31 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                 - மாணிக்கவாசகர் (8-8-5)

 

 பொருள்: கல்லாது நாயை போன்று  கடையாகிய என்னையும் ஒரு பொருளாய் மதித்து ஆட்கொண்டு, கல்லை நிகர்த்த என் மனத்தைக் குழைத்துத் தன் கருணைக் கடலில் அழுந்தும் படிசெய்து என் வினையை ஒழித்தருளிய நம் தில்லைச் சிற்றம்பலவனைப் புகழ்ந்து பாடுவோம்.

30 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
ஊர்அணி நாவலூர்என்
றோதநற் றக்கவன் றொண்டன்ஆ
ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
தம்வினை கட்டறுமே.
 
                - சுந்தரர் (7-17-11)

 

பொருள்:  சிவபெருமானுக்குரிய ஊரும் , நமக்கு உரிய ஊரும் , நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு , விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு , நல்ல தகுதியை உடையவனும் , ` வன்றொண்டன் ` என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும் , கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்

26 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மதியிலா வரக்க னோடி மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோ ணெரிய வூன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று வனலெரி யாடு மாறே.
 
                - திருநாவுக்கரசர் (4-22-11)

 

பொருள்: மதியில்லா  இராவணன் விரைந்து சென்று பெரிய கயிலை மலையைப் பெயர்க்க, அதனை மனத்தால் நோக்கிச் செல்வனான அவனுடைய தோள்கள் நெரியுமாறு கால்விரல் ஒன்றனை ஊன்றி, நீண்ட பொழில்கள் சூழ்ந்த தில்லையுள் விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் எல்லோரும் வியக்குமாறு குறுகிய இடத்தில் நின்று ஒளிவீசும் ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.

24 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத் தினிதா விருப்பரே.
 
               - திருஞானசம்பந்தர் (1-24-11)

 

பொருள்: நீர்வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர், தேவர்கள்  வானகத்தில் இனிதாக இருப்பர்.

23 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.
 
                           - அமர்நீதி நாயனார் புராணம் (16)

 

பொருள்: அந்தணராக  வந்தவர் தந்த கோவணத்தை வாங்கிய ஒப்பற்ற பெருந்தொண்டர், முதன்மை பொருந்திய அந்தணராகிய அவர்தம் மொழியினை ஏற்றவராய், இதற்கு முன் தாம் அடியவர்களுக்குக் கொடுப்பதற்கென வைத்திருக்கும் கந்தை, கீள், உடை, கோவணம் எனும் இவற்றை வைத்திருக்கும் இடத்திலன்றிப் பாதுகாப்பான இடத்தை எண்ணி, அவ்விடத்தில் அதனைக்காவல் பொருந்திய தொரு தனியிடத்தில் வைத்தார்.

20 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்
 
                        - காரைகாலம்மையார் (11-4-81)

 

 

பொருள்: செஞ்சடையுடைய சிவபெருமான் சேவடிக்கு ஆளாய் திருமறை, சாத்திரங்கள் ஓதினோம் . இனி வேறு உரைகள் பற்றியாம் உணர்வது  யாதுமில்லை. அதனால், இம்மைக்கும், அம்மைக்கும் ஆவன யாவற்றாலும் அமைந்தோம்; இஃது அறியாது, புறச் சமயத்தீர் எம்மைப் புறங்கூறுதல் ஏன்.

19 December 2013

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.
 
                - திருமூலர் (10-1-55)

 

பொருள்: சிவபெருமான் ஒன்றோடும் ஒட்டாது தனித்து நிற்கும் மேல் நிலையில் ஒருவனேயாய், அந்நிலையினின்று வரு தலாகிய பொதுநிலையில் எல்லாப் பொருட்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து நிற்பவனாய் மால், அயன் முதலிய ஒன்பது நிலைகளை உடையவனாகியும், உயிர்களின் தகுதி வேறுபாட்டிற்கேற் மற்றும் பல் வேறு நிலைகளையுடையனாகியும் இவ்வாறெல்லாம் தனது திருவருள் ஒன்றிலே நின்று உயிர்கட்குப் பாசத்தைப் போக்கி யருளுகின்றான்.

18 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
 
                    - கருவூர்த்தேவர் (9-8-5)

 

 பொருள்: கண்களில்  கண்ணீர் அரும்ப , கைகள் குவித்து, `எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்` என்று கதறி எலும்புக ளெல்லாம் அன்பினால் உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடி யேனையும் இணைத்துக் கொள்ளும் சிவபெருமானுடைய கோயில், தேன் உண்டு என்பதனைத் தெளிந்த வண்டுகள் பலபல பண்களைப் பாடிக் கொண்டு ஆடக் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில் அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடைய பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே யாகும்.

17 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                    - மாணிக்கவாசகர் (8-8-3)

 

பொருள்: இந்திரன் மால், அயன் முதலான தேவர்களும் முனிவர் முதலானோரும் விண்ணிலே நிற்க, எங்களை ஆட்கொள்ளும் பொருட்டுப் பூவுலகில் எழுந்தருளி, எங்கள் மனத்தை உருகச் செய்த திருப்பெருந்துறையான், எமக்கு அருள் செய்த முடிவற்ற இன்பத்தைப் புகழ்ந்து பாடுவோம்.

16 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உம்பரார் கோனைத்திண் தோள்முரித்
தார்உரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
நீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
 
                      - சுந்தரர் (7-17-5)

 

பொருள்: தேவர்கட்கு எல்லாம் அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும் , யானையை உரித்தவரும் , சிவந்த பொன்போல்வதும் , நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும் , வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும் , ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது ,  திருநாவலூரேயாகும் .

13 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

விருத்தனாய்ப் பால னாகி விரிநிலா வெறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய நீண்டபுன் சடைக டாழக்
கருத்தனார் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ டனலெரி யாடு மாறே.
 
                          - திருநாவுக்கரசர் (4-22-9)

 

பொருள்: வயதில்  மூத்தவராகவும், இளையராகவும் காட்சி வழங்குபவராய், பிறை விரிந்த ஒளியைப் பரப்பும் சென்னியராய்க் கூத்து நிகழ்த்துபவராய், நீண்ட சிவந்த சடைகள் தொங்கக் கூத்தாடுதலால் அடியவர் உள்ளத்தில் என்றும் தங்கியிருப்பவராய், தில்லையம்பதியிலே சிறப்பாகக் கருதப்படுகின்ற சிற்றம் பலத்திலே பார்வதிபாகமான திருமேனியோடு ஒளிவீசும் ஞானத்தீயிடைச் சிவபெருமான் கூத்தாடும் காட்சியைக் காணலாம்.

12 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேனை வென்ற மொழியா ளொருபாகங்
கான மான்கைக் கொண்ட காழியார்
வான மோங்கு கோயி லவர்போலாம்
ஆன வின்ப மாடும் மடிகளே.
 
                      - திருஞானசம்பந்தர் (1-24-3)

 

பொருள்: இன்பத்தோடு ஆடுகின்ற சிவபிரான், இனிப்பில் தேனை வென்று விளங்கும் மொழிகளைப் பேசுகின்ற உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காட்டில் திரியும் இயல்பினதாகிய மானைக் கையின்கண் ஏந்தி விளங்கும் காழிப்பதியினராவார். அவர் வானளாவ உயர்ந்த திருக்கோயிலில் விளங்குபவர் ஆவார்.

11 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.
 
                     - அமர்நீதி நாயனார் புராணம் (14)

 

பொருள்:  கோவணத்தின் பெருமையை உள்ளவாறு உமக்கு இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. நீர் இதை வாங்கி நான் நீராடி வரும் வரையில் உம்மிடத்தில் பாதுகாப்பாக வைத்துப் பின் திருப்பித் தருவீராக என்று சொல்லி, அதனை அந்நாயனார் கையில் கொடுத்தார்.
 
 

10 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்

                      - காரைக்கால் அம்மையார் (11-4-85)

06 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.
 
                     - திருமூலர் (10-1-52)

 

பொருள்: எல்லா  தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என நல்கினான் 

05 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
ஏழையேற் கென்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை யென்றால்
அஞ்சலென் றருள் செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
 
                                 - (9-8-2)

 

 பொருள்: கடபதற்கு  அரிய இந்தக் பிறவியாகிய கடலில் கரை காண்பதற்காக நீந்தும் அடியவனாகிய எனக்கு ஐம்பொறிகளும் பகையாக உள்ளன. அந்நிலையில் எனக்குத் துணை யாவர் என்று வருந்தினனால், `யானே துணையாவேன். ஆதலின் அஞ்சாதே` என்று அருள் செய்கின்ற சிவபெருமானுடைய கோயில், பக்கங்களில் பொருந்தியுள்ள வயல்களில் தளிர்த்த செந்நெற் பயிர்களிடையே களையாக வளர்ந்ததனால், உழத்தியர்கள் களை யாகப் பிடுங்கிய நீலமலர்க்கொடிகளே வயலின் வரப்புக்களில் காணப் படும் பெரும்பற்றப் புலியூரில் உள்ள இறைவனுடைய அருட்செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமே யாகும்.

04 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.
 
                               - மாணிக்கவாசகர் (8-8-1)

 

பொருள்: மாலும் காண்பதற்கரிதாகிய திருவடி இந்தப் பூமியில் படும்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளி, எம்மையும் எம்மினத்தையும் ஆட்கொண்டு எமக்கு முத்தி நெறியையும் அருள் செய்தமையால் அந்த இறைவனது கருணையையும், திருவடியின் பெருமையையும் யாம் புகழ்ந்து பாடுவோம்.

03 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தன்மையி னால்அடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
 
                    - சுந்தரர் (7-17-2)

 

பொருள்:  என் பிழையைத் திருவுளங்கொள்ளாது , அடிமை என்பது ஒன்றையே கருதி , என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந் நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு , ` வன்றொண்டன் ` என்பதொரு பதவியைத் தந்தவரும் , பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து , எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும்

02 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பையர வசைத்த வல்குற் பனிநிலா வெறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாக மாகிச்
செய்யரி தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று கனலெரி யாடு மாறே.
 
                              - திருநாவுக்கரசர் (4-22-4)

 

பொருள்: பிறை ஒளி வீசும் தலையிலே படம் எடுக்கும் பாம்பை வருத்தும் வனப்புடைய கங்கையை  உடைய, செவ்வரி கருவரி பரந்த மை தீட்டிய கண்களை உடைய கங்கையோடு, திருமால் ஒருபாகமாக அமைய, வயலிலே தானியங்கள் அறுவடை செய்யப்படுகின்ற தில்லையம்பதியிலே விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் கையில் ஏந்திய நெருப்பினை வீசிக்கொண்டு நின்றவராய், ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.