31 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.
 
              - மாணிக்கவாசகர் (8-7-3)

 

பொருள்: முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து  வந்து, எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி , இனிமை பயக்கும்படிப் பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்! இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது, சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ? உன் அன்புடைமை வஞ்சனையோ? உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்.

30 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
கொண்டா ராகிலுங் கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்
கண்ணா நின்னல தறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
தொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயல் தண்டலை வேலி
நாட்டியத் தான்குடி நம்பீ.
 
         - சுந்தரர் (7-15-9)

 

பொருள்: வெள்ளை எருதினை ஏறுகின்ற , கண்போலச் சிறந்தவனே , நண்டுகள் விளையாடும் வயல்களையும் , சோலைகள்   உடைய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியே , சமணரும் , சாக்கியரும் ஆகிய பேய்கள் மூர்க்கத் தன்மையை மேற்கொண்டு தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும் , அதனை நேரே கண்டாலும் அதனை யான் ஒரு பொருளாக நினையேன் ; உன்னையன்றி பிறிதொரு கடவுளை நான் அறியேன் ; உனது தொண்டினை மேற்கொண்டு உன்னைத் தொழுகின்ற பெரியோர்கள் அங்ஙனம் தொழும்பொழுது கண்டு , அதுவே நெறியாக என் வினைகள் ஒழியுமாறு உன்னை யான் தொழுவேன். 

29 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலால்
துஞ்சாப்போர் வாளரக்கன் றோணெரியக் கண்குருதிச்
செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பிற் பால்வெண்ணீற்
றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே.
 
              - திருநாவுக்கரசர் (4-19-11)

 

பொருள்:  கயிலை மலையை இராவணன் பெயர்க்க முற்பட அழகிய கால் விரலால் அழுத்தி, உறங்காது, போர் செய்யும் திறமையை உடைய கொடிய அவ்வரக்கனுடைய தோள்கள் நெரிய அவன் கண்களிலிருந்து புறப்பட்ட இரத்தமாகிய சிவந்த கலவையை அவனை அணியுமாறு செய்து, தன் மார்பிலே பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினை அணிந்த பெருமானை அடியேன் தரிசித்த திருத்தலம் திருவாரூரேயாம்.

26 July 2013

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி யரவது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ வவருடல் குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய மறைவன மமர்தரு பரமனே.
 
            - திருஞானசம்பந்தர் (1-22-1)

 

பொருள்: மலையை மத்தாக நடுவே நிறுத்தி, சினம் மிக்க ஒப்பற்ற வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக்கொண்டு, விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் ஒலி தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்தகாலத்துக் கொல்லும் தன்மை வாய்ந்த ஆலகால விடம் அக்கடலில் தோன்ற, அதனால் தேவாசுரர்கள் அஞ்சி நடுங்கித் தன்னை நோக்கி ஓலமிட்ட அளவில் அந்நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளியவன் அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட திருமறைக்காட்டில்  எழுந்தருளிய பரமன் ஆவான்.

25 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

அவ்வழி அவர்க ளெல்லாம்
அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன்
திருநகர் கடந்து போந்து
கைவடி நெடுவா ளேந்தி
ஆளுறாக் கானஞ் சேர
வெவ்வினைக் கொடியோன் தன்னை
விட்டபின் மீண்டு போந்தான்.
 
            - (மெய்ப்பொருள் நாயனார் புராணம்  19)

 

பொருள்: மன்னன்  ஆணையென்று கூறியதும் அவனைச் சூழ்ந்தவர்களெல்லாம் அஞ்சி அவ்விடத்தினின்றும் பெயர்ந்து செல்ல, செல்லுதற்குப் பாதுகாப்பாய வழியில் தத்தன் என்பான் அந்நகரத்தைக் கடந்து சென்று, கையிடத்துக் கூரிய நீண்ட வாளை ஏந்திய வண்ணம், மனிதர்கள் இயங்காத காட்டை அடைந்து தீத்தொழிலினனாய அக் கொடியவனை விடுத்து மீண்டு வந்தான்.

24 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.

         - காரைகாலம்மையார் (11-4-41)

 

23 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.
 
          - திருமூலர் (10-1-32)

 

பொருள்: எல்லா உயிர்க்கும்  தந்தையும், நந்தி என்னும் நமமுடையவனும் ,  அமுதமாய் இனிப்பவனும், வள்ளல் பிறர் ஒருவரும் ஒப்பாகமாட்டாத பெருவள்ளலும், ஊழிகள் பல வற்றிலும் உலகிற்குத் தலைவனாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை யாதொரு முறைமையிலானும் துதித்தால், அதற்கு  தக அவனது அருளைப் பெறலாம்.

22 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
புகழாள ராயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
மிகுகா விரிக்கரை மேய
ஐயா திருவா வடுதுறை
யமுதேயென் றுன்னை யழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கொன்
றருளா தொழிவது மாதிமையே.

            - (9-6-1)

பொருள்: என்றும் தான் கூறுவது பொய்த்தல் இல்லாத வேதத்தை ஒதுபவராய்ச் சாத்தனூரில் வாழும் உண்மையான புகழாளராய், எண்ணிக்கையில் ஆயிரவராய் உள்ள நிலத்தேவராம் அந்தணர்கள் உள்ளம் ஒன்றித் திருத்தொண்டு செய்கின்ற, சிறப்பு மிகுகின்ற காவிரிக் கரையில் விரும்பி வீற்றிருக்கும் தலைவனே! திருவாவடுதுறையில் உகந்தருளியிருக்கும் அமுதமே! என்று என் மகள் உன்னை அழைத் தால் மைதீட்டிய பெரிய கண்களைஉடைய என்மகளுக்கு நீ ஒரு வார்த்தையும் மறுமாற்றமாகக் கூறாமல் இருப்பது உனக்குத் தகுதியோ? பெருமையோ? - என்று தாய் பெருமானிடம் முறையிட்டவாறு.

19 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.
 
            - மாணிக்கவாசகர் (8-7-2)

 

பொருள்: சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுது அருமை யாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என் னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்!

18 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர
நினைந்தேன் உள்ளம்உள் ளளவும்
உய்வான் எண்ணிவந் துன்னடி யடைந்தேன்
உகவா யாகிலும் உகப்பன்
நைவா னன்றுனக் காட்பட்ட தடியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.
 
       - சுந்தரர் (7-15-7)

 

பொருள்: ஐந்து தலைப் பாம்பினைச் மதியோடு  முடியில் வைத்துள்ள அழகனே , தேவர்கட்குத் தலைவனே , திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் அன்று உனக்கு ஆட்பட்டது , துன்பத்தால் வருந்துதற்கு அன்று ; துன்பத்தினின்றும் உய்ந்து , இன்பம் உற எண்ணிவந்தே உன் திருவடியை அடைந்தேன் ; அதனால் , நீ என்னை விரும்பாதொழியினும் , நான் உன்னை விரும்பியே நிற்பேன் ; ஆதலின் , நான் எய்தற்கு வைத்த குறியினை உயிருள்ள அளவும் எவ்வாற்றாலேனும் அடையவே நினைத்தேன்.

17 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு
வேழத் துரிபோர்த்தான் வெள்வளையா டான்வெருவ
ஊழித்தீ யன்னானை யோங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே.
 
          - திருநாவுக்கரசர் (4-19-7)

 

பொருள்: மதியத்தின் பிளவாக இரு முனைகளும் ஒத்த வெண்பிறையைச் சூடி, வெள்ளிய வளையல்களை அணிந்த பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்தவனாய், அடியவர்களின் பகைவருக்கு ஊழித்தீ போன்ற கொடியவனாய், கடலாற் சூழப்பட்ட உலகையே ஒலிமிக்க வேதகங்களாகிய குதிரைகள் பூண்ட ஆழித்தேராகக் கொண்ட சாதுரியனான பெருமானை நான் கண்டு  தரிசித்த தலம் ஆரூரே .

16 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபது நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநல மிகுவரே.
 
                               - திருஞானசம்பந்தர் (1-21-11)

 

பொருள்: இவ்வுலகில் புகழால் விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிரபுரநகர்த் தலைவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய உரைச்சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை, மிக்க வெற்றித்திரு, இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப்பெறுவர்.

15 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.
 
        - மெய்பொருள் நாயனார் (16)

 

பொருள்: உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட அம்முத்த நாதன் உள்ளே சென்ற பொழுதே, தன் மனத்தை அவனுடன் போக நிறுத்திய தத்தன் என்பான், ஒரு நொடிப் பொழுதில் சென்று, வாட்படையால் அவனை எறியத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், `தத்தா  அவர் நமர் ` என்றுகூறித் தம் நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்

12 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுந்தொண்டர் பாதங் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு.
 
         - காரைகாலம்மையார் (11-4-40)

 

பொருள்: மட நெஞ்சே, மூன்று அவையங்களால் தொண்டு செய்யும் தொண்டர் பாதத்தைச் சேர்; அல்லாதார் கூட்டத்தை விட்டு நீங்குவாயாக என்பர்.

11 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.
 
            - திருமூலர் (10-1-30)

 

பொருள்: சந்தனத்தில் கலந்து  கமழ்கின்ற கத்தூரி மணம் போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதிக்கின்றேன் .

10 July 2013

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

பாடலங் காரப் பரிசில்கா சருளிப்
பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத் தெம்பெரு மக்கள்
நெஞ்சினுள் நிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தின் னமுதைத்
திருவீழி மிழலையூர் ஆளும்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்
கெழுமுதற் கெவ்விடத் தேனே.
 
           - சேந்தனார் (9-5-12)

 

பொருள்: பாடப்படுகின்ற அணிகள் நிறைந்த பாடல் களுக்குப் பரிசிலாகப் பொற்காசுகளை வழங்கி மேம்பட்ட செந்தமிழ்ப் பாமாலைகளாகிய மலர்களைச் சூடி, எம்பெருமக்களாகிய தேவார முதலிகள் உள்ளத்திலே நீடித்து நிற்கும் அலங்காரத்துடன் நிறைந்து நின்றவனாய், அருச்சுனனுக்கு அருளுவதற்காக அழகிய வேட்டுவக் கோலம் பூண்ட அமுதமாய், திருவீழிமிழலை என்ற திருத்தலத்தை ஆளும், என்றும் அழிதலில்லாத புகழைஉடைய பொன்நிறக் கற்பகம் போல்பவனாகிய எம்பெருமானை அடைவதற்கு அடியேன் எந்த தகுதியையும் உடையேன் அல்லேன்.

09 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

            - மாணிக்கவாசகர் (8-7-1)

பொருள்: பெண்ணே !! முதலும் முடிவும் இல்லாத அருட் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!

08 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை
கல்லா தேபல கற்றேன்
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லே னல்லேன் பொன்னடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய
நல்லே னல்லேன் நானுனக் கல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.
 
             - சுந்தரர் (7-15-4)

 

பொருள்: திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் உனது புகழைக் கல்லாதேனல்லேன்,  அடிமைச் செயல்களைப் பிறரிடம் கல்லாமலே நீ உள்நின்று உணர்த்த அவை எல்லா வற்றையும் கற்றேன் ; அங்ஙனங் கற்றதற்குத்தக நினது வழியில் நில்லாதவனல்லேன் ; அங்ஙனம் நின்றாரது வரலாறுகளை நினைய மாட்டாதவனல்லேன் ; உனது பொன் போலும் திருவடிகளைப் பரவு மிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன் ; உனக்கு அல்லது வேறு ஒருவற்கு நான் உறவினன் அல்லேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

05 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏறேற்ற மாவேறி யெண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தில்
நீறேற்ற மேனியனாய் நீள்சடைமே னீர்ததும்ப
ஆறேற்ற வந்தணனை நான்கண்டதாரூரே.
 
              - திருநாவுக்கரசர் (4-19-4)

 

பொருள்: மேம்பட்டதான காளையை வாகனமாக இவர்ந்து எண்வகை அடியவர் கூட்டங்களும் தன்னைப் பின் தொடர வருவானாய், பகைவராய் எதிர்த்தாருடைய வலிய மதில்களைக் கோபித்தவனாய், சுடுகாட்டுச் சாம்பல் பூசிய மேனியனாய், நீண்ட சடைமுடியின் மீது நீர் நிறைந்து அலை எறியுமாறு கங்கையை ஏற்ற சடையனாய் உள்ள பெருமானை நான் தரிசித்த இடம் ஆரூராகும்.

04 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கதமிகு கருவுரு வொடுவுகி ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக ழெயிறத னுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய வெழிலரி வழிபட வருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுர நினைபவர் நிலவுவர் படியிலே.
 
          - திருஞானசம்பந்தர் (1-21-7)

 

பொருள்: வராக அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே மேருமலையை  கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்

03 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்.
 
                - மெய்ப்பொருள் நாயனார் புராணம் (15)

 

 பொருள்: தன் கையில் வைத்திருந்த வஞ்சனையாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள்ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி அந்நாயனார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.

02 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மறுவடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.

           - காரைகாலம்மையார் (11-4-36)

பொருள்: கங்கைவார் சடைமேல் நாகத்தை வைத்தீர். அதற்கு அஞ்சி பிள்ளை மதி வளருமோ!  தேய்ந்து அல்லவா உழலும். பகையான பம்பையும் மதியையும் ஒன்றாக வைத்ததை ஏலனம் செய்வது போல் உயர்த்தி கூறுவது. 

01 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே.
 
         - திருமூலர் (10-1-26)

 

 பொருள்: வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம்போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை `வருக` என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ` என்று சிலர் ஐயுறுவர். `எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே. நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுவதற்கே.