29 January 2016

தினம் ஒரு திருமுறை

  தினம் ஒரு திருமுறை


கதித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவ னெடுத்தி டல்லு மரிவைதா னஞ்ச வீசன்
நெதித்தவ னூன்றி யிட்ட நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

                      -திருநாவுக்கரசர்  (4-47-2)


பொருள்:  இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில் , பார்வதி அஞ்ச , எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான் . பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது .

28 January 2016

தினம் ஒரு திருமுறை 


சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
தோயடைந்த வண்வயல்சூழ் தோணிபு ரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்த னின்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.

                            -திருஞானசம்பந்தர்  (1-48-11)


பொருள்: முருகப் பெருமான் வழிபட்ட திருச்சேய்ஞலூரில் விளங்கும் செல்வனாகிய சிவபிரானது புகழைப் போற்றி நீர்வளம் சான்ற, வளமையான வயல்களால் சூழப்பட்ட தோணிபுரத்தின் தலைவனும், நுட்பமான ஞானம் மிக்கவனுமாகிய சம்பந்தனுடைய இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு ஆள்வர்.

27 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கருப்புவில் லோனைக் கூற்றைக்
காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல்
மிக்கெழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை
உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து
சிவபத நிழலில் சேர்ந்தார்.
 
                 -குங்கிலிகலய நாயனார்  (34)

 

பொருள்: கரும்பை வில்லாக உடைய மன்மதனையும் இயமனையும் ஒறுத்த பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கடவூரில் வாழ்ந்து வந்த கலயனார், மிக்கெழுகின்ற காதல் கூர்ந்திட ஒருமைப் பாடுற்ற நிலையில், தமக்குப் பொருந்துவதாய திருப்பணிகள் பலவுஞ் செய்து, சிவபெருமானின் திருவடி நீழலில் சேர்ந்தருளினார்

25 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை

21 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.
 
                   -திருமூலர்  (10-18-1)

 

 பொருள்: அறம் வேண்டுமாயின், இரப்பாரை பிரித்து பாராமல்  யாவர்க்கும் இடுங்கள். உண்ணும் காலத்தில் விரைந்து உண்ணாது , விருந்தினர் வருகையை எதிர் நோக்கியிருந்து பின்பு உண்ணுங்கள்.காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும்பொழுது, தம் இனத்தையும் அழைத்துக்கொண்டு உண்ணுதலைக் காணுங்கள்; கண்டீராயின், முன்னோர் தேடிவைத்தனவும், நீவிரே முன்னே தேடிவைத்தனவும் ஆகிய பொருளைப் பொன்காக்கும் பூதம்போல வறிதே காத்திராது சுற்றத்தார் பலர்க்கும் உதவுங்கள்.

20 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காண்பதி யானென்றுகொல் கதிர்
மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென் றறி
தற்கரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறை
யோன்மலர்ப் பாதங்களே.
 
                    -திருவாலிய அமுதனார்  (9-25-2)

 

பொருள்: மணி போல்பவனாய்க் கனல் போன்ற செம்மேனியனாய், ஆண்,  பெண், வடிவு அற்றவன் என்றோ அறிவதற்கு இயலாதவனாக உள்ளவனாய், வானத்தை அளாவிய பெரும்பரப்புடைய மாளிகைகளால் சூழப்பட்ட தில்லை என்ற பேரூரின் சிற்றம்பலத்திலே மாட்சிமை பொருந்திய மேம்பட்ட திருக்கூத்தினை நிகழ்த்தும், வேதம் ஓதும் சிவபெரு மானுடைய தாமரைமலர் போன்ற திருவடிகளை அடியேன் புறக்கண் களால் காணும் நாள் எந்நாளோ?

19 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி ஊரும் மகிழ்ந்து.
 
                         -மாணிக்கவாசகர்  (8-19-6)

 

பொருள்: கிளியே! கூடு புகாதே சிறப்பையுடைய பெருமான் ஊர்தியாகக் கொள்வது எது எனில், எக்காலத்தும் தெய்வப் பெண்கள் தேன்போலும் இனிய சிந்தனையை யுடையவராய், துதிபாட மகிழ்ச்சி கொண்டு பெருமையுடைய வேத மாகிய குதிரையை ஏறி அவன் வருவான். இவ்விடத்தே வந்து அதனைச் சொல்வாயாக.

18 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீறு நுந்திரு மேனி நித்திலம்
நீல்நெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்
திடகி லோம்பலி நடமினோ
பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஆறு தாங்கிய சடைய ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.
 
                     - சுந்தரர் (7-36-5)

 

பொருள்: நீறு  அழிந்த வெண்மையான தலையோட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு , ` யான் இத் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்றீர் ; உமது திருமேனியில் உள்ள நீறு முத்துப்போல வெள்ளொளியை வீசுகின்றது . ஆயினும் , கரிய நீண்ட கண்களையுடைய பெண் ஒருத்தி யோடும் கூடிய பாதி உருவத்தை யுடையிராய் வந்து நிற்கின்றீர் ; அதன் மேலும் நீர் , கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ ? சொல்லீர் ; இதனால் , உமக்கு நாங்கள் பிச்சையைக் கொணர்ந்தும் இடேமாயினேம் ; நடவீர் .

14 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
 
                       -திருநாவுக்கரசர்  (4-46-2)

 

பொருள்:   மனம் என்னும் தோணியைப் பொருந்தி , அறிவு என்னும்  கோலை ஊன்றிச் சினம் எனும் சரக்கை அத்தோணியில் ஏற்றிப் பாசக்கடலாகிய பரப்பில் அத்தோணியைச் செலுத்தும்போது மன்மதன் என்ற பாறை தாக்க அத்தோணி கீழ்மேலாகக் கவிழும்போது உன்னை அறிய இயலாதேனாய் வருந்துவேன் . அப்போது அடியேன் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக ஒற்றியூர் உடைய கோவே

13 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழமுரி த்ததென்னே
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.
 
                     -திருஞானசம்பந்தர்  (1-48-5)

 

பொருள்:   நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் கற்று ஓதி , ஐவகை வேள்விகளை இயற்றி, தீப் பொருந்திய சிவந்த கையினராய் விளங்கும் அந்தணர் வாழும் சேய்ஞலூர் மேயவனே! சுடுகாட்டை இடமாகக் கொண்டு ஆடி உகப்பதோடு அன்றியும் சென்று மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மை அஞ்ச யானையை உரித்தது ஏனோ?

12 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நண்ணிய ஒருமை யன்பின்
நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி
இளைத்தபின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலய னார்தம்
ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்
அமரரும் விசும்பில் ஆர்த்தார்.
 
                      -குங்குலிகலய நாயனார்  (28)

 

 பொருள்:  பொருந்திய ஒரு நெறிய மனம் கொண்டு அன்பு என்னும் திண்ணிய நாரால் கழுத்தில் பூட்டி இழுத்து வருத்தமுற்ற பின்னர்,  கலயனாரின் ஒருமை அன்பின் திறத்தைக் கண்ட அமையத்தேயே பெருமான் நேராக நின்றார். தேவர்களும் அது கண்டு மகிழ்வொலி செய்தனர்.

11 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மற்றுப் பலிபிதற்ற வேண்டா மடநெஞ்சே
கற்றைச் சடையண்ணல் காளத்தி நெற்றிக்கண்
ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதுஞ் சொல்.

08 January 2016

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே. (10-17-1) 

07 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

வானோர் பணிய மண்ணோர் ஏத்த
மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு
சிற்றம் பலத்தானைத்
தூநான் மறையான் அமுத வாலி
சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும் பாடப்
பாவம் நாசமே.
 
                  -திருவாலியமுதானார்  (9-24-11)

 

பொருள்: தேவர்கள் வணங்கவும் மனிதர்கள் துதிக்கவும், பொருந்திக் கூத்துநிகழ்த்தும், வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட தில்லையில் விளங்கும் சிற்றம்பலப் பெருமானைப் பற்றித் தூய்மையான நான்கு வேதங்களையும் ஓதுபவனான திரு ஆலி அமுதன் பாடிய தமிழ்மாலையாகிய பால் போன்ற இனிய பாடல்கள் பத்தினையும் பாடுதலால் தீவினைகள் அழிந்து ஒழியும்.

06 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று.
 
                   -மாணிக்கவாசகர்  (8-19-1)

 

பொருள்: அழகு பொருந்திய இளமையான கிளியே! எம்முடைய திருப்பெருந்துறை மன்னனது சிறப்புப் பொருந்திய திருப்பெயரைத் தூய தாமரை மலர் மேலிருக்கும் பிரமன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால், ஆகியோர் சொல்வதுபோல, திரு ஆரூரன்; சிவந்த திருமேனியையுடையவன்; எம்பிரான்; தேவர் பெருமான் என்று ஆராய்ந்து சொல்வாயாக.

05 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காரு லாவிய நஞ்சை யுண்டிருள்
கண்டர் வெண்டலை யோடுகொண்
டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி
ஓரி டத்திலே கொள்ளும் நீர்
பாரெ லாம்பணிந் தும்மை யேபர
விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
ஆர மாவது நாக மோசொலும்
ஆர ணீய விடங்கரே.
 
                  -சுந்தரர்  (7-36-1)

 

பொருள்: கருமையான  நஞ்சினை உண்டமையால் இருண்ட கண்டத்தினையுடையவரே , நிலவுலகமெல்லாம் உம்மையே வணங்கித் துதித்துத் தொண்டுபுரியும் பெருமையுடைய , திருப்பைஞ்ஞீலி இறைவரே , காட்டில்வாழும் அழகரே , நீர் வெண்மையான தலையோட்டினைக் கையிற்கொண்டு ஊரெலாந் திரிந்து என்ன பெறப் போகின்றீர் ? இவ் வோரிடத்திற்றானே நீர் வேண்டிய அளவின தாகிய பிச்சையைப் பெற்றுக்கொள்வீர் முத்து வடமாவது பாம்புதானோ ? சொல்லீர் .

04 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பின்னுவார் சடையான் றன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுட் டொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே.
 
                     -திருநாவுக்கரசர்  (4-45-8)

 

பொருள்:  பின்னலுடைய சடை உடைய ஒற்றியூர்ப் பெருமானுடைய திருநாமங்களை அடைவு கேடாகப் பலகாலும் வாய்விட்டு உரைக்காத அறிவிலிகளே ! நீர் இனி அடையப்போகும் நரகத்தில் அனுபவிக்கக் கூடிய பழைய வினைகள் நீங்கவேண்டும் என்று நீர் கருதினால் நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி மனத்தினுள்ளே ஞானச் சுடர்விளக்கை ஏற்றித் தியானிப்பவர் உள்ளத்தில் அவர் உள்ளார் என்பதனை உணர்ந்து செயற்படுவீராக