28 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கரியரே இடந்தான் செய்யரே யொருபால்
கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொடால் நிழற்கீழ்
முறைதெரிந் தோருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே மறைகளுந் தேட
அரியரே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
 
                  - கருவூர்த்தேவர் (9-9-3)

 

பொருள்: இடப் பகுதி கருநிறத்தவர். மற்றபகுதி செந்நிறத்தவர். கழுத்தில் ஒப்பற்ற எலும்புமாலையைச்சூடிக் கூத்து நிகழ்த்துபவர். சனகர் முதலிய முனிவர்களோடு கல்லால மரநிழலிலிருந்து நூலை ஆராய்பவர். ஒரே உடம்பில் ஆணும் பெண்ணுமாகிய இருவராய் இருக்கின்றவர். மூன்று கண்களையும் நான்கு தோள்களையும் உடைய இறைவர். வேதங்களும் தேடி அவரை உள்ளவாறு அறிய இயலாதவர். இவை எல்லாம் உண்மையாதல் போல அவர் உறைவிடம் களத்தூரிலுள்ள அணிதிகழ் ஆதித்தேச்சரம் ஆகும்.
 

27 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்
இப்பிறவி ஆட்கொண் டினிப்பிறவா மேகாத்து
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம் நம்சிவனைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                          - மாணிக்கவாசகர் (8-8-12)

 

பொருள்: திருமால், அயன், இந்திரன்  முதலியோர் தேடி நிற்க, என்னையும் தனது இனிய அருளால் இந்தப் பிறப்பில் ஆட்கொண்டு இனிமேலும் பிறவாமல் காத்தவனாய் உண்மையாகிய இடத்தில் தோற்றுபவனாய், எல்லா உயிர்களுக்கும் தானே ஒருமுதற் பொருளாய், எல்லா உயிர் களுக்கும் வீடுபேற்றுக்கு ஏதுவாய் இருக்கிறவன் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

26 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூடலர் மன்னன் குலநாவ
லூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடி
யார்க்கடி மைவழுவா
நாடவல் லதொண்டன் ஆரூரன்
ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்
திருப்பது பண்டமன்றே.
 
                - சுந்தரர் (7-18-10)

 

பொருள்: பகைவர்க்கு அரசனும் ,  திருநாவலூர்க்குத் தலைவனும் , நன்மையை யுடைய தமிழைப் பாடவல்ல சிவனடியார்க்கு அடிமை வழுவாது செய்யுமாற்றால் அப்பெருமானை அடைய எண்ணுகின்றவனும் ஆகிய நம்பியாரூரன் , தன் தலைவனுக்கு ஆட்படுதல் இவ்வாறெனச் சொல்லி இப்பதிகத்தைப் பாடவல்லவர் , மேலான உலகத்தில் சென்று தங்குதல் எளிதாகும். 

25 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இரும்புகொப் பளித்த யானை யீருரி போர்த்த வீசன்
கரும்புகொப் பளித்த வின்சொற் காரிகை பாக மாகச்
சுரும்புகொப் பளித்த கங்கைத் துவலைநீர் சடையி லேற்ற
அரும்புகொப் பளித்த சென்னி யதிகைவீ ரட்ட னாரே.
 
                 - திருநாவுக்கரசர் (4-24-1)

 

பொருள்: கரும்பின் இனிமை மிகும் சொற்களை உடைய பார்வதியின் பாகராய் , வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு கொப்பளிக்கும் பூவினை அணிந்த கங்கையாளாகிய நீர் வடிவைச் சடையில் ஏற்றவராய் , அரும்புகள் தேனை மிகுதியாக வெளிப்படுத்தும் சென்னியை உடைய அதிகை வீரட்டனார் , இரும்பின் நிறத்தை கொப்பளித்து விட்டாற்போன்ற செறிவான கருமையுள்ள யானையின் ஈரப்பசுமை கெடாத தோலைப் போர்த்த ஈசனாவார்

24 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை
திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்க ளுச்சி யுறையு மிறையாரே.
 
                - திருஞானசம்பந்தர் (1-26-1)

 

பொருள்:  தேன் விம்மிச்சுரந்துள்ள, மணம் பொருந்திய சோலைகள் வானளாவ உயர்ந்து, அங்குத் தவழும் திங்களோடு பழகித்திளைக்கும் வளம் உடைய திருப்புத்தூரில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடைமுடியினராகிய பெருமானார் எங்கள் சிரங்களின்மேல் தங்கும் இறைவர் ஆவார்.

21 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.
 
                    -அமர்நீதி நாயனார் புராணம் (31)

 

பொருள்: நாம் உடுத்தியிருக்கும் கோவணம் தவிர, உம்கையில் நாம் தர, நீர் அதனைப் போக்கியதாக முன் கூறிய அக் கிழிந்த கோவணத்திற்கு ஒப்பாகும் கோவணம் இதுவாகும் என்று கூறி, தண்டில் கட்டியிருந்த கோவணத்தினை அவிழ்த்து எடுத்து, இந்த  கோவணத்திற்கு ஒத்த எடையுடைய கோவணத்தை இடுவீராக என்றார்

20 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

                  - ஐயடிகள் காடவர்கோன் நாயனார்  (11-5-1)

பொருள்:  ஒடுகின்ற வலிமை நீங்க, மூப்பு வந்தவுடன் சிவனை நினையாமல் இன்றே தில்லைத் திருச்சிற்றம்பலப் பெருமானைக் கண்டு வணங்குகள். 

19 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
 
                          - திருமூலர் (10-3-1)

 

பொருள்: சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப் பெருமானை வணங்கி அவனது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக் களைக் கேட்டுணர்ந்தனவாம்.

18 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                 - மாணிக்கவாசகர் (8-8-10)

 

பொருள்: தேவர்களுக்கும்  தேவனும், அரசர்க்கரசனும், தமிழ் பாண்டி நாட்டை உடையவனும், பெண்பாகனும், அடியேனை ஆட்கொண்ட வனும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம்.

17 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உம்பரான் ஊழியான் ஆழியான்
ஓங்கி மலர்உறைவான்
தம்பர மல்லவர் சிந்திப்
பவர்தடு மாற்றறுப்பார்
எம்பர மல்லவர் என்னெஞ்சத்
துள்ளும் இருப்பதாகி
அம்பர மாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.
 
              -சுந்தரர்  (7-18-8)

 

பொருள்:  இந்திரன் , உருத்திரன் , மால் , அயன் , என்னும் இவர்கள் அளவில் உள்ளரல்லர் என்றும் , ` தம்மை நினைப்பவரது மனக்கவலையைப் போக்குபவர் எம்மளவல்லவர் ` என்றும் சொல்லப்படுகின்ற இவர் , என் மனத்திலும் இருத்தலுடையவராய் வேறு வெளியாதலை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே

12 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

மண்ணுண்ட மால வனு மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம் விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும் பரமநீ யாடு மாறே.
 
            - திருநாவுக்கரசர் (4-23-10)

 

பொருள்: பூமியை உண்ட திருமாலும் , மலர்மேலுறையும் பிரமனும் விண்ணளவும் ஒளிநிறைந்த உன் திருவுருவைக் காணும் வேட்கையராயிருந்துமே , தானாக நிலைத்துத் திணிந்திருக்கும் சிவத்திரு மேம்பட்ட தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே பண்ணுக்கு அமைந்த பாடல் ஒலிகளின் இடையே பரம்பொருளாகிய நீ வெளிப்படையாக ஆடுமாற்றை - அதன் மாண்பை   காணமாட்டாராகின்றனர்

11 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நறவார் புகலி ஞான சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.
 
              - திருஞானசம்பந்தர் (1-25-11)

 

பொருள்: தேன் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர்.

10 February 2014

தினம் ஒரு திருமுறை

 தினம்  ஒரு திருமுறை

செயத்த கும்பணி செய்வன்இக் கோவண மன்றி
நயத்த குந்தன நல்லபட் டாடைகள் மணிகள்
உயர்த்த கோடிகொண் டருளும்என் றுடம்பினி லடங்காப்
பயத்தொ டுங்குலைந் தடிமிசைப் பலமுறை பணிந்தார்.
 
                     - அமர்நீதி நாயனார் புராணம் (28)

 

பொருள்: அடியேன் செயத்தகும் பணி எதுவாயினும் அதனைச் செய்வேன். இக்கோவணமன்றி, விரும்பத்தக்கனவாய நல்ல பட்டாடைகளும், மணிகளும் ஆக மிகப் பலவாக விரும்பினும் அவற்றை ஏற்றுக் கொண்டருளுவீர்`, என்று கூறி, உடம்பில் அடங் காது மீதூர்ந்து நிற்கும் அச்சம் உடையராகி, மனம் உடைந்து, அவர் திருவடிமேல் பன்முறையும் பணிந்தனர்

07 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து.

             - காரைகாலம்மையார் (11-4-101)

பொருள்: காரைக்கால்  அம்மையார் சொன்ன இம்மாலை அந்தாதி வெண்பாக்களை உரையினால், கரைவினாற் பரவுவார் ஆராத அன்பினோடு சென்று அண்ணலைப் பேராத காதல் பிறந்து ஏத்துவார்

05 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே.
 
                - திருமூலர் (10-2-6)

 

 பொருள்: இயலும், இசையும், நாடகமும் ஆகிய கலை களின் பயனை அறியாவிடினும் அவற்றை இடையறாது நிகழ்த்தி நிற்கின்ற இவ்வுலகில், வேதத்தை இடையறாது ஓதுகின்ற வேதியரும் அத் தன்மைரேயாய்ப் பொருள் பெறவிரும்பி, பொருளாசை நிறைந்த நெறி முறை இல்லாத அக்கலைவல்லுநர் பொருள் ஈட்டும் இடத்திற் சென்று அவரோடு மாறுகொண்டு நிற்கின்றனர்

04 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.
 
                        - மாணிக்கவாசகர் (8-8-8)

 

பொருள்: பாடும் பாடலைப் பரிசிலாகக் கொண்டருள் கின்ற பெண்பாகனும், திருப்பெருந்துறையை உடையவனும், தேவலோகத்தவரும் புகழும்படியான புகழை உடையவனும், மண்ணுலகத் தலைவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய கடவுள் கூடற் பதியில், மண் சுமந்து கொண்டு பாண்டியன் கைப்பிரம்படியால் புண் பட்ட பொன்போலும் திருமேனியைப் புகழ்ந்து பாடுவோம்.

03 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பேருமோர் ஆயிரம் பேருடை
யார்பெண்ணோ டாணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர்
பெற்றவா நாமறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமு
துண்டுகண் டங்கறுத்தார்க்
காரம்பாம் பாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.
 
               - சுந்தரர் (7-18-3)

 

பொருள்: பெயரும் தமக்குரியனவாக ஆயிரம் உடையவர் ; இவர் பெண்ணும் அல்லர் ; ஆணும் அல்லர் ; இவர்க்கு ஊரும் ஒற்றிஊரே ; அதுவன்றி வேறோர் ஊரை உடைய ராதலை நாம் அறிந்திலோம் ; இருண்ட கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உணவாக உண்டு , கண்டம் கறுப்பாயினார் ; இவர்க்கு ஆரமாவது , பாம்பே ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !