24 April 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க் கவுணி
நடையார்பனுவன் மாலையாக ஞானசம் பந்தன்நல்ல
படையார்மழுவன் மேன்மொழிந்த பல்பெயர்ப் பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருல காள்பவரே.

                       -திருஞானசம்பந்தர்  (1-63-12)


பொருள்: கொடிகளோடு கூடிய மாடவீடுகளை உடைய வீதிகள் சூழ்ந்த கழுமலம் என்னும் சீகாழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் சந்தநடைகளோடு கூடிய இலக்கிய மாலையாக மழுப்படையை உடைய சீகாழி இறைவர்மேற்பாடிய பல்பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும் வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள் அமரருலகினை ஆள்வர்.

21 April 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கோட்டு மலரும் நிலமலரும்
குளிர்நீர் மலரும் கொழுங்கொடியின்
தோட்டு மலரும் மாமலருஞ்
சுருதி மலருந் திருவாயில்
காட்டு முறுவல் நிலவலரக்
கனக வரையிற் பன்னகநாண்
பூட்டும் ஒருவர் திருமுடிமேல்
புனைய லாகும் மலர்தெரிந்து.

               -முருக நாயனார்  (8)


பொருள்: மரத்தில் மலரும் பூக்களும், நிலத் தில் படர்ந்திருக்கும் செடிகளில் மலரும் பூக்களும், குளிர்ந்த நீரில் மலரும் பூக்களும், செழித்த கொடிகளில் மலரும் பூக்களும், ஆகப் பெருமை பொருந்திய இவ்வகையான மலர்களை எல்லாம், மறைகள் மலரும் திருவாயில் காட்டிடும் சிறந்த புன்முறுவலின் நிலவு அலர்ந் திடக் காட்டி, அம்முறுவலுடன், பாம்பாகும் நாணினைப் பூட்டி, முப் புரம் எரிசெய்த ஒருவராய பூம்புகலூர்ப் பெருமானின் திருமுடிமேல், சூட்டுதற்காம் மலர் வகைகளைத் தெரிந்தெடுத்து,

20 April 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே. 

                    -திருமூலர்  (10-2-8,6) 


பொருள்: சிவபெருமானிடம் எஞ்ஞான்றும் குறையிரத்தற்குக் கூடுபவர்களாகிய தேவர்களுட் சிலராகிய, மாவலியை நேரே பொருது வெல்லமாட்டாது வஞ்சனையால் மூவடி மண் இரந்து வென்ற மாயோனும், தானே அறிந்து படைக்கமாட்டாது வேதப் பாக்களை உருச்செய்து அறிந்து உலகங்களைப் படைக்கின்ற பிரமனும், அவருட் சிலரை நோக்கித் தவம்செய்து சிலவற்றைப் பெறும் முனிவர்களும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எதிரிட்டுக் காண வல்லராவரோ!

19 April 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 

                -மாணிக்கவாசகர்  (8-47-7)


பொருள்: என் மனத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் பெருக்கிய ஒளி வந்து இனிப் பிறவிக்கு வாராத வழியை அருளிய திருப்பெருந்துறை இறைவன் , எனக்கு ஆராவமுதாக அமைந்து இருந்தது அன்றோ?.

18 April 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காய்சின மால்விடை மாணிக்
கத்தெங் கறைக்கண்டத்
தீசனை ஊரன் எட்டோ
டிரண்டு விரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானியப்
பனடித் தொண்டன்றான்
ஏசின பேசுமின் தொண்டர்
காள்எம் பிரானையே.

                   -திருநாவுக்கரசர்  (7-44-10)


பொருள்: அடியவர்களே , காய்கின்ற சினத்தையுடைய , பெரிய விடையை ஏறுகின்ற எங்கள் மாணிக்கம் போல்பவனும் , கறுப்புநிறத்தையுடைய கண்டத்தையுடைய இறைவனும் ஆகிய பெருமானை , அவன் அடித்தொண்டனும் , மிக்க புகழையுடைய வனப்பகைக்கு ஞானத்தந்தையும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடியனவும் , ஏசிப் பாடியனவும் ஆகிய இப்பத்துப் பாடல்களால் , எம் பெருமானைப் பாடுமின் .

13 April 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


பலவுநா டீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய வரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.

                    -திருநாவுக்கரசர்  (4-61-8)


 பொருள்:பலகாலமாக இவ்வுலகில் கூட்டமாகத் தோன்றித் தீமைகளையே செய்து கொல்லும் வில்லை ஏந்திய கொடியவர்களான அரக்கர்களைக் கொன்று வீழ்த்திய வில்லை ஏந்திய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தலையினால் வணங்கும் அடியவர்கள் பின் உடம்பாலும் முழுமையாக விழுந்து வணங்குவார்கள் . அச் செயல் தவப் பயனால் நிகழ்வதாகும் .

12 April 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக் கென்றயலே
கயலார்தடங்க ணஞ்சொனல்லார் கண்டுயில் வவ்வுதியே
இயலானடாவி யின்பமெய்தி யிந்திரனாண் மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை வேணு புரத்தானே.

                            -திருஞானசம்பந்தர் (1-63-2)


பொருள்: இந்திரன் விண்ணுலகை இழந்து மண்ணுலகம் வந்து முறைப்படி ஆட்சி நடத்தி மகிழ்வெய்தி வழிபட்டு வாழ்ந்த சிறப்பினதும், பெரிதாய முரசுகள் ஓங்கி ஒலிப்பதும் நீதி நிலை பெற்றதும் ஆகிய வேணுபுரத்தில் எழுந்தருளிய இறைவனே, கங்கை தங்கிய சடைமுடியில் ஒரு திங்களைச் சூடி மகளிர்இடும் பலியை ஏற்பதற்கு என்றே வந்து அதனின் வேறாய் மீன் போன்ற தடங்கண்களையும் அழகிய சொற்களையும் உடைய இளம்பெண்களின் கண்கள் துயில் கொள்வதைக் கவர்ந்து அவர்களை விரகநோய்ப் படுத்தல் நீதியோ?