29 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பயிலும் மறையாளன் றலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.

                -திருஞானசம்பந்தர்  (1-82-3)


பொருள்:  பிரமனின் தலையோட்டில் பலியேற்று அனைவரும் துயிலும் நள்ளிரவில் ஆடும் ஒளிவடிவினனாகிய சிவபிரான் உறையும் கோயில், மயில், மடப்பம் பொருந்தியமான், மதி, இள மூங்கில், வெயில் ஆகியனவற்றைப் போன்று கண்ணுக்கு இனிய மென்மையும், மருளும் விழி, முகம், தோள்கள், உடல்ஒளி இவற்றால் பொலியும் மகளிர் வாழும் திருவீழிமிழலையாகும்.

28 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


நில்லாத உலகியல்பு
கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து
சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர
நம்பர்அரு ளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும்
அமண்சமயம் குறுகுவார்.

                  -திருநாவுக்கரசர் புராணம்  (37)


பொருள்: நிலையில்லாத இவ்வுலகியல்பைக் கண்டு, நிலையற்ற இந்த நிலவுலக வாழ்வில் நின்று உழலகில்லேன் என முற்றத் துறந்து, சமயங்களின் நல்ல நெறியைத் தெரிந்து உணர்வதற்கு நம்பரான சிவபெருமான் அருள் செய்யாமையால், கொல்லாமையை மேற்கொண்டு அதனுள் மறைந்து வாழும் சமண சமயத்தைச் சார்பவர் ஆகி.

25 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே. 

            -திருமூலர்  (10-3-2,1)


பொருள்: கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

21 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆரம் பரந்து திரைபொரு
நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
சிறந்தார்க்குஞ் செறிகடலே.

             -திருக்கோவையார்  (8-15,2)


பொருள்:  புலியூர்க்கணுளனாகிய தூயோனது புகழையுடைய அம்பரைச் சூழ்ந்து; எற்றி கரையைமோதி; மிக்கொலிக்கும் வரையிகவாத கடலே; முத்துப்பரந்து திரைக டம்முட்பொருங் கடனீர்; முகிலையு மீனையுந் தன்கட் பரப்பிச் சீர்த்த வாகாயமேபோல விளங்கி; ஒளிபுலப் படுத்துந் துறையையுடையவர்; சென்றவர்; மீண்டுவரும்பரிசு உனக்குக் கூறினரோ?

20 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அருத்தம் பெரிதும் உகப்பன்
அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்
உற்றவர்க் குந்துணை யல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன்
புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

               -சுந்தரர்  (7-73-6)


பொருள்: தொண்டீர் , யான் , பொருளையே பெரிதும் விரும்புவேன் ; அதன் பொருட்டு எங்கும் திரிதலையுடையேன் ; துன்புற்றவர் ஒருவர்க்கேனும் உதவியுடையேனல்லேன் ; உறவாயி னார்க்கும் துணைவனல்லேன் ; இன்ன பலவாற்றால் , பொருந்துவதாய பண்பு எனிலோ , ஒன்றேனும் இல்லாதேனாயினேன் . புற்றைப் படைத்து , அதனை இடமாகக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திரு வுள்ளத்தைக் கேட்டறிமின் .

19 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ் சூடி யுகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன் வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க நாடொறு மாடுவரே.

                    -திருநாவுக்கரசர்  (4-82-2)


பொருள்: கொடிகள் கட்டப்பட்ட பெரிய மாடவீடுகள் வீதிகள் முழுதும் நெருக்கமாக அமைந்து விளங்க , எல்லா ஆன்மாக்களையும் தனக்கு அடிமையாக உடைய சிவபெருமான் தலைமாலையைச் சூடிக்கொண்டு மகிழ்ந்து காளை வாகனனாய்க் காட்சி வழங்கும் திருக்கழுமலத்தை அடையும் அடியவர்கள் தங்கள் நல்வினை தீவினைகள் யாவும் அஞ்சி அகலப் பிறவிப்பிணி தீர்ந்தோம் என்று நாடோறும் மகிழ்ந்து கூத்தாடுவர் .

18 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.

                    -திருஞானசம்பந்தர்  (1-81-11)


பொருள்: அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.