23 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மாயிரு ஞால மெல்லா மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.

                     -திருநாவுக்கரசர்  (4-56-1)


பொருள்: ஆவடுதுறையனாருடைய மலர் போன்ற திருவடிகளைப் பெரிய உலகத்தவர் யாவரும் வணங்குவர் . அப்பெருமான் பரவிய பெரிய கங்கா தேவியைப் பரந்த சடையில் வைப்பவர் . மரங்கள் தோறும் காய்கள் மலியும் பெரிய சோலைகளால் சூழப்பட்ட சீகாழி ஊரினராகிய ஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிறந்த ஆயிரம் பொன்களை அளித்தவர் ஆவர் .

22 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன் செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

                  -திருஞானசம்பந்தர்  (1-57-11)


பொருள்: விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து, அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி, சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப்போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்.

21 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முன்னின்ற மழவிடைமேல்
முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர்
திருக்குழல்வா சனைகேட்க
இந்நின்ற நிலையேநம்
பாலணைவாய் எனஅவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார்
ஐயர்திரு மருங்கணைந்தார்.

                  -ஆனாயநாயனார்  (39) 

பொருள்: இவர்கள் முன்னதாக  ஆனேற்றின்மீது அமர்ந்தருளிவந்த முதல்வனாராய சிவபெருமான், செவ்விதாய மனமுடைய ஆனாய நாயனாரின் வேய்ங்குழலின் வாசித்தலை எக்காலத்தும் கேட்டருள விரும்பி, அவரை நோக்கி, இங்கு நீ நின்ற இந்நிலையேயாக எம் முடன் அணைந்து வந்திடுவாய், எனத் திருவருள் புரிந்திடலும், அதனைக் கேட்டருளிய ஆனாய நாயனாரும் தாம் அங்கிருந்தும் பெயர்ந்து, தலைவராய பெருமானாரின் அருகணைந்தார்.

20 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.

                    -திருமூலர்  (10-2-2,1) 


பொருள்: அக இருளாகிய ஆணவமலத்தை ஒத்து, `அந்தகன்` எனப் பெயர் பெற்ற அசுரன் ஒருவன் தான் பெற்ற வரத்தினால் உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்த, அது பற்றி வருந்தி முறையிட்ட தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் சூலத்தின் நுனியில் அவனை ஏற்றித் துன்புறுத்தி அழித்தார்.

19 December 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


என்பேஉருக நின்அருள் அளித்துன்
இணைமலர் அடிகாட்டி
முன்பே என்னை ஆண்டு கொண்ட
முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர்
நாதா நின்னருள் நாணாமே.

                          -மாணிக்கவாசகர்  (8-44-3) 


பொருள்: என் எலும்புகளெல்லாம் உருகும் வண்ணம் உன் திருவருளைத் தந்து உன்னுடைய இரண்டு தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டி முன்னமே என்னை ஆட்கொண்ட முனிவனே! முனிவர்கட் கெல்லாம் முதற்பொருளானவனே! பேரின்பமே கொடுத் தருளி என்னை உருகுவித்து என் பசுபோதத்தை நீக்குகின்ற எங்கள் பெரியோனே! எனது உயிர்த் தலைவனே! உன்னுடைய நட்பை எனக்கு அருளிச் செய்யவேண்டும்.

17 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குளங்கள்பல வுங்குழி யுந்நிறையக்
குடமாமணி சந்தன மும்மகிலும்
துளங்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும்
மணிமண்டப மும்மிவை மஞ்சுதன்னுள்
விளங்கும்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

                      - சுந்தரர் (7-42-2)


பொருள்: குளங்களும் , குழிகளும் நிறையும்படி , மேற்குத் திசையில் உள்ள சிறந்த மணிகளையும் ,  சந்தனமரம் , அகில் மரம்  இவற்றையும் , அசைகின்ற நீருள் இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரை மேல் உள்ள , வளத்தைக்கொண்ட மதிலும் , மாளிகையும் கோபுரமும் , மணிமண்டபமும் ஆகிய இவை . மேகத்தில் விளங்குகின்ற சந்திரனை அளாவுகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

16 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற வரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந் தொலைந்துட னழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பா ரவர்வலம் புரவ னாரே.

                                  -திருநாவுக்கரசர்  (4-55-10)


பொருள்: தன் ஆற்றலைப் பெரிதாக மதித்து கயிலாயத்தைப் பெயர்க்கச் சென்ற இராவணன் தன் தோள்களிருபதும் அம்மலைக்கீழ் நசுங்கித் தொலையுமாறு , சிரித்துக் கொண்டே , தம் திருவடிகளால் அழுத்தமாக ஊன்றி அவ்வகையால் அவனது ஊக்கத்தையும் வலிமையையும் போக்கிய அத்தகையர் வலம்புரவனார் ஆவர் .

09 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேத மெய்துத லில்லையே.

                    -திருஞானசம்பந்தர்   (1-57-3)


பொருள்: பூதகணங்கள் பாட, சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும், சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம்.

08 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மருவியகால் விசைத்தசையா
மரங்கள்மலர்ச் சினைசலியா
கருவரைவீழ் அருவிகளுங்
கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை
பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா
எழுகடலு மிடைதுளும்பா.

                      -ஆனாயநாயனார்  (34)


பொருள்: காற்று விரைவாக வீசாமலும் . மரங்களில் உள்ள கிளைகளும் அசையமலும்,  கருமலையில் நின்றும் வீழ்கின்ற அருவி யாறுகளும், காட்டாறுகளும், ஒலித்து ஓடாவாயின. பெருமுகிலின் குலங் கள் யாவும் பெயர்ந்து எழுகின்ற தமது செயல் ஒழிய, மழை பொழியா வாயின. பெருவானத்திடையே இடி முதலிய முழக்கங்கள் எழாவாயின. எழுகடலின் இடையாக யாதோர் அலையும் தோன்றாது அசைவற்று நின்றன.

07 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.

                   -திருமூலர்  (10-28-1) 


பொருள்: ஒருபொழுது நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒருபாற் சாய்ந்து கீழ்மேலாகப் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சுற்றுச் சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிடுதலும், அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனுமே ஆவை; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்;

05 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவி யேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்து றையெம்
புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல் லார்எம் பிரானா வாரே.

                  -மாணிக்கவாசகர்  (8-43-7) 


பொருள்: வண்டின் ரீங்கார ஒலியையுடையதாகிய ஒப்பற்ற தாமரை மலரில் பொருந்திய கலைமகள் திருமகள் என்னும் மகளிர் இருவரும் வாழ்த்தி வணங்கி மலர் தூவி வழிபட, ஒளி மிகுகின்ற சோதி வடிவமான எமது ஆண்டவனும், நிலைபெற்ற மலர்கள் விரிகின்ற சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் எமது புண்ணிய மூர்த்தியுமாகிய இறைவன், பூமியில் வந்து காட்சி கொடுத்து, வேற்றுமைகளைக் களைந்து அருள் புரிகின்ற பெருமையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

02 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னு மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லா
ரவர்என் தலைமேற் பயில்வாரே.

                      - சுந்தரர்  (7-41-10)


பொருள்: அன்னங்கள் வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது கருணையையே நினைகின்ற மனத்தினால் , ஆரூரன்  என்று , பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும் , செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும் , வயல்களை உடைய திருநாவலூருக்குத் தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய , தமிழ்ப்பாமாலையைப் பாட வல்லவர் , என் தலைமேல் எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர் .

01 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மடுக்களில் வாளை பாய வண்டின மிரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை யேந்தித் தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர் வலம்புரத் திருந்த வாறே.

                           -திருநாவுக்கரசர்  (4-55-2)


பொருள்: மாவடு போன்ற பெரிய கண்களை உடைய பார்வதிபாகர் , மடுக்களிலே வாளை மீன்கள் பாயவும் வண்டினங்கள் அஞ்சி ஓடிய பொய்கைகைளில் பிடியும் களிறும் போல வரால் மீன்கள் இரட்டையாகக் கலந்து கொண்டு அணையவும் வளம் சான்ற திருவலம் புரத்திலே , தொடுக்கப்பட்ட மாலைகளை ஏந்தியவர்களாய் அடியார்கள் முன்நின்று துதித்துப்போற்றும் வண்ணம் பெரிய கண்களை உடைய பார்வதிபாகர் இருந்தவாறென்னே !