31 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அப்போதுவந் துண்டீர்களுக்
கழையாதுமுன் னிருந்தேன்
எப்போதும்வந் துண்டால்எமை
எமர்கள்சுழி யாரோ
இப்போதுமக் கிதுவேதொழில்
என்றோடிஅக் கிளியைச்
செப்பேந்திள முலையாள்எறி
சீபர்ப்பத மலையே

                -சுந்தரர்  (7-79-7)


பொருள்: தினைப்புனத்தைக் காக்கின்ற , கிண்ணம் போலும் , உயர்ந்து தோன்றும் , இளமையான தனங்களையுடைய குறமகள் , தினையை உண்ண வந்த கிளிகளைப் பார்த்து , ` முன்னே வந்து தினையை உண்ட உங்களுக்கு இரங்கி , உங்களை அதட்டாது அப்போது வாளா இருந்தேன் ; ஆயினும் , நீவிர் இடையறாது வந்து தினையை உண்டால் எங்களை , எங்கள் உறவினர் வெகுள மாட்டார் களோ ? ஆதலின் இப்போது உமக்குச் செய்யத் தக்க செயல் இதுதான் ` என்று சொல்லி , அவைகளைக் கவணால் எறிகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபெருமானது மலை .

29 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

               - திருநாவுக்கரசர் (4-88-2)


பொருள்: பழனத்து அரசே !  எல்லா  திசைகளையும் காக்கும் தேவர்கள் உன்னைச்சுற்றி நிற்கின்றனர் . நின் திருக்கோயில் வாயிலில் மற்றுமுள்ள தேவர்கள் நிற்கின்றனர் . திருமாலும் பிரமனும் வந்து உன் திருவடிக் கீழ்ப்பொருந்தி நின்று நீ இடும் கட்டளை யாது என்பதனை அறிய ஈடுபாட்டோடு நிற்கின்றனர் . இங்ஙனம் தேவர்கள் வழிபடக் காத்துக் கிடக்க வைக்கும் இயல்பினனாகிய நீ , அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக்கொண்டு அருள் செய்வாயாக .

26 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறு மென்பு மொளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
ஆலும் வடுகூரி லாடும் மடிகளே.

                 -திருஞானசம்பந்தர்  (1-87-2)

 

பொருள்: பால், நறுமணம் மிக்க நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடி, பொருந்துவதான வெண்ணீறு, என்புமாலை ஆகியவற்றை ஒளிமல்க அணிந்து அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் அன்னங்கள் கூடி ஆரவாரிக்கும் வடுகூரில் நம் அடிகளாகிய இறைவர் மகிழ்வோடு ஆடுகின்றார்.

24 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அப்பெருங் கல்லும்அங்
கரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில்
செறித்த பாசமும்
தப்பிய ததன்மிசை
இருந்த தாவில்சீர்
மெய்ப்பெருந் தொண்டனார்
விளங்கித் தோன்றினார்.

                    -திருநாவுக்கரசர் புராணம்  (128)


பொருள்: சொற்றுணை வேதியன்  என்ற பதிகம் பட ,அப்பெரிய கல்லும், அங்குத் திருநாவுக்கரசர் அதன்மீது வீற்றிருக்கத் தெப்பமாக மிதக்க, அவரது திருமேனியைப் பிணித்திருந்த கயிறும் அறுபட்டது. அக்கல்லாகிய தெப்பத்தின் மேல் வீற்றிருந்த கெடுதல் இல்லாத சிறப்பினையுடைய மெய்ப் பெரும் தொண்டரான நாவரசரும் விளங்கித் தோன்றினார்.

23 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

                   -திருமூலர்  (10-3-10,8)


பொருள்: தாத்துவிகங்களாகிய தனு, கரணம் புவனம், போகம் என்னும் அனைத்துப் பந்தங்களையும் கடந்தபின், அவற்றிற்கு நிரம்பிய காரணமாகிய தத்துவங்கள் ஏழனது இயல்பும் தன் அறிவிடத்தே இனிது விளங்கித் தோன்றவும், இடையறாது கிளைத்து வருகின்ற வினையாகிய காரணம் கெட்டொழியவும் அடைவுபடப் பயின்ற யோகத்தால் மறுமையில் தனது கடவுளோடு ஒப்ப இருத்தல், சமாதியாலே பெறத்தக்கதாம்.

22 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


புரமன் றயரப் பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே.

            -திருக்கோவையார் (8-23,6)


பொருள்:  புரம்வருந்த அன்று பொருப்பாகிய வில்லை யேந்தி;  அயனையன்று சிரமரிந்த வனது பெரியபனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு;  தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று;  மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி; அன்றி உயிர்கவர வெகுண்டு;  வான் சரத்தைத் தருமாயின்; ஒக்கும்

19 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாவின்மிசை யரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக்
கடியானடித் தொண்டன்
தேவன்திருக் கேதாரத்தை
ஊரன்னுரை செய்த
பாவின்றமிழ் வல்லார்பர
லோகத்திருப் பாரே

            - சுந்தரர் (7-78-10)


பொருள்: தமிழ்ப்பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும் , திரு ஞானசம்பந்தரும் , மற்றவர்களும்  , சிவனடியார்களுக்கு அடிய னாகி , அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன் , இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய , இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவ லோகத்தில் இருப்பவராவர் .