபெருமான் திருவடியை நமது மருள் கெடும் வண்ணம் வாழ்த்துவாயாக!

25 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காண்டவன் காண்டவன் காண்டற்
கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன்
நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்
தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பிற்
புரிநூல் புரளவே.

                      - சுந்தரர் (7-45-7)


பொருள்: அடியவர்கட்கு எளிதில் காணப்பட்டவன் ; திருமாலும் பிரமனும் தேட , அவர்களால் காணுதற்கரிய கடவுளாய் நீண்டவன் ; ஆமாத்தூரையும் ஆண்டவன் ; என்னையும் ஆளாக வைத்து ஆண்டவன் ; மார்பில் முப்புரி நூலைப் புரளப் பூண்டவன் திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவன் ஆவான் 

24 May 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.

                     -திருநாவுக்கரசர்  (4-63-1)


பொருள்: பார்வதிபாகனே ! மேம்பட்ட சோதியே ! கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே ! மழுப் படையை ஏந்தியவனே ! ஆதியே ! தேவர்கட்குத்தலைவனே ! அழகிய அண்ணாமலையில் இருப்பவனே ! உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றி நினையேன் .

23 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பைவாயரவ மரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி யேறுகந் தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியி னானெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்றிருப் பூவணமே.

                       -திருஞானசம்பந்தர்  (1-64-7)


பொருள்: பாம்பை இடையில் கட்டிக் கொண்டு, பூதகணங்கள் போற்றிப் பாட, மேனி முழுதும் மெய்மை வடிவான திருநீற்றைப் பூசி, விடையேற்றை ஊர்ந்து வரும் சிவபிரானது இடம், கைகளில் வளையல்களை அணிந்துள்ள இளமகளிர் தம் காதலர்களோடு புணர்ச்சி விருப்புடையராய் நெருங்கிச் செய்யப்படும் கலவி பற்றிய பாடல்களின் ஓசை நீங்காத அழகிய திருப்பூவணமாகும்.

22 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அங்கண் அமருந் திருமுருகர்
அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த
பூசை அதனாற் புக்கருளிச்
செங்கண் அடலே றுடையவர்தாஞ்
சிறந்த அருளின் பொருளளிக்கத்
தங்கள் பெருமான் அடிநீழற்
தலையாம் நிலைமை சார்வுற்றார்.

               - முருகநாயனார் (13)


பொருள்:  முருக நாயனார் அழகிய சீகாழியில் தோன்றிய திருஞானசம்பந்தரின் சிவம் பெருக்கும் திரு மணத்தில், தாம் முன் செய்த பூசையின் விளைவால் புகுந்தருளி, சிவந்த கண்களை உடைய ஆனேற்றின் மீது அமர்ந்தருளும் பெருமானின் சிறந்த பொருளாகிய திருவருட் பேற்றை வழங்கும் அப் பெருமானின் திருவடிநிழற்கீழ்ச் சென்று பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றார்

19 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. 

                 -திருமூலர்  (10-2-9,6)


பொருள்: உலகத்தைப் படைப்பவர் சிவனும்) ஒருத்தியும் (சத்தியும்). அவர்கட்குப் புதல்வர் ஐவர். (சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன். எனவே, அவரைக்கொண்டு, அருளல் முதலியவற்றைச் செய்விப்பவன் என்றதாம்) ஐவருள் படைப்புத் தொழிலுக்குத்தான் செய்த புண்ணியத்தால் உரிமை பெற்ற வன் தாமரை மலரில் என்றும் இருந்து அத்தொழிலைச் செய்வான்.

18 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லைக் கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 

                 -மாணிக்கவாசகர்  (8-48-1)


பொருள்: நான்கு வேதங்களும் பக்கத்தில் அணுகமாட்டா; திருமால் பிரமன் என்போரும் கண்டறி யார்; அப்படிப்பட்ட கோகழி எம்கோமான் கடையேனைத் தொண்டு கொண்டதற்கு நாம் செய்யும் கைம்மாறு உளதோ நெஞ்சே! ?

17 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்
ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று
திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி
மென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்
தூர்ஐயன் அருளதே.

                   -சுந்தரர்  (7-45-4)


பொருள்: உள்ளத்துள்ளே உள்ளே  ஒளி யுடைய பொருளை ஆராய்ந்தறிந்தேன் ; அவ்வறிவின் வழியே சென்று அதனைத் தலைப்பட்டேன் ; இனி , வெளியே , திருவொற்றியூரிற் புகுந்து ,  சங்கிலி  என்பாளது மெல்லிய தோளையும் , பெரிய தனங் களையும் சேர்ந்தேன்  ; இவ்விருவாற்றானும் , இருவகை இன்பத்தையும் நிரம்ப நுகர்ந்தேன் ; இது , திருவாமாத்தூரில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனது திருவருள் .

16 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநா னேசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில் அப்பனே யருள்செ யாயே.

                      -திருநாவுக்கரசர்  (4-62-6)


பொருள்: விடத்தைக் கழுத்தில் அடக்கிய , சிவம் என்ற சொற் பொருளானவனே ! ஆலவாயில் அப்பனே ! என்றும் அழிவில்லாத அடைக்கலமாகும் இடம் என்று புகழ்ந்து நான் மகிழ்ந்து என்றும் வஞ்சனையின்றி உன் மலர் போன்ற திருவடிகளைத் தரிசிக்கும் வண்ணம் நாயேனுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வாயாக .

15 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மருவார்மதின்மூன் றொன்றவெய்து மாமலையான் மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த வும்பர்பிரா னவனூர்
கருவார்சாலி யாலைமல்கிக் கழன்மன்னர் காத்தளித்த
திருவான்மலிந்த சேடர்வாழுந் தென்றிருப் பூவணமே.

                     -திருஞானசம்பந்தர்  (1-64-2)


பொருள்: முப்புர அசுரர் மதில்கள் மூன்றையும் ஒருசேர எய்து அழித்தோனும், மலை  மகளாகிய பார்வதிதேவியை ஒருபால் கொண்டு தேவர்கள் தலைவனாக விளங்குவோனும் ஆகிய சிவபிரானது ஊர்; கருக்கொண்ட நெற்பயிர்கள் கரும்புகள் ஆகியன நிறைந்ததும் வீரக்கழல் புனைந்த மன்னர்கள் காப்பாற்றிக் கொடுத்த செல்வவளத்தால் சிறந்த மேலானவர்கள் வாழ்வதுமான அழகிய பூவண நகராகும்.

12 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தள்ளும் முறைமை ஒழிந்திடஇத்
தகுதி யொழுகு மறையவர்தாம்
தெள்ளு மறைகள் முதலான
ஞானஞ் செம்பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்றளித்த
அம்மை முலைப்பால் உடனுண்ட
பிள்ளை யார்க்கு நண்பருமாம்
பெருமை யுடையா ராயினார்.


                  -முருகநாயனார்  (11)


பொருள்: மறைகளில் தள்ளியதை  ஒழித்து, விதித்தவற்றைச் செய்து ஒழுகி வரும் அந்தணர் பெருமானாகிய முருக நாயனார் தாமும், உலகிற்கு உண்மைப் பொருளைத் தெளிவிக்கும் மறைகளில் முதன்மையாகக் கூறப்பட்டிருக்கும் சிவஞானத்தைச் செம்பொன் வள்ளத்தில் எடுத்து, உலகம் யாவற்றையும் பெற்றுக் காத்து வரும் உமையம்மையாரின் திருமுலைப்பாலுடன் சேர உண்ட திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராகின்ற பெருமையும் உடையவரானார்.

11 May 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. 

                  -திருமூலர்  (10-2-9,3)


பொருள்: சிவத்தை விட்டுத் தனியாய் நில்லாத  சத்தி, உலகம் செயற்படுதற்பொருட்டு  சிவத்தினிடமாகத் தோன்றி வேறு நிற்பது போலச் சொல்லப்பட்டாலும், சத்தி எஞ்ஞான்றும், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு ஒன்றி நிற்றலன்றித் தனித்து நிற்றல் இல்லை சிவமும் சத்தியைவிட்டுத் தனித்து நிற்றல் இல்லை.

10 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாந் தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 

                  -மாணிக்கவாசகர்  (8-47-10)


பொருள்: என்னை ஆண்டருளினவனாகிய இறைவனது திருவடியைச் நெஞ்சே  நீ சிந்தித்துக் கொண்டிருந்து, வேண்டும் பொருள்களை எல்லாம் வேண்டிக் கொள். வேண்டினால் திருப்பெருந் துறையான் நீ வேண்டுவனவற்றை எல்லாம் தந்தருளுவான்.

09 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காண்டனன் காண்டனன் காரிகை
யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்
தூர்எம் மடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று
சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்
தல்லா தவர்கட்கே.


                 -சுந்தரர்  (7-45-1)


பொருள்: திருவாமாத்தூரில் உள்ள  தலைவனை , உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன் ; அவனுக்கு அடிமை பூண்டேன் ; அடிமையைப் பலகாலும் செய்தேன் ; இவை பொய்யல்ல ; இன்னும் சொல்லுவேன் ; கேண்மின் ; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை நீங்கினேன் .

08 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வேதியா வேத கீதா விண்ணவ ரண்ணா வென்றென்
றோதியே மலர்கள் தூவி யொருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

                             -திருநாவுக்கரசர்  (4-62-1)


பொருள்: மறையவனே  ! மறைகளைப் பாடுகின்றவனே ! தேவர்கள் தலைவனே ! பெண்ணொரு பாகனே ! பரவிய சடையிற் பிறையைச் சூடும் ஆதிப்பெருமானே ! திருஆலவாயிலுள்ள அப்பனே ! உன்திரு நாமங்களைப் பலகாலும் ஓதி மலர்கள் தூவி ஒருவழிப்பட்ட மனத்தோடு உன்திருவடிகளை அடியேன் காணுமாறு அருள் செய்வாயாக .