31 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழன்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
 
                  -திருஞானசம்பந்தர்  (1-48-1)

 

பொருள்: வேதம் முதலிய நூல்களில் விதிக்கப்பட்ட முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம் நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர் உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க, அவர்கள் தெளிவு பெறுமாறு கல்லால மர நிழலில் வீற்றிருந்து அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு உணர்த்தியருளினாய் சேல் மீன்கள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே!

30 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மின்னிடை மடவார் கூற
மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து
வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத்
தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம்
என்றுகை தலைமேற் கொண்டார்.
 
                    -குங்கலிகலயநாயனார்  (20)

 

பொருள்: அம்மையார் இவ்வாறு கூறலும், மிக்க சிறப்பையுடைய குங்குலியக் கலயனாரும், தமது மனையில், விளங்கிய பெருஞ் செல்வத்தின் வளம் மலிந்த சிறப்பை நோக்கி,  என்னையும் ஆண்டு கொள்ளும் தன்மைக்கு, எந்தையும் எம் பெருமானுமான ஈசனின் அருள் இருந்த வண்ணம் தான் என்னே? என இறைவனின் அருளை நினைந்து களி கூர்ந்து நிற்பார், தம் கரங்களை உச்சிமீது கூப்பிய நிலையில் நின்று போற்றினார்.

29 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் அசைவின்றிக்
காட்டுமேல் காட்டிக் காலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடவே கூடு.

28 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.
 
                         -திருமூலர்  (10-16-10)

 

பொருள்:தம் தம் சமய அடை யாளங்களை மட்டும் உடையராய் அச்சமய ஒழுக்கத்தில் நில்லா தொழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்திற் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமையாகும்.

24 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சித்தர் தேவர் இயக்கர் முனிவர்
தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம் பலவா
என்றென் றவர் ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள்
முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழநட்டம்
குழகன் ஆடுமே.
 
                   -திருவாலியமுதனார்  (9-24-7)

 

 பொருள்: சித்தர்களும் தேவர்களும் இயக்கர்களும் முனிவர்களும் போற்றி வேண்டும்   சோலைகளை உடைய தில்லைநகர்த் தலைவனே! அழகிய சிற்றம்பலத்தில் உள்ளவனே!  முத்தும் மணியும் வரிசையாக அமைந்த அந்த அம்பலத்தில் பிறைச்சந்திரனைச் சூடி, கொத்துக் கொத் தாக அமைந்த சடைகள் தொங்குமாறு அழகனாகிய சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்

23 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொந்தண வும்பொழிற் சோலைக்
கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண னாகிவந் திங்கே
அழகிய சேவடி காட்டி
எந்தம ராம்இவன் என்றிங்
கென்னையும் ஆட்கொண் டருளும்
செந்தழல் போல்திரு மேனித்
தேவர் பிரான்வரக் கூவாய்.
 
                   -மாணிக்கவாசகர்  (8-18-10)
 
பொருள்: பூங்கொத்துக்கள் நெருங்கிய பெரிதாகிய சோலையில் கூவுகின்ற குயிலே! நீ இதனைக் கேட்பாயாக. இங்கே அந்தணன் ஆகி வந்து அழகிய செம்மையாகிய திருவடியைக் காட்டி, என் அன்பரில் ஒருவனாம் இவன் என்று இவ்விடத்தில் என்னையும் அடிமை கொண்டருளிய சிவந்த தீப்போலும் திருமேனியையுடைய தேவர் பெருமான் வரும்படி கூவி அழைப்பாயாக.

22 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துஞ்சி யும்பிறந் துஞ்சி றந்துந்
துயக்க றாத மயக்கிவை
அஞ்சி யூரன் திருப்பு றம்பயத்
தப்ப னைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு
துய்து மென்று நினைத்தன
வஞ்சி யாதுரை செய்ய வல்லவர்
வல்ல வானுல காள்வரே.
 
                         -சுந்தரர்  (7-35-10)
 
பொருள்: இறந்தும் , பின்பு பிறந்தும் ,  இப்படியே சுழலுதலுக்கு அஞ்சி , நம்பியாரூரன் , ` திருப்புறம்பயத்தை வணங்கி உய்வோம் ` என்று நெஞ்சினாலே நினைத்து , ஆங்கிருக்கின்ற தன் தந்தையைத் தமிழ்ச் சீர்களால் பாடிய இப்பாடல்களைக் கரவில்லாது பாட வல்லவர்கள் , அவைகளை நீக்கவல்ல வானுலகத்தை ஆள்வார்கள் .

21 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே.
 
                              -திருநாவுக்கரசர்  (4-45-1)

 

பொருள்: கங்கையைச் சடையில் வைத்தவனாய் வேதம் பாடும் பெருமானுடைய பாதங்களை மெதுவாக வழுவின்றிப் பெற விரும்பினால் , மெய்ப்பொருளை வழங்கும் ஞானமாகிய தீயினால் கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டினை எரித்தொழித்துச் செப்பஞ் செய்த அடியவர்களுடைய உள்ளத்திலே ஒற்றியூர் உடைய பெருமான் சிவப்பிரகாசமாக விளங்குவான் .

18 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
நாலுவேத மோதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுர மேயவனே.

17 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்பரங் கிருப்ப நம்பர்
அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத்
தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும்
பொருவில்பல் வளனும் பொங்க
மன்பெரும் செல்வ மாக்கி
வைத்தனன் மனையில் நீட.
 
                          -குங்குலிகலய நாயனார்  (14)

 

பொருள்: பெருமானின் திருவருளினாலே அளகை வேந்தனாகிய குபேரன், தன்பெருநிதியைத் தனதுலகில் முழுவதும் இல்லையாகச் செய்து இந்நிலவுலகில் நெருங்குமாறு, பொற்குவியலும் நெல்லும் ஒப்பற்ற பிற பொருள்களாலான பல வளங்களும் பெருகிப் பொலியுமாறு, அவர்தம் திருமனையில் நிரப்பி வைத்தனன்.

16 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்
கூவா திருந்த குயிற்பிள்ளாய் ஒவாதே
பூமாம் பொழில்உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக்
கோமான் வர ஒருகாற் கூவு.

15 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

14 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும்
சாதி பலவுங்கொண்
டுந்தி யிழியும் நிவவின் கரைமேல்
உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுள்
சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம்
நாதன் ஆடுமே.
 
                            -திருவாலியாமுதனார்  (9-24-4)

 

பொருள்: சந்தனம , அகில், சாதிக்காய்மரம், தழை போன்ற மயில்தோகை என்ற பலவற்றையும் அகப்படக்கொண்டு தள்ளி ஓடுகின்ற நிவா என்ற ஆற்றின் கரையில் அமைந்த உயர்ந்த மதில்களைஉடைய தில்லை என்ற பெயருடைய, நினைக்கவும் அரிய தெய்வத் திருத்தலத்துச் சிற்றம்பலத்தில் திருநந்திதேவர் முழவு ஒலிக்கச் சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்

10 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சுந்தரத் தின்பக் குயிலே
சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங்
கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு
மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச்
சேவக னைவரக் கூவாய்.
 
                - மாணிக்கவாசகர் (8-18-5)

 

பொருள்: குயிலே!  சூழ்ந்த கிரகணங்களை யுடைய சூரியனைப் போல ஆகாயத்தினின்றும் இறங்கி இம் மண்ணுலகிலுள்ள அடியார்களுடைய பற்றுக்களை ஒழிப்பவனும் உலகத்திற்கு முதலும் இடையும் இறுதியும் ஆகியவனும் பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் அறியமுடியாத செஞ்சாந்து போன்ற சிவந்த திருவடியை உடையவனும் வீரனுமாகிய பெருமானை வரும்படி கூவி அழைப்பாயாக

08 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படையெ லாம்பக டாரஆளிலும்
பௌவஞ் சூழ்ந்தர சாளிலும்
கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ
லாதெ ழுமட நெஞ்சமே
மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து
மருங்கெ லாங்கரும் பாடத்தேன்
புடையெ லாமணம் நாறு சோலைப்
புறம்ப யந்தொழப் போதுமே.
 
                     - சுந்தரர் (7-35-5)

 

பொருள்: பல படைகளையும் ஏவல்கொண்டு வெற்றியைப் பெறினும் , அவ்வெற்றியாலே கடல்சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆளினும் , முடிவில் எல்லாம் , தேரையோடு ஒட்டியுள்ள வால்போல ஆகிவிடும் ; ஆதலால் , நீர்மடைகளில் எல்லாம் கழுநீர்ப் பூக்கள் மலர் தலாலும் , பல இடங்களிலும் கரும்பை ஆலையில் இட்டுப் பிழிதலாலும் , எல்லாப் பக்கங்களிலும் தேனின் மணம் வீசுகின்ற சோலை களையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ;  புறப்படு மனமே  .