18 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்
எண்ணில்பல் கோடிதிண் டோள்கள்
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்
நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
இவர்நம்மை ஆளுடை யாரே.
 
     - சேந்தனார் (9-5-9)

 

பொருள்: பலகோடிக் கணக்கான பாதங்களையும், பலமுடிகளையும், பல வலிய தோள்களை யும், பலகோடிக்கணக்கான திருவுருவங்களையும், திருநாமங்களை யும், அழகிய முக்கண்கள் பொருந்திய முகங்களையும் செயல்களையும் கொண்டு எல்லைக்கு அப்பாற்பட்டவராய் நின்று, அந்தணர் ஐந்நூற்றுவர் துதித்து வழிபடுகின்ற எண்ணற்ற பலகோடி நற்பண்புகளை உடையவர் அழகிய திருவீழிமிழலையை உகந்தருளியிருக்கும் பெருமானார். இவர் நம்மை அடியவராகக் கொள்ளுபவர் .

17 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச
லென்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண்
நகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற்
பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந்
தடர்வனவே.
 
        - மாணிக்கவாசகர் (8-6-34)

 

பொருள்: வெண்மையான பல்லும் , கருமையான கண்ணும், பாற்கடலில் தோன்றிய திருமகள் வணங்கிப் பொருந்திய அழகிய திருப்பாதங்களையுடைய, பாம் பணிந்த பெருமானே! அரசனே! மணம் பொருந்திய முடியினையுடை யவனே! மலைகள் ஒன்று சேர்ந்து தாக்கினாற்போல, கொடிய வினைப் பயன்கள் வந்து தாக்குகின்றன. அறிவில்லாத சிறியேனது குற்றத் திற்குத் தீர்வாக, அஞ்சற்க என்று நீ அருள் செய்தல் அல்லாது விட்டு விடுவாயோ?

14 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்
தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்

            - சுந்தரர் (7-14-12)

 

13 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.

      - திருநாவுக்கரசர் (4-18-10)

பொருள்: சிவபெருமானை சுற்றியுள்ள பாம்பின் கண், பல், விரலால் நெரித்த இராவணன் தலை, அடியார் செய்கைகள்  பத்து ஆகும்.  

12 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை பவர்திரு மகளொடு திகழ்வரே.

            - திருஞானசம்பந்தர் (1-21-2)

பொருள்: பெரிய மலைகள் சூழந்த மனிதர்கள் முதல் தேவர் வரை வாழும் உலகங்கள் நிலைபெற, அலைகடலில் துயில் கொள்ளும் அரி வந்து வணங்கும் சிவபுரம் உள்ள சிவனை உள்ளன்போடு 
நினைபவர்களிடம் திருமகள்  (செல்வம்) வந்து சேரும். 

11 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.
 
        - மெய்ப்பொருள் நாயனார் புராணம் (7)

 

பொருள்: உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச் சுவடிகளைத் தாங்கிக் கொண்டு,  தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய் யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு முத்தநாதன் சென்றான்.

10 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.

          - காரைகாலம்மையார் (11-4-32)