30 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரணிதிகழ்திரு மார்பில்வெண்ணூலர் திரிபுரமெரிசெய்த செல்வர்
வாரணிவனமுலை மங்கையோர்பங்கர் மான்மறியேந்திய மைந்தர்
காரணிமணிதிகழ் மிடறுடையண்ணல் கண்ணுதல் விண்ணவரேத்தும்
பாரணிதிகழ்தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே.
 
                                -திருஞானசம்பந்தர்  (1-41-1)

 

பொருள்: ஒப்பற்ற  அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். திரிபுரங்களை எரித்த வீரச்செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும் திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர் நெற்றிக்கண் உடையவர்  விண்ணவர் போற்றும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் ஆவார்.  

29 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

ஊனமுது கல்லையுடன்
வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள்
மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு
தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது
தித்திக்கும் எனமொழிந்தார்.
 
                   -கண்ணப்ப நாயனார் புராணம்  (150)

 

பொருள்:  மாமிச அமுதை இறைவனின் திருமுன்னிலையில் வைத்து, எம் ஐயனே! இது முன்னை நாளில் எடுத்து வந்ததினும் நன்றாகும், பன்றியுடன் மான் கலைகள், காட்டுப்பசு ஆகிய இவை களின் நல்லுறுப்புகளின் இறைச்சியும் உள்ளது, அடியேனும் சுவை பார்த்தேன், அத்துடன் தேனும் இவற்றுடன் கலந்துள்ளது, தித்திக்கும், என மொழிந்தார்.

26 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.

பெண்ணீர்மை காமின் பெருந்தோளி ணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீர்க்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.

                        -சேரமான் பெருமாள் நாயனார்  (11-8-197)

25 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.
 
                        -திருமூலர்  (10-11-3)

 

பொருள்: செல்வத்தால்  ஆழும் கீழ்மகனும், அறிவை மறைக்கின்ற அறியாமையாகிய இருளில் புல்லறிவாகிய மின்னல் ஒளியைப் பெற்று நிற்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்டிரது மயக்கத்தில் வீழ்தலல்லது, அம்மயக்கத்தை உடைய மனத்தைத் தேற்றி நன்னெறிப்படுத்த மாட்டுவாரல்லர்.

24 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே.
 
                   -கண்டிராதித்தார்  (9-20-10)
 
பொருள்: சிறப்பான் மேம்பட்ட தில்லைநகரில் உள்ள செம் பொன் அம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் சிவபெருமானைப்பற்றி மேகங்கள் பொருந்திய சோலைகளை உடைய உறையூர் மன்னனும், தஞ்சைமாநகரில் உள்ள அரசனும் ஆகிய கண்டராதித்தன் திருவருளோடு கலந்து தெவிட்டாத இனிய சொற்களால் பாடிய அரிய தமிழ்ப் பாமாலையைப் பொருளுணர்ந்து கற்றுப் பாட வல்லவர்கள், ஒருமுறை சென்றால் மீண்டும் அவ்விடத்தினின்றும் திரும்பி நில உலகிற்குப் பிறப்பெடுக்க வாராத வீட்டுலகில் பெருமையோடு பேரானந்தத்தை அடைவார்கள்.

23 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூத்தாரும் பொய்கைப்
புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி
கூடும்வண்ணம் தோணோக்கம்.
 
                  -மாணிக்கவாசகர்  (8-15-1)

 

 பொருள்: மலர்கள் பூத்து இருக்கின்ற தடாகநீர் இதுதான் என்று எண்ணிக் கானலை முகக்கின்ற அறிவிலியினது குணம், எங்களுக்கு உண்டாகாமல் நீக்கினவனே! தில்லை அம்பலத்தில் நடனம் செய்கின்ற கூத்தனே! உனது செம்மையான திருவடியை அடையும்படிஎன்று பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

22 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஊறு வாயினன் நாடிய வன்றொண்ட னூரன்
தேறு வார்சிந்தை தேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறு வாரெய்த மானிடை யாறிடை மருதைக்
கூறு வார்வினை எவ்விட மெய் குளிர்வாரே.
 
                            - சுந்தரர் (7-31-10)

 

பொருள்: வெள்ளி விடையை ஏறுகின்றவரும் , யாவராலும் அடையப்படும் பெருமானுமாய் உள்ள இறைவரது இடையாற்றையும் , இடைமருதையும் , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் சுவை ஊறும் வாயினையுடையவனாய் , தெளியத் தகுவாரது உள்ளங்கள் தெளிதற்கு வாயிலாய் உள்ள தலங்களோடு நினைந்து பாடிய இப்பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினைத் துன்பங்கள்  நீங்கும் , மெய்  குளிர்வார்கள் .