30 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிப ரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
                - மாணிக்கவாசகர் (8-9-3)
பொருள்: சுந்தர  திருநீற்றை அணிந்து கொண்டு தரையை மெழுகுதல் செய்து மாற்றுயர்ந்த பொற்பொடிகளைச் சிதறி, நவமணி களைப் பரப்பி இந்திரன் உலகிலுள்ள கற்பக மரத்தின் தோகைகளை நட்டு எவ்விடத்தும் அழகிய தீபங்கள் வைத்துக்கொடிகளை ஏற்றுங்கள். விண்ணவர்க்குத் தலைவனும் பிரமனுக்கு முதல்வனும் சக்கரத்தையுடைய திருமாலுக்கு நாயகனும் அழகிய முருகனுக்குத் தந்தையும் எம் நிலையில் உள்ளாரையும் ஆட்கொள்ளுகின்ற உமா தேவியின் கணவனுமாகிய இறைவனுக்குப் பொருந்திய பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

29 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே.
 
                 - சுந்தரர் (7-20-1)

 

பொருள்: திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே , வாள்போலுங் கண்களை யுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் . அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன் , எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன் ; வேறு யாரை வேண்டுவேன் ! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

28 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தடக்கையா லெடுத்து வைத்துத் தடவரை குலுங்க வார்த்துக்
கிடக்கையா லிடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான் முருகமர் கோதை பாகத்
தடக்கினா ரென்னையாளு மதிகைவீ ரட்ட னாரே.
 
                                 - திருநாவுக்கரசர் (4-25-10)

 

பொருள்:   கயிலை மலை நடுங்குமாறு ஆரவாரித்து நீண்ட கைகளால் பெயர்க்க முயன்ற இராவணன் அதன் கீழகப்பட்டுத் துன்பங்கள் மிகுந்து விளக்கமானமண மணிமுடிகள் நசுங்கி அவலமுறுமாறு தம் திருவடிப் பெருவிரலைச் சற்றே வளைத்து ஊன்றினார் . அவரே நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை இடப்பாகமாக அடக்கியவரும் என்னை அடியவனாக்கிக் கொண்ட அதிகை வீரட்டனார் ஆவர் 

25 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.
 
                  - திருஞானசம்பந்தர் (1-27-11)

 

பொருள்: மாடவீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாய், எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன், பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவர்மீது பாடிய பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக.

23 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்துடன் ஏற
அண்டர் தம்பிரான் திருஅரைக் கோவண மதுவும்
கொண்ட அன்பினிற் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்துநேர் நின்றதத் துலைதான்.
 
               - அமர்நீதி நாயனார் புராணம் (44)

 

பொருள்: மிகுந்த அன்பினால் மற்று அவர்கள் மகிழ்ந்து உடனே துலைத்தட்டில் ஏறினார்களாக, அண்டங்கள் அனைத்தையும் தமக்கு உடைமையாகக் கொண்டிருக்கும் பெருமானாகிய இறைவனது திருவரையில் சாத்தும் கோவணமும், அவரிடத்துக் கொண்ட அன்பி னில் குறைபடாத அடியவர் தம் தொண்டும் ஒப்புடையன ஆதலால் அத்துலைதானும் ஒத்து நின்றது

22 April 2014

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
 
                      - ஐயடிகள்  கடவர் கோன் நாயனார் (11-5-15)

 

 

பொருள்: மை மையெழுதிய கண்ணார், நிலைமை வெறுத்து   கூன் விழுந்து   சுடுகாடு சென்றபின் பலர் இருந்து புலம்பாமுன் பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காடு சென்று தொழுவீர்களாக .

21 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.
 
                  - திருமூலர் (10-3-10)

 

பொருள்: கற்றவர் போற்றுகின்ற பதினெண்மொழிகளும் சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் உணர்த்தற்கு அமைத்த வாயிலே. பல மொழிகளையும் உணர்ந்து, அவற்றில் சொல்லியுள்ள முடிந்த பொருளை உணர்ந்தவரே என அறிக.

18 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும்
 மைந்தன்என் மனங்கலந் தானே.
 
                         - கருவூர் தேவர் (9-10-1)

 

 பொருள்: வெள்ளைப் பிறையையும், சடைமுடியையும், உச்சிக்கொண்டையையும், சூலத்தையும், நீலகண்டத்தையும், காதணியையும், பவளம் போன்ற வாயின் உதடுகளையும், நெற்றிக் கண்ணின்மேல் இடப்பட்ட திலகத்தையும் யான் காணச் செய்து,கெண்டையும் கயலும் தாவிக்குதிக்கின்ற நீர் வளம் பொருந்திய வயல்களின் மள்ளர்களால் ஒலிக்கப்படும் ஆரவார முடைய கீழ்க்கோட்டூரில் வண்டுகள் ஒலிக்கும் மணியம்பலத்துள் நின்று ஆடும் வலிமையை உடைய பெருமான் என் உள்ளத்தில் கலந்து ஒன்றுபட்டுவிட்டான்

17 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
                - மாணிக்கவாசகர் (8-9-1)

 

பொருள்: தோழியர்களே! முத்துக்களாலாகிய நல்ல மாலையையும், பூமாலையையும் தொங்கவிட்டு முளைப் பாலிகையை யும், குங்குலியத் தூபத்தையும் நல்ல விளக்கையும் வையுங்கள். உருத்திராணியும், திருமகளும், நிலமகளும் கலை மகளோடு கூடித் திருப்பல்லாண்டு பாடுங்கள். கணபதியின் சத்தியும், கௌமாரியும், மகேசுவரியும், கங்காதேவியும், முன்வந்து வெண் சாமரை வீசுங்கள். எமது தந்தையும் திருவையாற்றை உடையவனுமாகிய எம் தலைவனைப் பாடி, அவன் நிரம்ப அணிதற் பொருட்டுப் பொன் போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்.

16 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
யறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாய்இருந்
தானைத் திருநாவல்ஆ
ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல்
லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர
மன்னடி கூடுவரே.
 
             - சுந்தரர் (7-19-11)

 

பொருள்: அடியார்களது தொண்டுகள் எந்நாளும் நீங்காதிருக்கின்ற திருநின்றியூரின் கண் சிறந்த வீடுபேறாய் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினனாகிய நம்பியாரூரன் பாடிய , பொருத்தமான இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர் , வினை நீங்கப் பெற்று , மண்ணுலகத் தவரும் , விண்ணுலகத்தவரும் வணங்கும் படி , சிவபெருமானது திருவடியை அடைவார்கள்

15 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பத்தியா லேத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்தியைந் தலைய நாகஞ் சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை யுமையவ ணடுங்க வன்று
அத்தியி னுரிவை போர்த்தா ரதிகைவீ ரட்ட னாரே.
 
                          - திருநாவுக்கரசர் (4-25-5)

 

பொருள்: பத்தியோடு வணங்கும் மெய்யன்பர் சித்தத்தில் நிலையாக உள்ளவரும் , படப்பொறிகளை உடைய ஐந்தலை நாகத்தைப் பரந்த சடைமுடியின்மேல் சூடி , வடக்கிலுள்ள இமய மலையரசன் மகளான உமாதேவி நடுங்குமாறு யானைத் தோலைப் போர்த்தியவரும் அதிகை வீரட்டனாரே .

11 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பவள வண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ண முறையுந் திருப்புன்கூர்
அழக ரென்னு மடிக ளவர்போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே.
 
                       - திருஞானசம்பந்தர் (1-27-5)

 

 பொருள்: உலகோர் புகழ நிலை பெற்ற, முறுக்கிய சிவந்த சடை முடியை உடைய இறைவர், பவளம் போலும் தமது திருமேனியின் செவ்வண்ணம் திகழுமாறு திருப்புன்கூரில் உறையும் அழகர் என்னும் அடிகளாவார்.

10 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் யடிமை
பிழைத்தி லோமெனிற் பெருந்துலை நேர்நிற்க வென்று
மழைத்த டம்பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்.
 
                 - அமர்நீதி நாயனார் புராணம் (43)

 

பொருள்: இறைவரிடத்துக் கொண்ட அன்பினில், இறை யவர்தம் திருநீற்று நெறியை இதுகாறும் யாம் உண்மையாகத் திறம் பாதிருப்பின், நாங்கள் மூவரும் இத்துலையில் ஏற, அக் கோவணம் உள்ள தட்டொடு ஒப்பாக நிற்பதாக` என்று கூறி, மழையினால் நிரம்பி நிற்கும் குளங்கள் சூழ்ந்தபொழிலையுடைய திருநல்லூரில் எழுந்தருளி யிருக்கும் இறையவரை வணங்கி,அன்பு தழைதற்குக் காரணமாய திரு வைந்தெழுத்தை ஓதியவாறு தட்டில் ஏறினார்

09 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.
 
                         - ஐயடிகள் கடவர் கோன் நாயனார் (11-5-12)

 

 பொருள்: புன்னை மரங்கள் மிக்குள்ள  மயிலாப்பூர்,  வாயைத் திறந்து கொண்டு உயிர் போய்விட இல்லாமல் இப்பொழுதே சிந்திப்பாயாயின் இந்நிலைவாராது.

08 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.
 
              - திருமூலர் (10-3-7)

 

பொருள்: சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றில் சொல்லப்பட்ட பொருளை மக்கள் அறியமாட்டாராயின், அவை அனைத்தும் அவர்கட்குப் பயனில்லாதனவேயாய் விடும்

07 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை
நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவுந் திருவடி நிலைமேல்
நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர்
இருள்கிழித் தெழுந்த சிந்தையரே.
 
             - கருவூர் தேவர் (9-9-10)

 

பொருள்: நீரினது அழகிய ஊறுதலையுடைய ஆதித்தேச்சரம் என்ற கோயிலே, பற்றிய, திருமால் பரவும் பாதுகைகளை உடைய சிவபெருமான் மீது பல சிறப்புக்களும் பொருந்திய கலைகளில் பயின்ற கருவூர்த்தேவர் வேதங்களை ஓதிய தம் பவளம் போன்ற வாயிலிருந்து அமுதம்மாகிய  தமிழ் மாலையாகிய அழகு பொருந்திய இப்பத்துப் பாடல்களையும் வல்லவர் அறியாமையைக் கிழித்து அப்புறப்படுத்திய உள்ளத்தின ராவர்.

04 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றிஇப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                    - மாணிக்கவாசகர் (8-8-20)

 

பொருள்: அடியார்க்கு அன்றித் தன் குணங்களை அளவிடற்குப் பிறர்க்கரியனாகிய திருப்பெருந்துறையானும், குதிரைச் சேவகனாய் எழுந்தருளித் தன் அடியார் குற்றங்களை ஒழித்துக் குணத்தை ஏற்றுக் கொண்டு எம்மைச் சீராட்டி, சுற்றத்தவர் தொடர்பை விடுவித்தவனுமாகிய சிவபெருமானது புகழையே பற்றி, இப்பாசப் பற்றறும்படி நாம் பற்றின பேரின்பத்தைப் புகழ்ந்து பாடி இன்பம் அடைவோம்.

03 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்
லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி
னார்அதி கைப்பதியே
தஞ்சங்கொண்டார்தமக் கென்றும்
இருக்கை சரணடைந்தார்
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.
 
             -சுந்தரர்  (7-19-5)

 

பொருள்: வஞ்சனையை உடையவரது மனத்திற் சேராதவரும் , நெய் , தயிர் , பால், கோமியம், கோமயம்  ஆனஞ்சினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற பெருவிருப்புடையவரும் , திருவதிகைப் பதியினையே தமக்கு என்றும் இருக்கையாகும்படி அதனைத் தஞ்சமாகக் கொண்ட வரும் , தம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றி யூரே

02 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங் குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரார் வேண்டுவார் வேண்டி லார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயா ரதிகைவீ ரட்ட னாரே.
 
                - திருநாவுக்கரசர் (4-25-1)

 

பொருள்:   நிலவுலகில் மீயச்சூர் முதலிய திருத்தலங்களில் உறைபவராய் , தம்மை விரும்புபவருக்கு அண்மையில் உள்ளவராய் , வேண்டாதவருக்குப் பெரிதும் தொலைவில் உள்ளவராய் விளங்கும் பெருமானார் , வெள்ளிய ஒளிவீசும் பிறையை அது விரும்புமாறு விரிசடையிற் சூடி , அடியேன் உள்ளத்திலே ஞானஒளி நிலவப்புகுந்து நின்று , அவ் விடத்தில் உணர்விற்குப் பொருந்துமாறு உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி , அதிகை வீரட்டத்தில் உள்ளார் .

01 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்த மில்லா வடிக ளவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
 
             - திருஞானசம்பந்தர் (1-27-1)

 

பொருள்:  பல பிறவிகளிலும் செய்த சஞ்சித, ஆகாமிய வினைகளுள் பக்குவப்பட்டுப் பிராரத்த வினையாய்ப் புசிப்பிற்கு முற்பட்டு நின்ற வினைகள் பலவும் நீங்க, திருப்புன்கூரில் ஆதி அந்தம் இல்லாத தலைவராய், மணம் நிறைந்து கமழும் செந்நிறச் சடைமுடி உடையவராய் எழுந்தருளிய சிவ பிரானாரைச் நெஞ்சே  நீ சிந்தனை செய்.