30 September 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய்
கங்கை யாய்அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

                       -மாணிக்கவாசகர்  (8-23-9) 


பொருள்: எமனின்  உயிரைக் கவர்ந்த தாமரைப் பூப்போன்ற திருவடியையுடையவனே! கங்கையைச் சடையில் தரித்தவனே! நெருப்பை ஏந்திய கையை உடையவனே! கெண்டை மீன் களும், நீல நிறமுடைய பூக்களும் பொருந்திய வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் பொருந்திய பெருமானே! உலகத்தவரும், இந்திரனும்  பிரமனும், தேவரும், உன்னருளைப் பெற நிற்கவும், என்னை விரும்பி இனிமையாக ஆட்கொண்டருளினாய். திருமாலும் முறையிட்டுக் கதறுவதற்குரிய அப்பாதமலர்க்கே, மரக்கண் போன்ற கண்ணை உடைய என்னையும் வந்து சேரும்படி அருள் செய்வாயாக.

29 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
அன்னங்கள் விளையாடும் அகன்றுறையி னருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. (7-40-3)

28 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தாழ்குழ லின்சொ னல்லார் தங்களைத் தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளு மென்செய்கே னெந்தை பெம்மான்
வாழ்வதே லரிது போலும் வைகலு மைவர் வந்து
ஆழ்குழிப் படுக்க வாற்றே னாரூர்மூ லட்ட னீரே.

                            -திருநாவுக்கரசர்  (4-52-5)


பொருள்:  ஆரூர் மூலத் தானத்தில் உறைபவரே ! தாழ்ந்த கூந்தலையும் இனிய சொற்களையும் உடைய மகளிரையே பற்றுக்கோடாகக்கொண்டு அறிவற்றவனாகி நாடோறும் யான் யாது செயற்பாலேன் ? நாள்தோறும் என் ஐம்பொறிகள் ஆழ்ந்த குழியில் என்னைத் தள்ள முயல்வதால் பொறுக்க முடியாத துயரினேனாய் உள்ளேன் . இவ்வுலகில் ஒருவர் தம் குறிக்கோளுக்கு நேர்மையாக வாழ்வதே அரிய செயல்போலும் .

27 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே.

                   -திருஞானசம்பந்தர்  (1-54-1)


பொருள்: திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, குற்றம்மில்லாத  பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை.

26 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


முன்புபோல் முதல்வ னாரை
அமுதுசெய் விக்க மூளும்
அன்புபோல் தூய செந்நெல்
அரிசிமா வடுமென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர்
கூடையிற் சுமந்து போகப்
பின்புபோம் மனைவி யார்ஆன்
பெற்றஅஞ் சேந்திச் சென்றார்.

                    -அரிவாட்டாயநாயனார்  (14) 


பொருள்: அத்தகைய வறுமையிலும், முன்புபோல முதல்வ னாரை அமுது செய்விக்கத் தம்மிடத்து மூளுகின்ற அன்பு போலவே தூயதான செந்நெல்லின் அரிசியையும், மாவடுவையும், மென்மை யான செங்கீரையையும், துன்பம் நீங்கிய மனத்தையுடைய தொண் டர், தமது கூடையில் சுமந்து போக, அவர்பின்பு செல்லும் மனைவி யார் திருமுழுக்காட்டுதற்குரிய ஆனைந்தையும் மட்கலத்தில் தமது கையில் கொண்டு சென்றார்.

16 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே.

                         -திருமூலர்  (10-24-10) 


பொருள்: மனம் ஒருங்கி உணர்ந்தவனே சிவபெருமானை மனத்தால் நினைத்தும், வாயால் வாழ்த்தியும் அவன் திருக்குறிப்போடு ஒத்து உணர்ந்தவன் ஆவான். அவனுக்கு உடற் கூறுகள் தம்மில் ஒவ்வாது நிற்ப, உடலாகிய தேரைத் தாங்குகின்ற உயிராகிய அச்சு உழன்று, அவ்வச்சிடத்து அத்தேரின் ஆழியை நிலைபெறுத்தும் ஊழாகிய கடையாணியும் கழன்றாலும் அவன் சிவபெருமானைத் தப்பாது அடைவான்.

15 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட
நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந்
திறங்களு மேசிந்தித்
தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும்
அமிர்தினுக் காலநிழற்
பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.


                     -சேந்தனார்  (9-29-3) 


பொருள்: இறைவனிடத்து அசையாது ஈடுபட்டு நிற்றல் இல்லாத அடியேனுடைய உடலை நிட்டைக்குத் துணைசெய்வதாக மாற்றி அடியேனை ஆட்கொண்ட நிகரில்லாச் செயல்களையும், மேம் பட்டவன் ஆகிய சிவபெருமான் தன் அடியவர்களைப் பெருமைப் படுத்தும் செயல்களையுமே மனத்துக்கொண்டு அட்டமூர்த்தியாய், என் மனம் நெகிழுமாறு ஊறும் அமுதமாய் ,ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த குருமூர்த்தியாய், அடியேனைத்தன் அடிமையாக ஆட் கொண்ட நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

14 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

                            -மாணிக்கவாசகர் (8-23-2) 


பொருள்:  எல்லோரும் புற்று வளரப் பெற்றும் மரம் வளரப் பெற்றும், நீரும் காற்றுமே உணவாக அமைய மெலிந்து வாழும் அவருள் ஒருவரும் உன் தாமரை மலர் போலும் திருவடிகளைக் காணமுடியாத அரசனே! அடியேனை ஒரு சொல்லில் அகப்படுத்தி ஆட்கொண்டாய். இருந்தும், நெஞ்சம் துடிக்கமாட்டேன்; மனம் மிகவும் உருகமாட்டேன்; உன்னிடம் அன்பு செய்யமாட்டேன்; திருப்பெருந்துறையில் இருக்கும் பெருமானே இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன் !

13 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கிஉமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறு முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. - சுந்தரர் (7-40-1)

12 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே லிவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.

                                -திருநாவுக்கரசர்  (4-52-1)


பொருள்: பள்ளமான கடல்போன்ற வயிற்றை நிரப்புவதற்குரிய செயல்களில் ஈடுபடும் வகையால் இந்த மனிதவாழ்வு பாழாகிறது . ஆதலால் இவ்வாழ்க்கையை நினைக்குந்தோறும் இதை விலக்க உதவுபவரை அழைக்கின்றேன் . இவ்வுடம்பினுள் அறிவற்ற முரடாகிய ஐம்பொறிகள் இருந்து என்னைத் தம் விருப்பப்படி செயற்படுமாறு தூண்டுகின்றன . ஆரூர் மூலட்டானத்துள்ள பெருமானே ! அடியேன் இவைகளோடு சேர்ந்து வாழும் ஆற்றல் உடையேன் அல்லேன் .

08 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மயங்குமாயம் வல்லராகி வானினொடு நீரும்
இயங்குவோருக் கிறைவனாய விராவணன்றோ ணெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலைமா துமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயதுமு துகுன்றே.

                            -திருஞானசம்பந்தர்  (1-53-8)


பொருள்: அறிவை மயங்கச் செய்யும் மாயத்தில் வல்லவராய் வான், நீர் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கும் இயல்பினராய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் தோளை நெரித்த வலிமையோடு பாம்பு நடனத்தில் விருப்புடையவனும், செறிந்த தனபாரங்களை உடைய உமையம்மையைத் தழுவிய மார்பினனும் ஆகிய சிவபிரான் முனிவர்கள் ஏத்த எழுந்தருளி விளங்கும் தலம் திருமுதுகுன்றமாகும்.

07 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 


நண்ணிய வயல்கள் எல்லாம்
நாடொறும் முன்னங் காண
வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி
ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி
கொண்டிஃ தடியேன் செய்த
புண்ணிய மென்று போத
அமுதுசெய் விப்பா ரானார்.

                  -அரிவாட்டாயநாயனார்  (11) 


பொருள்: நாயனார்  நெல் அரியச் செல்லும் வயல்களில் எல்லாம், இவர் முன்னதாகக் காணுமாறு வண்ணமுடன் சிறந்து விளைந்த கதிருடைய செஞ்சாலி நெல்லேயாக ஆக்கிட, அது கண்டு மனம் மகிழ்வுற்ற தாயனார், தாம் கூலியாகப் பெற்ற செஞ்சாலி நெல் அனைத்தையும் கொண்டு, `இது அடியேன் செய்த புண்ணியம்` என்று அதனை முழுமையாகத் திருவமுதாக ஆக்கிப் பெருமானை நாளும் அமுது செய்விப்பாராயினார்.

06 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்ப தரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

                         -திருமூலர்  (10-24-3) 


பொருள்: திருமால், பிரமன் முதலிய தேவரை வழிபடும் முறைகளும் கேட்கத்தக்கனவாதல், சிவபெருமானது ஆணைவழியே யாம். அதனால், முதல்வனாகிய அப்பெருமானை வழிபடும் முறையைக் கேட்டு, அவனை வழிபடுதலே சிறந்தது. ஆகவே, மக்கட் பிறப்பின் பயனும், உயிர்க்கு உறுதுணையாவதும் சிவபெருமானை வழிபடும் முறையைக் கேட்டலேயாம்.

02 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே. 

                -சேந்தனார்  (9-29-1)


பொருள்: தில்லைத்திருநகரம் என்றும் நிலைபெறுக; நம் அடியார்கள் பல்லாண்டு வாழ்க; அடிமை செய்ய ஒருப்படாதவர்கள் இல்லாதொழிய, பொன்மயமான மண்டபத்திலே நுழைந்து உலக மெல்லாம் நிலைபெறுமாறு நின்று, அன்னம் போன்ற நடையினை உடைய இளையள் ஆகிய உமாதேவியின் தலைவன், அடியவர் களாகிய நமக்கு அருள் பாலித்து மேல்வரும் பிறவியை நாம் அறுத்துக் கொள்ளும்படி அடியேமுக்குத் தன் திருக்கூத்தாகிய அருளைப் பொழிந்து திருவடி ஞானத்தை அருளியுள்ளான். அந்தப்பித்தனை நாம் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

01 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

                     -திருமூலர்  (10-23-8) 


பொருள்: வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன்.