28 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்
அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மிழலைவேந் தேஎன்
றாந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனககற் பகமே.
 
            - சேந்தனார் (9-5-11)

 

பொருள்: உள்ளத்தில்  பொருந்துமாறு இனிய ஞானஒளியைப் பரப்பி, உயிரினங்கள் மாட்டுத் தன் கருணையைப் பொழிகின்ற உமையின்  கணவனாய், வளம் பொருந்திய கங்கையையும் பிறையையும் சூடியவனாய், இளைய காளைமீது வருபவனாய் உள்ள ஒளி விளங்கும் திருவீழிமிழலையில் உள்ள, அரசே என்று என்னால் இயன்றவரையில் முருகன் தந்தையாகிய அப்பெருமானை அடியேன் குரல்வளை ஒலி வெளிப்படுமாறு அழைத்தால், அடியேன் பற்றுக்கோடாகக் கொண்ட பொன்நிறம் பொருந்திய கற்பகமரம் போன்ற அப்பெருமான் அடியேன் பக்கல் வரத் தவறுவானோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...