09 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு
நினைப்பிரிந்து
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன்
கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி
வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக்
கொழுமணியே.
 
             - மாணிக்கவாசகர் (8-6-26)

 

பொருள்: மிக பெரிய கங்கை நீரையுடைய பள்ளத்துள், எதிர்த்து நிற்றலையுடைய சிறிய தோணியின், தோற்றம் போல வெண்மை நிறமும்  பொருந்திய பிறைச்சந்திரன் தவழ்கின்ற சடையினையுடைய, பரமாகாயத்திலுள்ள, செழுமை யாகிய மாணிக்கமே! மிகுந்த நீரானது வற்றிப்போக, சிறிய மீன்கள் வாடினாற்போல உன்னை விட்டு நீங்கிய என்னை விட்டு விடுவாயோ?

08 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மத்தம்மத யானையின்
வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப்
பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
 
           - சுந்தரர (7-13-2)

 

பொருள்:  மதயானைகளின் கொம்புகளைத் தள்ளிக்கொண்டுவந்து அவற்றில் உள்ள முத்துக்களைக் கரையில் எறிவதாகிய  பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ள ,  பக்தர்கள்  பலகாலும் வந்து ஏத்தி வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே , உன்பால் அடியேன் தவநெறியையே  தவிர வேறொன்றையும் வேண்டிகொள்ளேன் .

05 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தா ரிலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்து மாயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
 
           - திருநாவுக்கரசர் (4-16-10)

 

பொருள்: கழுத்துக் கறுத்து நீலகண்டர், தம்  கால் விரலை ஊன்றி இராவணனுடைய பத்துத் தலைகளையும் செயலற்றவை ஆக்கினார் . ஐம்புல நுகர்ச்சியையும் துறந்தவர் . பார்வதியைப் பாகமாகக் கொண்டவர் எம் புகலூர்ப் புரிசடையாரே. 

04 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை கழுமல முறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி யுடையவர் விதியுடை யவர்களே.
 
               - திருஞானசம்பந்தர் (1-19-11)

 

பொருள்: நிறைய  நூல்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை நன்கு உணர்ந்தவனும், மிக்க புகழாளனும் ஆகிய ஞானசம்பந்தன், நீர்த்துளிகளோடு மடங்கும் அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின் கரையில் விளங்கும் கழுமலம் இறைவனது உறைவிடம் என மிகவும் புகழ் பரவிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடிய இப்பத்துப் பாடல்களையும் ஓதி மனம் பொருந்த வைக்கும் அன்பர்கள், நிறைந்த ஞானமும் நல்விதியும்  உடையவர்களே .

03 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்
இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்
தமக்கு நாம்இன் னடிசில் தகவுற
அமைக்கு மாறெங்ங னேஅணங் கேயென.

                - இளையான்குடிமாற நாயனார் புராணம் (11)

 

பொருள்: நம் வீட்டில் நமக்கு முன்னமேயே உணவின்றி வறுமையாக இருப்பினும், மாதை ஒரு கூற்றில் உடைய சிவபெருமானுக்குத் தொண்ட ராகிய இவ்வடியவருக்கு நாம் ஊட்டுதற்குரிய இனிய திருவமுதைத் அமைக்கும் வகை எவ்வாறு? என்று வினவவினார்.

02 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

         - காரைகாலம்மையார் (11-4-16)

பொருள்: எம்பெருமான் அருள் பெற்ற நமக்கு, இனி ஓர் இடர் இல்லை, இனிமேல் மீண்டும் ஒரு வினைக்கடலை உருவாக்கும் பிறவியென்னும் பிறப்பு நமக்கு கிடையாது.    

01 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.
 
               - திருமூலர் (10-1-13)

 

பொருள்: நாம் காயம், கத்தூரி என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு மற்ற  தேவர்களின்  அருள் ஈடாகாது;