02 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இருந்திரைத் தரளப் பரவைசூ ழகலத்
தெண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத் தறிவுறு கருவூர்த்
துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தங் கோயில்
பொழிலகங் குடைந்துவண் டுறங்கச்
செருந்திநின் றரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
 
                           - கருவூர்த்தேவர் (9-8-11)

 

பொருள்: பெரிய அலைகளால் மோதப்படும் முத்துக்களை உடைய கடல் சூழ்ந்த அகன்ற பூமியில் உள்ள எண்ணற்ற, அழகிய கண்ணாகிய அறிவு இல்லாத இழிநிலையிலுள்ள மக்கள், திருந்துகின்ற உயிரின் பரிபாக நிலையில் ஞானம் பெறுதற்கு ஏதுவான கருவூர்த் தேவருடைய புறப்பொருள் துறையாகிய கடவுள் வாழ்த்தாகிய இனிய தமிழ் மாலையை உளங்கொண்டு ஏற்றருளும் மேம்பட்ட கருணையை உடைய சிவபெருமானுடைய கோயில், சோலைகளிலே மலர்களைக் குடைந்து வண்டுகள் உறங்கவும் செருந்தி நிலையாக அரும்புகளைத் தோற்றுவிக்கின்ற பெரும்பற்றப்புலியூர் என்ற தலத்திலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமேயாகும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...