31 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.
 
                       -திருநாவுக்கரசர்  (4-37-1)

 

பொருள்: காலன்  கீழே விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப் பெற்றேன் . ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத் திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற நீலகண்டனே ! தற்போதம் அற்று நின்போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத் தியானிக்கின்றேன் .

30 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 

நயர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வா மிவையுற் றுணர்வார்க்கே.
 
              - திருஞானசம்பந்தர் (1-38-11)

 

பொருள்: உயர்ந்தவர்கள்  வாழும் சீகாழிப்பதியுள் வாழும் ஞானசம்பந்தன், தன்னை வழிபடுவாரின் மயக்கத்தைத் தீர்த்தருளும் மயிலாடுதுறை இறைவனைப் பற்றித் திருவருள் உணர்த்தும் செயலால் உரைத்தனவாகிய இத்திருப்பதிகப் பாடல் களாகிய இவை பத்தும் உற்றுணர்வார்க்கு உயர்வைத் தரும்.

27 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு
தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு
மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த
முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு
சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத்
திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான்.
 
                  - கண்ணப்ப நாயனார் புராணம் (12-54)

 

 பொருள்: தந்தையின் நிலையைத் உள்ளே கொண்டு, தம் மனத்தில் கவலை கொண்டு, பின்னர்த் தந்தை யின் தளர்வால் தங்கள் குலத்தலைமைக்கு வந்த குறைபாட்டை நிரப்ப வேண்டும் என்று மனத்தில் கொண்ட குறிப்பால், அப்பொறுப்பினை மறாது ஏற்றுக் கொண்டு, முன்னாகத் தந்தையின் திருவடிகளை முறைப்படி வணங்கி, முறைமையால் அவன் கொடுக்கும் சுழல் வாளையும் உடைத்தோலையும் வாங்கிக் கொண்டு, உளத்தில் அரசியல் பளுவைக் கொண்ட திண்ணனார்க்கு, சிறந்த தந்தையாகிய நாகன், மகன் நிலைகண்டு முகமலர்ந்து இதனைச் சொல்லுகின்றான்.

26 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான்
விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார்

              - சேரமான்பெருமாள் நாயனார் (11-8-33,34)

பொருள்: தும்புரு நாரதர்கள் பாட, நுன்னிடையர்கள் ஆட, சிவபெருமான் விண்ணவர்கள் பணிய விடை மேல்  

25 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.
 
                  - திருமூலர் (10-8-1)

 

 பொருள்: பூங்கொம்பில் தளிர் முதலாக அதனால் தோற்றுவிக்கப்படுகின்ற பலவும் அங்ஙனம் தோற்றுவிக்கப் பட்டவாறே நில்லாது உருமாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லா தவர், ஆசிரியர் உண்மையைச் செவியறிவுறுத்துச் சிவபெருமானது திருவடியை அடைய அழைக்கின்ற பொழுதே கேளாது பின்பு முயல்வோம் என்று காலம் கடத்துவர். 

24 March 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே.
 
               -பூந்துருத்தி காடநம்பி  (9-18-2)

 

பொருள்: சிவனை  பத்தியோடு தியானிப்பவர்கள் அவனுடைய அருளைப்பருக, அவர்கள் பருகுந் தோறும் அமுதம்போல அவர்களிடத்தில் அவ்வருள் இனிமை வழங்கும். இவருடைய அழகிய உருவம் ஒளிவீசிக் கொண்டிருப் பதைக் காணுங்கள். எம்பெருமானார் அருட்சத்தியாகியும், மங்கல மாகிய சிவமாகியும், உலகுகளை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகியும், உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகியும் விளங்கித் திருவாரூர் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் அசபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார்.

23 March 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

பன்னாட் பரவிப்
பணிசெய்யப் பாதமலர்
என்னாகம் துன்னவைத்த
பெரியோன் எழிற்சுடராய்க்
கன்னா ருரித்தென்னை
யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.
 
              -  மாணிக்கவாசகர் (8-13-9)

 

பொருள்:  பல நாள் துதித்து, பணிவிடை செய்யும் படி, தன் திருவடி மலரை, என் மனத்தில் பொருந்த அமைத்த பெருமையையுடையான், அழகிய சோதியாகி, முற்படக் கல்லில் நார் உரித்த பிறகு என்னை ஆண்டருளினவனுடைய இரண்டு திருவடிகள் அழகியனவாயிருந்த விதத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ