30 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தருக்கின வரக்கன் றேரூர் சாரதி தடை நிலாது
பொருப்பினை யெடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொடுங் கொடுப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

                       -திருநாவுக்கரசர்  (4-64-10)


பொருள்:  இராவணன் தன் தேரைச் செலுத்திய சாரதி தடுத்ததனை மனங்கொள்ளாது கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட தோள்களும் அழகிய பத்துத் தலைகளும் புண்ணாகுமாறு சிவபெருமானால் நெரிக்கப்பட்டு , அலறி , மறுபடி அவன் அன்போடு நினைந்து சிவபெருமான் திருவடிகளைத் துதிக்க , அவனுக்கு வீழிமிழலை சிவபெருமான் தம்முடைய வாளினை விருப்பத்தோடு வழங்கினார் .

29 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இருளைப்புரையு நிறத்திலரக்கன் றனையீ டழிவித்து
அருளைச்செய்யு மம்மானேரா ரந்தண் கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையாற்
றரளத்தோடு பவளமீனுஞ் சண்பை நகராரே.

                    -திருஞானசம்பந்தர்  (1-66-8)


பொருள்: நல்ல  மணத்தோடு மருள்  பண்ணை வண்டுகள் பாட, கடல் மலை போன்ற அலைக் கைகளால் முத்துக்களையும் பவளங்களையும் கொணர்ந்து சேர்க்கும் சண்பைநகர் இறைவன் இருள் போன்ற கரியநிறத்தினன் ஆகிய இராவணனின் வீரத்தை அழித்து அவன் உணர்ந்து வருந்த அருள் செய்த தலைவன்.

28 June 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


இப்படித்தா கியகடைஞர்
இருப்பின்வரைப் பினின்வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன்கழற்கே
விளைத்தஉணர் வொடும்வந்தார்
அப்பதியில் ஊர்ப்புலைமை
யான்றதொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார்
எனவொருவர் உளரானார்.

                      -திருநாளைப்போவார்  நாயனார்  (11)


பொருள்: இவ்வாறமைந்த புலையர்கள் வாழ்கின்ற அவ்விருப்பிடத்தில் வாழ்பவரும், தம் உண்மையான அன்பைச் சிவ பெருமான் திருவடிக்கே வைத்து வாழும் முன் உணர்வுடையவரும், அப்பதியில் வாழும் ஊரவர்க்கெல்லாம் தம் தொழில் வகையால் உரிமையான நிலமுடைவருமான குற்றமற்ற நந்தனார் என்ற சிறந்த பெயருடைய ஒருவர் வாழ்ந்து வந்தார்.

27 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே. 

                 -திருமூலர் (10-2-11,6)


பொருள்: இன்னும் வேறொருவகையாற் கூறுமிடத்து, `நித்திய சங்காரம், தூலம், சூக்குமம்` என்னும் இரண்டு உடம்புகள் உள்ளபொழுதும் அவற்றோடு ஒட்டாது நீங்கி நிற்றல்` எனவும், `ஆயுட் சங்காரம் தூல உடம்பு அழிந்தொழிதல்` எனவும், `சருவ சங்காரம் சூக்கும உடல் நீங்குதல்` எனவும் கூறுதற்குரியன. எனவே, திருவருட் சங்காரமாகிய அருளலே சிவப்பேறாகும்.

23 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு
களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு
கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு
மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும்
வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல்
பயின்றிடு மாகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள்
பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து
வெளிப்படு மாகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து
வெளிப்படு மாயிடிலே.

               -மாணிக்கவாசகர்  (8-49-1)


பொருள்: மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன், எழுந்தருளித் தோன்றுவனாயின், இரண்டு கண்களும், அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை மகளிரொடு கூடிவாழ்வதில் முடிவு பெற்றுவிடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தை மறத்தல் ஆகாது போகுமோ? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன், ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளும் தன்மைகளைப் பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் தோன்றுதல் ஆகாது போகுமோ?

22 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

                      -சுந்தரர்  (7-46-4)


பொருள்: கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே . நீர் வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர் ; மற்றும் , அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ , வீணை அழகுடையதாய் விளங்க , தெருவில் விடையை ஏறிச் செல்வீர் ; கொடியனவாகிய பேய்கள் சூழ நடன மாடுதலை மேற்கொண்டு . அழகுடையவராய் , மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ ? அல்லது பெருமையோ ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக ; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது ? சொல்லீர் .



21 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையில் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல வண்ணித்திட் டடியார்க் கென்றும்
வேலையி னமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

                       -திருநாவுக்கரசர்  (4-64-2)


பொருள்: காலை கதிரவனின்  ஒளியை உடைய திருமேனியராய் , இருள் போலக் கறுத்த கழுத்தினராய் , மாலையில் தோன்றும் பிறையணிந்த சடை முடியினராய் , தேனும் பாலும் கரும்பின் பாகும் கடலில் தோன்றும் அமுதமும் போல அடியவர்களுக்கு இனிப்பை நல்குபவராய் வீழிமிழலையில் உள்ள விகிர்தனார் விளங்குகிறார் .

20 June 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


பங்கமேறு மதிசேர்சடையார் விடையார் பலவேதம்
அங்கமாறு மறைநான்கவையு மானார் மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே.

                        -திருஞானசம்பந்தர்  (1-66-1)


பொருள்: மீன்கள் நிறைந்ததும், கப்பல்களை உடையதும் ஆன கடலிடையே வாழும் பரதவர்கள் வீட்டு முற்றங்களில் கூரிய மூக்கினை உடைய சங்குகள் முத்துக்களை ஈனுகின்ற கடற்கரை ஊராகிய சண்பை நகரில் மேவிய இறைவர் கலை குறைந்த பிறைமதி சேர்ந்த சடையினர். விடை ஊர்தியர், பலவாய் விரிந்த நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் விளங்குபவர்.

19 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


 நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தன ரவர்க்குப்
பாடு பெற்றசீர் உருத்திர பசுபதி யாராங்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.

                 -உருத்திர பசுபதி நாயனார்  (9)


பொருள்: உருத்திர மந்திரம் ஓதிய அன்பால் இறைவனின் திருவடிகளை அணுக அணைந்தனர். அந்நிலை யில், இதுகாறும் அவர் உருத்திர மந்திரத்தை நாளும் தவறாது ஓதி வந்தமையால், உலகம் புகழ அவருக்கு உருத்திர பசுபதியார் எனும் பெயரும் உளதாயிற்று.

16 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.

                   -திருமூலர்  (10,2,11-1)


பொருள்: சிவன்  உலகம் முழுவதையும் அழித்ததும், கடல்நீரை மிக்கு வாராதவாறு அடங்கியிருக்கச் செய்ததும், முப்புரத் தவர் முதலிய அசுரர்களை அழித்ததும் நெருப்பை உண்டாக்கியே யாம். அதனால், நெருப்பே அவன் கையம்பாய் விளங்குகின்றது.

15 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 

                   -மாணிக்கவாசகர்  (8-48-7)


பொருள்: நல்ல அமிர்தம் போல்பவனாகிய பெருமானது திருவடியை என்மனத்தில் இருத்திச் சொல்லளவைக் கடந்த, அவனது திருவார்த்தையைப் பேசி, அவன் திருப்பெருந்துறையை வாழ்த்தி என் பிறவித் தளையை ஒழித்தேன்.

13 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் [ இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

                            -சுந்தரர்  (7-46-1)


பொருள்:   இறைவா!! பலவூர்களிற் சென்று ,பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர் ; அங்ஙனம் இரக்குங்கால் , பிச்சைஇட வருகின்ற , பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர் ; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு , எருதின்மேல் ஏறித்திரிவீர் ; இவைகளைப் போலவே , உள்ள பொருளை மறைத்துவைத்து , என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது , ஏதும் இல்லை என்பீர் ; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா ; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும் , மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து , உடம்பிற் பூசிக் கொள்வதற்கு , இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும் , அத்தகையதான சந்தனமும் நீர் , தவிராது அளித்தருளல் வேண்டும், கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே.

12 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்
உரத்தினால் வரையை யூக்க வொருவிர னுதியி னாலே
அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே.

                       -திருநாவுக்கரசர்  (4-63-10)


பொருள்:  கூற்றுவனைத் தண்டித்த பெருமானே ! இராவணன்  கயிலை மலையைப் பெயர்க்க , ஒரு விரல் நுனியினாலே அவனை நெரித்த அண்ணாமலைத் தேவர் தலைவனே ! உன்னை அடியேன் தலையால் வணங்கி வாயால் துதித்து மனத்தால் உன் திருவடிகளை மறவாதேனாய் உள்ளேன் .

09 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தேரரக்கன் மால்வரையைத் தெற்றி யெடுக்கவவன்
றாரரக்குந் திண்முடிக ளூன்றிய சங்கரனூர்
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலா முணரப்
பாரரக்கம் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.

                   -திருஞானசம்பந்தர் (1-65-8)


பொருள்:  இராவணன் கயிலை மலையைக்  அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச் சேர்ந்த பல்லவனீச்சரமாகும்

08 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய
உள்ளு றப்புக்கு நின்றுகை யுச்சிமேல் குவித்துத்
தள்ளு வெண்டிரைக் கங்கைநீர் ததும்பிய சடையார்
கொள்ளு மன்பினி லுருத்திரங் குறிப்பொடு பயின்றார்.


                            -உருத்திர பசுபதி நாயனார்  (6)


பொருள்: தெளிந்த குளிர்ந்த குளத்தின் நீரில், கழுத்தின் அளவாயிடும் ஆழத்தில் நின்று, கைகளை உச்சிமேற்குவித்து, வெண் திரைகளையுடைய கங்கை நீர் பொங்கி நிறைந்த சடையையுடைய சிவபெருமானை அளவற்ற உருத்திர மந்திரங்களை எண்ணிய குறிப் புடன் ஓதி நின்றார்

06 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே. 

                     -திருமூலர்  (10-2-10,5)


பொருள்: திருவருளால் ஐம்பூதங்களிலும் நிற்கும் சிவ பெருமானே, குணங்கள் மூன்றாயும், காலங்கள் மூன்றாயும் நிற்பான்.

05 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப் பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 

                -மாணிக்கவாசகர்  (8-48-5)


பொருள்: நெஞ்சே! கோகழிக்கு அரசனும், எம்பிராட்டியோடு திருவுத்தரகோச மங்கையில் நிலை பெற்று நீங்காது இருப்பவனுமாகிய சிவபெருமானைச் சிந்தித்து எழுவாயாக! வழிபடுவாயாக!

02 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தேடுவன் தேடுவன் செம்மலர்ப்
பாதங்கள் நாள்தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு
மேலேயொர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை
பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூர்எம் மடிகளே.

                 -சுந்தரர்  (7-45-9)


பொருள்: நான் , திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனது திருவடிகளை நாள்தோறும் தேடுவேன் ; அவனை , உந்திக்குமேல் நால்விரல் அளவில் உள்ள இருதயத்தில் நினைப்பேன் ; வெளியில் சென்றால் வலிய கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்ப்பேன் ; அவனுக்கு ஏற்புடையன ஆகும்படி கூத்துக்களை ஆடுவேன் .

01 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா விறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே
இறைவனே யுன்னை யல்லால் யாதுநா னினைவி லேனே.

                        -திருநாவுக்கரசர்  (4-63-5)


பொருள்: பிறையைச் சூடியவனே  ! தலைக்கோலம் அணிந்தவனே ! பார்வதிபாகனே ! வேதங்களில் வல்லவனே ! தலைவனே ! வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடியவனே ! வாமதேவனே ! ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைத் தேவர்கள் போற்றும் அழகிய அண்ணாமலையில் உறைபவனே ! அடியேன் உளத்தில் தங்கியிருப்பவனே ! உன்னைத் தவிர வேறு ஒன்றையும் நினைப்பேன் அல்லேன் .