தினம் ஒரு திருமுறை
காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.
-திருநாவுக்கரசர் (4-49-7)
பொருள்: காவல் செய்வதற்குரிய வில்லும் அம்பும் ஒரு கையிலும் , நிவேதனத்திற்குரிய இறைச்சிச் சுமை மற்றொரு கையிலும் பொருந்த , காலில் தோலாலாகிய பெரிய செருப்பினை அணிந்து , தூயவாயினில் நீரைக்கொணடு கலசநீரால் அபிடேகிப்பது போல எம் பெருமானை அபிடேகித்து , அப்பெருமானுடைய ஒளிவீசும் பெரிய கண்களில் இரத்தம் பெருகி ஒழுகத் தன் கண் ஒன்றனைப் பெயர்த்து முதலில் ஒரு கண்ணில் அப்பிப்பின் மற்றொரு கண்ணைப் பெயர்க்க அதன்கண் அம்பினைச் செலுத்திய அளவில் அத்திண்ணனுடைய கையைப் பற்றிக்கொண்டார் குறுக்கை வீரட்டனார் .