31 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மகிழ்ந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் திகழ்ந்திலங்கும்
விண்ணுறங்கா வோங்கும் வியன்கயிலை மேயாய்என்
பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.

28 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அறுத்தன ஆறினும் ஆனின மேவி
இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே.  - திருமூலர் 
 
 பொருள்: ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்காறும் செல்ல வரையறுக்கப்பட்ட எழுவகைப் பிறவிகளிலும் உள்ள உயிர்களாகிய பசுக்கூட்டத்தில் ஐம்புல வேடர் புகுந்து தங்கினர். அவர்களால் அப்பசுக்களை அளவற்ற துன்பங்கள் வருத்தின. இவற்றிற்குக் காரணமான வினைகளோ ஒன்றல்ல நான் யாதோருடம்போடும் கூடி வாழ விரும்பாமல், சிவபெருமான் ஒருவனையே விரும்பி நிற்கின்றேன்.

27 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட
முந்தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி
யார்தில்லை யம்பலவன்
புலம்பி வானவர் தான வர்புகழ்ந்
தேத்த ஆடுபொற் கூத்தனார்கழற்
சிலம்பு கிங்கிணிஎன் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே.
 
                    -திருவாலியமுதனார்  (9-22-2)

 

பொருள்: நீரின் மேல்  தாமரைக் கொடிகள் வளர்ந்த குளங்களை உடையதாய், அந்த மிக்க நீரின்கண் உள்ள பூக்களைச் சேர்ந்து அவற்றைக் வண்டுகள் ஒலிக்கப்பெறுவதாய், அழகுநிறைந்த தில்லைப்பதியிலுள்ள பொன்னம்பலத்தில் உள்ளவனாய், முறையிட்டுத் தேவரும் அசுரரும் தன்னைப் புகழ்ந்து துதிக்கக் கூத்து நிகழ்த்தும் பொன்போலச் சிறந்த கூத்தப்பிரானுடைய திருவடிகளில் ஒலிக்கின்ற கிண்கிணிகள் அடியே னுடைய சிந்தையுள் கொண்டன ஆகும் .

26 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூச லாடாமோ.
 
                          -மாணிக்கவாசகர் (8-16-4)

 

பொருள்:  நஞ்சுடைய கண்டத்தை யுடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற மேல் மாடங்களையுடைய அழகிய திருவுத்தர கோச மங்கை யில் இனிய மொழியையுடைய உமாதேவியோடு கூடியவனும் அடி யாரது மனத்துள்ளே நிலைத்து நின்று அமுதம் சுரப்பவனும் இறப்புப் பிறப்புகளைத் தவிர்ப்பவனுமாகிய தூய்மையானவனின் புகழினைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

25 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாறு தாங்கிய காட ரோபடு
தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.
 
                      -சுந்தரர்  (7-33-1)

 

பொருள்: நம்  தலைவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் வாழ்பவரோ ? அழிந்த தலையை ஏந்தியவரோ ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ ? குழையணிந்த காதினை உடையவரோ ? சிறிய கொம்பினையுடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ ? சுடப்பட்ட நீற்றை அணிந்தவரோ ? விளங்குகின்ற பிறையோடு ஆற்றைச் சுமந்த சடையை உடையவரோ ?  சொல்வீராக 

24 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றதோ ருபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலையெ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே.
 
                          -திருநாவுக்கரசர்  (4-41-10)

 

பொருள்: மறுமையில் பிறப்பு ஏற்படாத வகையில் மறுமை என்பதனையே அடியோடு நீங்கள் போக்க விரும்பினால் , மற்றைப் பொருள்களிடத்தில் மனத்தை நிலையாக வைக்காமல் , பல நூல் களையும் கற்ற செருக்கோடு அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை ஒறுத்துப் பின் அவனுக்கு அருள்கள் செய்த திருச்சோற்றுத் துறையனை , அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டுப் பெற்ற முத்தி உபாயங்களால் பலகாலும் அடைவுகெடத் துதித்துப் பேசுங்கள் .

20 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானு முணர்வரி யானுமை கேள்வன்
முள்வாய் தாளின் தாமரை மொட்டின் முகமலரக் கயல் பாயக்
கள்வாய் நீலங் கண்மல ரேய்க்குங் காமர்பெ ருந்துறை யாரே.
 
                                  -திருஞானசம்பந்தர் (1-42-9)

 

பொருள்:  தாமரை மலர் முகம்போல் மலர, அதன்கண் கயல்மீன் பாயத் தேனையுடைய நீல மலர் கண்மலரை ஒத்துள்ளதால், இயற்கை, மாதர்களின் மலர்ந்த முகங்களைப் போலத் தோற்றந்தரும் பேணுபெருந்துறையில் உள்ள இறைவர், கொக்கு வடிவங்கொண்ட பகாசுரனின் வாயைப் பிளந்தும், நிலவுலகைத் தோண்டியும் விளங்கும் கடல் வண்ணனாகிய திருமாலும், தாமரை மலரின் அக இதழ்கள் மேல் உறையும் நான் முகனும் உணர்ந்து அறிதற்கரியவர்; உமையம்மையின் கணவர்.

18 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இதற்கினி என்கண் அம்பால்
இடந்தப்பின் எந்தை யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர்
நிற்கவும் அடுக்கு மென்று
மதர்த்தெழும் உள்ளத் தோடு
மகிழ்ந்துமுன் னிருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி
முதல்வர்தங் கண்ணில் அப்ப.

                   -கண்ணப்ப நாயனார் புரணாம்  (173)

 

பொருள்: இதற்கு இனி, எனது கண்ணை அம்பால் இடந்து எம்பிரானின் புண்ணுடைய கண்ணில் அப்பினால், அக்கண்ணிற்கு எனது இக்கண் மருந்தாகிக் குருதி நிற்கவும் கூடும் என்று உள்ளத்து எழுந்த அந்நினைவால், பெருமிதம் கொண்டு, மகிழ்ந்து, திண்ணனார் ஓர் அம்பினை எடுத்துத் தம் கண்ணினை இடந்து, கையிடத்துக் கொண்டு, தம் முதல்வராய காளத்தியப்பரின் கண்மீது அப்பிடலும்.

14 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய் வணங்காதே நம்பா நின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து.

07 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.
 
                               -திருமூலர்  (10-13-1)

 

பொருள்: உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்ததென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந் ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; இல்லத்தில் யாதொரு கொண்டாட்டம்  இல்லை, பிற உலக நடையும் இல்லாமல் இயங்குகின்றனர்.

03 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித்
தொண்டன்எடுத்
தோவாதே அழைக்கின்றான் என்றருளின்
நன்றுமிகத்
தேவே தென் திருத்தில்லைக் கூத்தாடீ
நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத்
தடுப்பரிதே.
 
                    -வேணாட்டடிகள்  (9-21-10)

 

பொருள்: தொண்டனுக்கு தொண்டன்  பாட்டு வடிவமாக அமைந்த தமிழ்மாலையை எடுத்துக் கூறி விடாமல் அழைத்துக் கொண்டிருக்கிறான் என்பதனைத் திருவுளம்பற்றி இப்பொழுதே அருள்செய்தால் மிக நல்லது. நாய் போன்ற இழிந்த அடியவனாகிய நான் சாகின்ற நேரத்திலாவது உன்னைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டுவதனை இனி உன்னாலும் தடுத்தல் இயலாது என் தேவனே! அழகிய புனிதத் தலமாகிய தில்லையில் திருக்கூத்து நிகழ்த்துபவனே!