29 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை 


மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே. 

                   -திருமூலர்  (10-3-7,2) 


பொருள்: மேருமலையின் உச்சியினின்றும் வானீர் அருவி எப்பொழுதும் வீழ்ந்துகொண்டிருக்கும். வில் வடிவாய் அமைந்த அம்பலத்தில் ஒளிவடிவாகிய சிவன், எல்லையில் இன்பத்தைத் தரும் ஆனந்தத் திருக்கூத்தினை எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். இவ்விரண்டையும் நான் நீண்ட சுழுமுனை நாடி வழியாகச் சென்று கண்டேன்.

28 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வருட்டின் திகைக்கும் வசிக்கின்
துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே.

            -திருக்கோவையார்  (8-18,5)


பொருள்: வசிக்கின் துளங்கும் இன்சொல்லின் வசித்து ஒன்று சொல்லலுறுவேனாயின் அக்குறிப் பறிந்து உண்ணடுங்காநிற்கும்;  செப்பும் வகை இல்லை இவ்வாறொழிய அறிவிக்கும் வகை வேறில்லை; அதனான், புரி குழலாட்கு எங்ஙன் சொல்லி ஏகுவன் சுருண்ட குழலை யுடையாட்குப் பிரிவை எவ் வண்ணஞ் சொல்லிப் போவேன்! ஒருவாற்றானுமரிது எ - று.

27 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தொறுவில் ஆன்இள ஏறு
துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்
செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள்
காண்தகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு
பூசுதல் மன்னும்ஒன் றுடைத்தே

               - சுந்தரர் (7-76-2)


பொருள்:  இளைய ஆனேறு , கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி , வயல்களில் உள்ள வாளைமீன்கள் ஓடவும் , செவ்வரிகளையுடைய கயல்மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும் , பகையில்லாத மனத்தை உடைய சான்றோர் அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திரு வாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , குற்றமற்ற வெள்ளிய நீற்றைப் பூசுதல் , சிறந்ததொரு கருத்தை உடையது .

24 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இலங்கைக் கிறைவ னிருபது தோளு முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி யவனைக் கருத்தழித்த
துலங்கன் மழுவினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

                     -திருஞானசம்பந்தர்  (4-85-10)


பொருள்: இராவணனுடைய இருபது தோள்களும் தலைகளும் நெரியுமாறும் அவன் மனம் கலங்குமாறும் கால்விரலை ஊன்றி அவன் மனமதர்ப்பை அழித்த , ஒளி வீசும் மழுவை ஏந்திய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமேல் விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் .

23 August 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற வடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடனாகைக் காரோ ணத்தானே.

              -திருஞானசம்பந்தர்  (1-84-10)


 பொருள்: நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழிதூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

22 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்
வீரட்டம் அமர்ந்த பிரானருளால்
பாவுற்றலர் செந்தமி ழின்சொல்வளப்
பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கர சென்றுல கேழினும்நின்
நன்னாமம் நயப்புற மன்னுகஎன்
றியாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா
னிடையேயொரு வாய்மை எழுந்ததுவே.

                - திருநாவுக்கரசர் புராணம் (74)


பொருள்: திருவீரட்டானத்து அமர்ந்திருக்கும் இறைவரின் திருவருளால், பாடற்கு இயைந்து அலர்ந்த செந்தமிழின் இனிய சொல்வளம் கொண்ட திருப்பதிக மாலையைப் பாடியருளிய முறையினால், `திருநாவுக்கரசு` என்று உனது பெயர் பலரும் விரும்புமாறு ஏழு உலகங்களிலும் நிலைபெறுவதாகுக! என எல்லார்க்கும் வியப்பு உண்டாகுமாறு வானில் ஓர் ஒலி எழுந்தது.

20 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே. 

                -திருமூலர்  (10-3-6,10)


பொருள்: பிரத்தியாகாரத்தை மனப்பயிற்சி அளவில் செய்தால், கால வரையறை இடவரையறைகள் இன்றி, எல்லா வற்றையும் ஒருங்கே உணரத்தக்க யோகக் காட்சியைப் பெற முடியும். அதனை அஞ்ஞான இருள் நீங்கி இறைவனை உணரும் கருத்தோடு செய்யின், தான் இறைவனை உணர்தலேயன்றிப் பிறரையும் உணரச் செய்கின்ற கடவுள் தன்மையையும் உடையவனாகலாம்.

17 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


வாரிக் களிற்றின் மருப்புகு
முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே.

            -திருக்கோவையார்  (8-17,16) 


பொருள்:  களிற்றின் மருப்புக்களினின்று முக்க முத்துக்களை; வேரிக்கு விலையாக முகந்துகொடுக்குஞ் சிறந்த மலைக்கணுண்டாகிய நாட்டையுடையாய்; விரியுந் திரையையுடைய யாறாகிய பெண்ணிற்குக் கொடுத்தற்குப் பொருந்திய;  பெரிய சடைமுடியையுடைய நம்பரது தில்லை யினுளளாகிய ஏரை யுடைய இக்களிக் கரு மஞ்ஞையை யொப்பாள்; இத்தன்மையை யெய்துவதென்? நீயுரை

16 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தந்தை தாய்உல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

          - சுந்தரர் (7-75-4)

 

பொருள்: உலகம் எல்லாவற்றிற்கும் தந்தையாய் , ஒப்பற்ற மெய்ப்பொருளாய் உள்ளவனும் , உண்மையான தவத்தைச் செய் வோர்க்கு உறவான பெருமானும் , அன்புடையவர்க்குச் சிறந்த தலைவனும் ஆகிய , அழகிய , குளிர்ந்த பூக்களையுடைய , நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே எம் தந்தை ` என்று அறிந்து , நாள்தோறும் அடிபணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்

14 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

                 -திருநாவுக்கரசர்  (4-85-1)


பொருள்: காலையிலே எழுந்து நறுமணம் கமழும் தூய மலர்களைக் கொண்டு வந்து வானத்திலுள்ள தேவர்கள் விரும்பும் திருத்தலம் , நறுமண மலர்களால் வாசனை எங்கும் வீசும் சோலைகளை உடைய திருச்சோற்றுத்துறையாம் . அச்சிவ பெருமானுடைய சடையில் வீற்றிருக்கும் பிறைச் சந்திரன்அல்லவோ எம்பெருமானுக்கு அழகிய அணிகலனாய் வாய்த்திருக்கின்றது .

13 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாட னாரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாடந் நெடுவீதிக்
கண்ணார் கடனாகைக் காரோ ணத்தானே.

                   -திருநாவுக்கரசர்  (1-84-2)


பொருள்: பெண்ணும் ஆணுமாய் ஓருருவில் விளங்கும் பெருமானும், பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும், மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப்பரப்புடைய கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

10 August 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


நீற்றால்நிறை வாகிய மேனியுடன்
நிறையன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியரை
மருளும்பிணி மாயை அறுத்திடுவான்
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
எனநீடிய கோதில் திருப்பதிகம்
போற்றாலுல கேழின் வருந்துயரும்
போமாறெதிர் நின்று புகன்றனரால்.

                -திருநாவுக்கரசர் புராணம்  (70)


பொருள்: திருநீற்றினால் நிறைந்த மேனியுடன், மிகுந்த அன்பு பொருந்திய மனத்தில் விருப்பம் மிகப், பகைவரின் முப்புரங் களை எரித்த வேதியரான வீரட்டானத்து இறைவரை, மயக்கத்தையும் சூலையையும், மாயையும் அறுக்கும் பொருட்டுக் `கூற்றாயினவாறு விலக்ககலீர்` எனத் தொடங்கும் பெருமையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் போற்றுவதால், உலகத்தில் ஏழு பிறப்புக்களிலும் வரும் துன்பமும் நீங்குமாறு திருமுன்பு நின்று பாடினார்

09 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே. 

            -திருமூலர்  (10-3-6,2)


பொருள்: உந்திக்குக் கீழ்ப்பன்னிரு விரற்கிடையளவில் உள்ள இடத்தில் மனத்தை நிலைபெறச் செய்வதாகிய இரகசிய முறையை உலகர் அறியார். அதனை அறிந்து மனத்தை அங்கே நிறுத்துவராயின், இறைவன் தானே வந்து அவர்களைத் தன்பால் வர அழைத்து, அங்கு வீற்றிருப்பான்.

07 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பரம்பயன் தன்னடி யேனுக்குப்
பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
தோன்றுமிக் குன்றிடத்தே.

             -திருக்கோவையார்  (8-17,2) 


பொருள்: இக்குன்றிடத்துத் தோன்றுமிடம்; தில்லையின் வானவனது வானகத்தைச் சேர்ந்த தெய்வமகளிர் தமதிடமோ; யானையினென்பை வேலியாக நட்ட குரம்பைகளையுடைய குறத்தியர் இடமோ? நீ கூறுவாயாக

06 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மறைக ளாயின நான்கும்
மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத் திறையும்
தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

                 -சுந்தரர்  (7-75-1)


பொருள்: வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும் , பல சமயங்களும் , அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும் , இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும் , வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே முதல்வன் ` என்று அறிந்து , நாள்தோறும் அடிபணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

03 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுண்முக்கண்
எம்மா னிவனென் றிருவரு மேத்த வெரிநிமிர்ந்த
அம்மா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

               -திருநாவுக்கரசர்  (4-84-10)


பொருள்: படம் எடுக்கும் மேம்பட்ட பாம்பினை ஒத்த அல்குலை உடையவளாய்ச் சிறிய பாதங்களை உடையளான பார்வதி அஞ்சக் கையிலே மேம்பட்ட கட்டமைந்த வில்லை ஏந்திய மன்மதனை அழித்த தெய்வமாகிய முக்கண்ணனாம் எம்பெருமான் என்று பிரமனும் திருமாலும் புகழும்படி தீத்தம்பமாக ஓங்கி வளர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடைய அடி நிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

02 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


வெரிநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வா ருயர்வா னடைவாரே.

                -திருஞானசம்பந்தர்  (1-83-11)


பொருள்:  வெள்ளம் உலகத்தை மூட, அவ்வெள்ளத்தே  மிதந்த வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியுள் தோன்றிய அழகியனவும் சிறந்தனவுமான வேதங்களில் வல்ல ஞானசம்பந்தனுடைய இத்திருப்பதிகப் பாடல்களை, விண்ணோர் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள அம்பர்மாகாளத்தை விரும்பித் தொழுது உருகி உரைசெய்பவர் உயர்ந்த வானோர் உலகத்தை அடைவார்கள்.

01 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சுலவிவயிற் றகம்கனலுஞ்
சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக்
கொண்டணையக் குலவரைபோன்
றிலகுமணி மதிற்சோதி
எதிர்கொள்திரு வதிகையினில்
திலகவதி யார்இருந்த
திருமடத்தைச் சென்றணைந்தார்.

                        -திருநாவுக்கரசர் புராணம்  (62)


பொருள்: சுழற்றிச் சுழற்றி வயிற்றுள் பற்றி எரியும் சூலை நோய் தம்முடனே தொடர, பொருந்தி எழும் விருப்பம் தம்மைக் கொண்டு செலுத்த, பெரிய மலை போன்று விளங்கும் மதிலின் ஒளி எதிர் தோன்றத், திருவதிகையில் திலகவதியார் இருந்த திருமடத்தைச் சென்று அடைந்தார்.