29 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்ட மாடும் மடிகளே.
 
            - திருஞானசம்பந்தர் (1-24-1)

 

பொருள்: அந்திக் (மாலை) காலத்தில் நடனம் ஆடும் அடிகளாகிய இறைவர், தேவர்கள் எந்தையே என அன்போடு அழைத்து ஆலயத்துட்புகுந்து குழுமி மணம்மிக்க மாலைகளை அணிவித்தற் பொருட்டுச் சேரும் சீகாழிப் பதியினராவார். அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றை அணிந்தவரும், குற்றம் அற்றவருமாவார்.

28 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வடிவு காண்டலும் மனத்தினும் முகம்மிக மலர்ந்து
கடிது வந்தெதிர் வணங்கிஇம் மடத்தினிற் காணும்
படியி லாதநீ ரணையமுன் பயில்தவ மென்னோ
அடிய னேன்செய்த தென்றனர் அமர்நீதி யன்பர்.
 
                         -அமர்நீதி நாயனார் புராணம் (10)

 

 பொருள்: தம்பால் அடைந்த அடியவர் திரு வடிவைக் கண்ட அளவில், மனத்தினும் முகத்தில் மிகு மலர்ச்சி அடைந்து, விரைய வந்து வணங்கி, இத்திருமடத்தில் இதற்கு முன்பு ஒரு நாளும் வாராத நீர் இன்று எழுந்தருளப் பெற்றதற்கு அடியேன் முன்செய்ததவம் என அமர்நீதியார் கூறினார்

27 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

              - காரைகாலம்மையார் (11-4-81)

பொருள்: அழகு மதில் உடைய  முப்புரம் அவிந்து அழிய அம்பு எய்திய சிவபெருமான் திருவடியாகிய தாமரை மலர்கள் சார்ந்தமையால், காலனையும், நரகங்களையும், இரு வினைகளையும் நீங்கபெற்றோம். 

26 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

                  - திருமூலர் (10-1-50)



பொருள்: சிவன், சதாசிவன், மகேசுரன் என்று  மூன்றாகவும், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்று  ஐந்தாகவும் சொல்லப்படுகின்றார் . சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன் என்று  ஒன்பதாகவும்  சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.

25 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணற் கட்செவிப் பகுவாய்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின்
மழைதவழ் வளரிளங் கமுகந்
திணர்நிரை அரும்பும் பெரும் பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
 
             - திருமாளிகைத்தேவர் (9-8-1)

 

பொருள்: கட்டாக  விரிந்த தலைகளையும் அத்தலைகளின் மேல்  சிவந்த இரத்தினங்களையும் பிளவுபட்ட நாக்குக்களையும் விடக்கறை பொருந்திய வாயினையும், கண்ணொடு பொருந்தி நிற்கும் காதினையும், பிளந்த வாய்களையும் படத்தின்கண் பொருந்திய புள்ளிகளையும், வெள்ளிய பற்களையும் உடைய பாம்புகளை அணி கலன்களாக அணிந்த மேம்பட்ட சிவபெருமானுடைய கோயில், நறுமணம் கமழும் ஒட்டுமாமரச் சோலைகளையும், தம் உச்சியில் மேகங்கள் தவழுமாறு உயர்ந்த பாக்கு மரங்களின் உச்சியில் வரிசை யாகத் தோன்றும் பூங்கொத்துக்களையும் உடைய பெரும்பற்றப் புலியூர் என்ற திருப்பதிக்கண் அமைந்த திருச்சிற்றம்பலமாகும்.

22 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
 
                         - மாணிக்கவாசகர் (8-7-20)

 

பொருள்: எல்லா பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். மாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

21 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு
வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
 
              - சுந்தரர் (7-17-1)

 

பொருள்: ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் எரித்தவரும் ,   என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு ,  திருமால் , பிரமன் , இந்திரன்  என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது திருநாவலூரே யாகும் .
 

20 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்குஞ் சென்னி
நஞ்சடை கண்ட னாரைக் காணலா நறவ நாறு
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை யிருள் கிழியத் துளங்கெரி யாடு மாறே.
 
                           - திருநாவுக்கரசர் (4-22-1)

 

பொருள்: சிவந்த சடைக்கற்றையாகிய முன்னிடத்தில் பிறை ஒளிவீசும் திருமுடியை உடைய, விடம் பொருந்திய கழுத்தினராகிய சிவபெருமானை, மேக மண்டலம் வரை வளர்ந்த தேன் மணம் கமழும் சோலைகளை உடைய தில்லைப் பதியிலே விளங்குகின்ற சிற்றம் பலத்திலே, செறிந்து பரவியுள்ள இருள் நீங்குமாறு கையில் அசைகின்ற தீயோடு கூத்து நிகழ்த்தும் நிலையில் காணலாம்.

19 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-23-11)

 

பொருள்:  நலங்கள் யாவும் நிறைந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினரைக் கொண்டுள்ள கோலக்காவில் விளங்கும் இறைவனைப் பாடிய திருவருள் வென்றியைக் கொண்ட இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபடவல்லவர்  , மலை போலும்  வினைகள் நீங்கப்பெற்றுச் சிறந்து வாழ்வர்.

15 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு நல்லூர்க்
கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி
நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக்கு லத்தொரு பிரமசா ரியின்வடி வாகி.
 
                       - (அமர்நீதி நாயனார் புராணம் 6)

 

 பொருள்: திருச் சடையில்  பிறையை அணிந்த உயர்தவச் சீலராகிய, பெருமை பொருந்திய திருநல்லூரின்கண் வீற்றிருந்தருளும் கரிய கண்டத்தையுடைய சிவபெருமான், அடியவர் களுக்கு, இவ்வடியவர் இதுகாறும் கொடுத்துவந்த கோவணத்தின் பெருமையை உலகத்தாருக்குக் காட்டவும், நிறைந்த அன்பினராய இவருக்குப் பேரருள் வழங்கவும் ஒரு பிரமசாரியின் வடிவைத் தாங்கிக் கொண்டு.

14 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.

                   - காரைகாலம்மையார் (11-4-79)

13 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.
 
              - திருமூலர் (10-1-49)

 

பொருள்: வினை நீங்கி  இருப்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும்  முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர்.

12 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
தூமொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் லிவைசுவா மியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே.
 
                   - சேந்தனார் (9-7-11)

 

பொருள்: அறியாமையாகிய மயக்கம் நிலவப்பெற்ற மனமே! தூய்மையான சொற்களையே பேசும் தேவர்களின் தலை வனும் செழுமையாகத் திரண்ட சோதி வடிவினனும் ஆகிய சுவாமி எனப்படும் முருகனைப்பற்றிச் செப்புறை என்ற ஊரினைச் சார்ந்த சேந்தன் ஆகிய அடியேன் வளமையாகத் திரண்ட வாயினை உடைய தலைவியின் தாய்மார் கூறும் சொற்களாகச் சொல்லிய இச்சொற்களால் செழுந்தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற உதிக்கின்ற ஞாயிறு போன்ற ஒளியை உடைய முருகப் பெருமானைப் புகழ்பவர்கள், புகழக் கேட்பவர்களுடைய துன்பங்களும் கெடும். 

11 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                       - மாணிக்கவாசகர் (8-7-11)

 

 பொருள்: உமையொருபா கனும்  , திருப்பெருந்துறையானும், திருவடியை அடைந்தவரின் மனம் உருக்கும் குணத்தை உடைய வனும், பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்கினவனும், தன் திருவடி யில் மனம் வைத்த அன்பர் மனத்தில் இருப்பவனும் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

08 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையும்ஊர் நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட
வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே.
 
                   - சுந்தரர் (7-16-11)

 

பொருள்: நீரையும் , வெள்ளிய திங்களையும் தாங்கிய சடையை உடையவனும் , பிரமதேவனது தலை ஓட்டினையே பாத்திரமாக ஏந்தி , முன்னதாக இசையைப் பாடிக்கொண்டு , உண்ணுகின்ற பிச்சைப் பொருள்களை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊராகிய , நிறைந்த நீர் ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருக்கலய நல்லூரை , யாவரிடத்தும் நண்பாந் தன்மையையுடைய நல்லோராகிய சடையன் , இசைஞானி என்பவர்க்கு மகனும் , திருநாவலூருக்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடிய , இசை பொருந்திய பத்துப் பாடல்களாகிய இவற்றை அத்தலப் பெருமானிடத்து அன்பு செய்து நாள்தோறும் பாடவல்லவர்கள் , துன்பமும் , பாவமும் மறையுமே .

07 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்
சீரூர்பாட லாடலறாத செம்மாப்பார்ந்
தோரூரொழியா துலகமெங்கு மெடுத்தேத்தும்
ஆரூரன்ற னாதிரைநாளா லதுவண்ணம்.
 
               - திருநாவுக்கரசர் (4-21-10)

 

பொருள்: உலகைச் சூழ்ந்து நிற்கும் கடல்போல எல்லை காண ஒண்ணாத பெருமானை அடியார்கள் வணங்கித் துதித்தலால் சிறப்பு மிகுந்த பாடல்கள் ஒலித்தல் நீங்காத பெருமிதத்தை நுகர்ந்தவாறு அப்பகுதியிலுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் யாவரும் எஞ்சாது எங்கும் எம்பெருமான் புகழை எடுத்துக் கூறித் துதிக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருநாளின் வனப்பு என்றும் அது அது என்று நினைக்குமாறு உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.

06 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மயிலார் சாயன் மாதோர் பாகமா
எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.
 
         - திருஞானசம்பந்தர் (1-23-5)

 

பொருள்: ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப்  நினைக்கப் பாவங்கள் நீங்கும்.

05 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிந்தை செய்வது சிவன்கழல் அல்லதொன் றில்லார்
அந்தி வண்ணர்தம் அடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள் வார்.
 
                 - அமர்நீதி நாயனார் புராணம் (3)

 

பொருள்: சிவபெருமான் திருவடிகளை அன்றிப் வேறொன்றையும்   சிந்தியாதவராகிய அவர், மாலை செவ்வானத்தின் நிறத்தினை உடைய சிவபெருமானின் அடியார் களுக்கு அமுது செய்வித்துக் கந்தையையும், உடையையும், கோவணத்தையும் அவர் திருவுள்ளக் கருத்தறிந்து கொடுத்து, நல் வினைப் பயனால் தமக்குக் கிடைத்த செல்வப் பெருக்கால் அடையும் பயனை நாள்தொறும் பெற்று வருவாராயினர்.

04 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.

                  - காரைகாலம்மையார் (11-4-74)

பொருள்:  கபாலம், பிரமன் தலையேயாயினும் இறைவன் கையில் இருத்தலால் எத்தனைக் கடல்களின் நீரை வார்ப்பினும் நிரம்பவில்லை. இறை வனை அடைந்த பொருள்களும் அவனைப் போலவே அளவுக்குள் அடங்காமல் நிற்கும்.  

01 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.
 
               - திருமூலர் (10-1-46)

 

பொருள்: சிவபெருமானது திருவடியாகிய மலர்களை நான் தலையில் சூடிக்கொள்வேன்; நெஞ்சில் இருத்திக்கொள்வேன்; பாடித் துதிப்பேன்; பலவாகிய மலர்களைத் தூவிப் பணிந்துநின்று கூத்தாடு வேன்; தேவர்க்குத் தேவன் என்று கொள்வேன். இதுவே நான் அறிவது ஆகும்.