28 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே.

            -திருக்கோவையார்  (8-21,2)


பொருள்: பூவிற்றேனை யுடைய நெருங்கிய சுருண்ட குழலையுடையாய்;  சிறிய கண்ணினையும்;  பெரிய கையினையும்; திண்ணியகோட்டினையும்; குழைந்த செவியினையும்;  சிவந்த முகத்தினையு முடைய யானையினது வருத்தும் வளைப்புக்கெடக் குரவராற் பாதுகாக்கப்படு முற்காலத்து நம்மை யுய்வித்தவர்;  கருப்பு வில்லையுடையவனைச் சென்றுற்ற கண்ணிற்றீயை யுடையவனுறையும் அம்பலத்தை யுன்னாதாரைப் போல; இன்று சூழ்கின்றது இதுவோ கண்ணோட்ட மின்றித் தம்மல்ல தில்லாத இக்காலத்து நினைக்கின்றதிதுவோ! இது தகுமோ!

27 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கூசி அடியார் இருந்தாலுங்
குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
தேச வேந்தன் திருமாலும்
மலர்மேல் அயனுங் காண்கிலார்
தேசம் எங்கும் தெளிந்தாடத்
தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

                - சுந்தரர் (7-77-10)


பொருள்: நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு , தெளிந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , அடியார் தாம் தம் குறையைச் சொல்ல வெள்கியிருந்தாலும் , நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர் ; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர் ; உம்மை , உலகிற்குத் தலைவனாகிய திருமாலும் , தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும் இவர்தாமும் காண்கிலர் ; பிறர் எங்ஙனங் காண்பார் ! ஓலம் !

26 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

                    - திருநாவுக்கரசர் (4-87-2)


பொருள்:  எட்டு  திசைகளையும் காக்கும் தேவர்கள் உன்னைச்சுற்றி நிற்கின்றனர் . நின் திருக்கோயில் வாயிலில் மற்றுமுள்ள தேவர்கள் நிற்கின்றனர் . திருமாலும் பிரமனும் வந்து உன் திருவடிக் கீழ்ப்பொருந்தி நின்று நீ இடும் கட்டளை யாது என்பதனை அறிய ஈடுபாட்டோடு நிற்கின்றனர் . இங்ஙனம் தேவர்கள் வழிபடக் காத்துக் கிடக்க வைக்கும் இயல்பினனாகிய நீ , அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக்கொண்டு பழனத்து அரசே ! அருள் செய்வாயாக .

25 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


ஏறி லெருதேறு மெழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் மடியார்கட் கடையா குற்றமே.

                          -திருஞானசம்பந்தர்  (1-86-2)


பொருள்: எருதிலே ஏறுபவனும், உமையம்மையோடு ஒன்றாகவும் வேறாகவும் விளங்கும் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமான், அன்பர்கள் எண்ணுமாறு மணங்கமழும் மலர்ப் பொய்கை சூழ்ந்த நல்லூரில் விளங்குகின்றான். அப்பெருமான் புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அடையமாட்டார் .

24 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம்  ஒரு திருமுறை


ஆனந்த வெள்ளத்தின்
இடைமூழ்கி யம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத்
தமுதுண்டு தெளிவெய்தி
ஊனந்தான் இலராகி
உவந்திருந்தார் தமைக்கண்டு
ஈனந்தங் கியதிலதாம்
என்னஅதி சயம்என்றார்.

            -திருநாவுக்கரசர் புராணம்  (101)


பொருள்: சிவானந்தப் பெருக்கினுள் மூழ்கி அம்பல வாணருடைய தேனைச் சொரியும் மலர் அனைய திருவடிகளின் அமுதத்தை உண்டு, தெளிவடைந்து, எவ்வகையான குறைபாடும் இல்லாதவராய், மகிழ்வுடன் வீற்றிருந்த திருநாவுக்கரசரைப் பார்த்து, `கெடுதி சிறிதும் அடைந்திலது! என்ன வியப்பு!` என்று சமணர் உரைத்தனர்.

21 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே. 

                -திருமூலர்  (10-3-8,2)


பொருள்: கண் முதலிய பொறியறிவின் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தி நின்ற முதற்பொருள் ஒன்று உளது. அஃது, எல்லையற்ற பேரொளியாயினும், அதனை நாம் உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று காண்கின்ற ஒரு சிற்றொளியாகத் தரிசிக்கச் செய்தவாற்றால், `பாம்பு` எனப்படுகின்ற குண்டலி சத்தி நம்மை உய்வித்தது வியக்கத்தக்கது.

18 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே.

              -திருக்கோவையார்  (8-20,3)


பொருள்: கல்லாற் செய்யப்பட்ட பரந்த மதிலையுடைய தில்லைக்கட் சிற்றம்பலமதனைக் காதலித்த; வில்லாகச் செய்யப்பட்ட பரந்த மலையையுடைய எம்முடையகோனை விரும்பாதாரைப் போல; நம்மன்பர் சொல்லானியன்ற பாவாகிய நூல்களைக் கற்க விரும்பினாரென்று சொல்ல; அச்சொல் மெல்லோதியையுடையாளது செவிக்கண்; கொற்றொழில் பரந்த விளங்குமிலையையுடைய வேல் சென்று மூழ்கினாற்போலச் சென்றெய்திற்று;