30 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படமுடை யரவி னோடு பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக் கண்டவ ரஞ்ச வம்ம
இடமுடைக் கச்சி தன்னு ளேகம்ப மேவி னான்றன்
நடமுடை யாடல் காண ஞாலந்தா னுய்ந்த வாறே.
 
                         -திருநாவுக்கரசர்  (4-44-8)

 

பொருள்: படம்  உடைய பாம்பினோடு குளிர்ந்த பிறையைச் சூடி , மதம் பெருக்கும் யானைத் தோலைப் போர்த்துப் பார்ப்பவர்கள் அஞ்சுமாறு , செல்வத்தை உடைய காஞ்சிநகரில் ஏகம்பத்தை உறைவிடமாக விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய சிறப்பான ஆடலைக் காண்பதனால் உலகம் தீவினை யிலிருந்து பிழைத்தது . 

27 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த வேறதேறி யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு சிரபுர மேயவனே.
 
                       -திருஞானசம்பந்தர்  (1-47-3)

 

பொருள்:  வண்டுகள் பாடி மகிழ்ந்துறைவதும், மேகங்கள் தவழும் சோலைகளால் சூழப்பெற்றதும், அறநெறியில் விளைந்த செல்வம் பெருகி விளங்குவதுமாகிய சிரபுரம் மேவிய இறைவனே! கங்கையை அணிந்த சடைமுடியின் மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்து, பல ஊர்களையும் அடைதற்கு ஏதுவாய ஆனேற்றில் ஏறிச் சென்று, பலரிடமும் பலி கொள்வது ஏனோ?

25 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்தரத் தாரு மென்று
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்.
 
                  -குங்குலி கலயநாயனார்  (12)

 

 பொருள்: நான் பொன் தர நீர் இக்குங்குலியத்தைத் தாரும் என்றதும்  வணிகனும் அவரை நோக்கி, `எவ்வளவு பொன் இதற்குக் கொடுப்பீர்` என்ன, கலயனாரும் தம் மனைவியாரின் தாலியைக் கொடுத்தலும், அவ்வணிகன், அதனை வாங்கிக் கொண்டு அப்பொதியினைக் கொடுப்பக் கொண்டு, அங்கு நில்லாது தம் மனத்தில் நிறைந்து எழும் மகிழ்ச்சியோடு விரைந்து சென்றார்.

24 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப்போல்
தாமார் உலகில் தவமுடையார் தாம்யார்க்கும்
காண்டற் கரியராய்க் காளத்தி யாள்வாரைத்
தீண்டத்தான் பெற்றமையாற் சென்று.

23 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

21 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய்
ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய்
காண அருள் என்று
பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதிலின் றில்லைக் கருளித்
தேவன் ஆடுமே.
 
                      -திருவாலியமுதனார் (9-24-1)

 

பொருள்: இரவாகவும், பகலாகவும், உருவம் அற்ற மற்றும்  உருவம் உடைய பொருளாகவும், மனநிறைவைத் தாராத அமுதமாகவும், கல்லாலமரத்தின் நிழலில் உள்ளவனாகவும், அமையும் கயிலைமலைத் தலைவனே! `உன் திருவுருவைக் காணும் பேற்றை எங்களுக்கு அருளுவாயாக` என்று பதஞ்சலி முனிவர் போன்ற பல்லாயிரவர் சான்றோர்கள் முன் நின்று வேண்ட, அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி வெளிப்பட்டு மேகமண்டலம் வரை உயர்ந்த மதில்களை உடைய தில்லைக்கண் உள்ள அடியார்களுக்கு அருள் செய்து எம்பெருமான் ஆடுகிறான். 

18 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில்
பாதாள மேழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற்
சொல்லிறந் துநின்ற தொன்மை
ஆதி குணமொன்று மில்லான
அந்தமி லான்வரக் கூவாய்.
 
                      -மாணிக்கவாசகர்  (8-18-1)

 

பொருள்: இசை  உள்ள குயிலே! எம் பெருமான் திருவடி இரண்டும் எங்குள்ளன? எனக் கேட்டால், அவை கீழுலகம் ஏழினுக்கும் அப்பால் உள்ளன எனலாம். அவனது ஒளி பொருந்திய அழகிய திருமுடி எங்குளது? என்று சொல்லப்புகின், அது சொல்லின் அளவைக் கடந்து நின்ற பழமையுடையது எனப்படும். இவைகளைக் கேட்டாயாயின் முதலும் குணமும் இல்லாதவனும், முடிவு இல்லாதவனுமாகிய அவனை நீ இங்கு வரும்படி கூவி அழைப்பாயாக

13 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும்
பண்டை யாரலர் பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும்
நினைப்பொ ழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம்
மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந் தெல்லி நாறும்
புறம்ப யந்தொழப் போதுமே.
 
                      -சுந்தரர்  (7-35-2)

 

பொருள்:  வாழ்கின்ற ஊரும் ,  சுற்றத்தாரும் , தேடிய பொருளும் , அப்பொருளால் மனையில் வாழும் இவ் வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினரல்லர் ; அதனால் , என்றும் உடன் தொடர்ந்தும் வாரார் . ஆதலின் , அவர்களைப் பற்றிக் கவலுதல் ஒழி ; இனி நாம் , சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை அணிந்தவன் தன் இடமாக மகிழும் , மல்லிகைக் கொடியும் சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் மனமே !! 

12 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒருமுழ முள்ள குட்ட மொன்பது துளையு டைத்தாய்
அரைமுழ மதன கல மதனில்வாழ் முதலை யைந்து
பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழு மாடக் கச்சியே கம்ப னீரே.
 
                             -திருநாவுக்கரசர்  (1-44-2)

 

பொருள்: ஒரு முழ நீளமும் அரை முழ அகலமும் ஒன்பது துளைகளும் அதில்  வாழும் முதலைகள் ஐந்தும் உடைய சிறுகுளத்தின் பெரிய குகை போலும் நீர் வரும் வாய்த் தலைப்பை பிடித்துக் கொண்டு கிடந்து அடியேன் பிதட்டுகின்றேன் கார்மேகங்கள் தவழும் கச்சிமாநகரின் ஏகம்பம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே

11 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அகமலியன்பொடு தொண்டர்வணங்க வாச்சிரா மத்துறைகின்ற
புகைமலிமாலை புனைந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
நகைமலிதண்பொழில் சூழ்தருகாழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச் சாரகி லாவினைதானே.
 
                                         -திருஞானசம்பந்தர்  (1-46-11)

 

பொருள்:  அன்போடு தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில் உறைகின்றவரும்,  நறுமணப்புகை நிறைந்த மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும் உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண் பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நோய்தீர்க்கும் மேன்மை மிக்கதும் உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள்சாரா.

 

05 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கங்கைநீர் கலிக்கும் சென்னிக்
கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம்
பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே
வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன்
செய்பணி தவாமை யுய்த்தார்.
 
                     - குங்கிளிகலயனாயனார் (7)

 

பொருள்: கங்கையாறு ஒலிக்கும் சடையுடன், நெற்றியில் கண்ணும் கொண்ட பெருமானுக்கு, மேன்மேலும் நறுமணம் சிறக்கும் குங்குலிய மணம் கமழ்ந்து பொலிவுறும்படி, நாள்தோறும் பணிசெய்து வரும் அவருக்கு, பெருமானார் திருவருளினாலே அங்கு வறுமை வந்து அடைய, அதன்பின்பும் தம் தலைவராய பெருமானுக்குத் தாம் முன்பிருந்து செய்துவரும் குங்குலியத் தூபம் இடும் பணியைத் தவறாமல் செய்து வந்தார்

03 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை
சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு
கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் கூர்ந்துள்ளே
மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்
காளத்தி யார்தம் கழல்