31 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அடையார்தம் புரங்கண்மூன்று மாரழலில் லழுந்த
விடையார்மேனி யராய்ச்சீறும் வித்தகர் மேயவிடங்
கடையார்மாட நீடியெங்கும் கங்குல் புறந்தடவப்
படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவ னீச்சரமே.

                     -திருஞானசம்பந்தர்  (1-65-1)


பொருள்: பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.

30 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அங்கண் மாநகர் அதனிடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி
பங்க னார்அடி மைத்திறம் புரிபசு பதியார்.

                   -உருத்திர பசுபதி நாயனார்  (3)


பொருள்: அருள் நிரம்பிய நகரில், மறையவர் குலத்தினில் தோன்றிய தூய வாழ்வுடையார் ஒருவர்; அவர் சிவந்த கண்களையுடைய ஆனேற்றில் இவர்ந்தருள்பவரும், செழித்த பொன்மலையான இமயத்தில் பூங் கொடி போலும் வடிவுடைய பார்வதியம்மையாரை ஒரு கூற்றில் உடையவருமான சிவபெருமானுக்குத் தொண்டு புரியும் தன்மை உடைய பசுபதியார் என்னும் பெயருடையவர்.

29 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. 

           -திருமூலர்  (10,2,10-1)


பொருள்: என்றும் உள்ளவனாய், எனது உள்ளத்தில் புகுந்து நீங்காது நிற்கின்ற சிவபெருமான், `ஒளி, இருள் - புகழ், இகழ் - உடல், உயிர்` முதலிய மறுதலைப் பொருள்களிலும் அவை அவையாய்த் தொடர்ந்து நீங்காது நிற்கின்றான்.

26 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிபாகன் நம்வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 

              -மாணிக்கவாசகர்  (8-48-3)


பொருள்: நெஞ்சே! காட்டில் வேடனாய் வந்தவனும், கடலில் வலையனாய் வந்தவனும், பாண்டி நாட்டில் குதிரைப் பாகனாய் வந்த வனும், நமது வினைகளைக் கெடுத்து நம்மை ஆண்டருள் செய்கின்ற திருப்பெருந்துறையானும் ஆகிய சிவபெருமான் திருவடியை நமது மருள் கெடும் வண்ணம் வாழ்த்துவாயாக!

25 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காண்டவன் காண்டவன் காண்டற்
கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன்
நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்
தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பிற்
புரிநூல் புரளவே.

                      - சுந்தரர் (7-45-7)


பொருள்: அடியவர்கட்கு எளிதில் காணப்பட்டவன் ; திருமாலும் பிரமனும் தேட , அவர்களால் காணுதற்கரிய கடவுளாய் நீண்டவன் ; ஆமாத்தூரையும் ஆண்டவன் ; என்னையும் ஆளாக வைத்து ஆண்டவன் ; மார்பில் முப்புரி நூலைப் புரளப் பூண்டவன் திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவன் ஆவான் 

24 May 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.

                     -திருநாவுக்கரசர்  (4-63-1)


பொருள்: பார்வதிபாகனே ! மேம்பட்ட சோதியே ! கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே ! மழுப் படையை ஏந்தியவனே ! ஆதியே ! தேவர்கட்குத்தலைவனே ! அழகிய அண்ணாமலையில் இருப்பவனே ! உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றி நினையேன் .

23 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பைவாயரவ மரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி யேறுகந் தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியி னானெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்றிருப் பூவணமே.

                       -திருஞானசம்பந்தர்  (1-64-7)


பொருள்: பாம்பை இடையில் கட்டிக் கொண்டு, பூதகணங்கள் போற்றிப் பாட, மேனி முழுதும் மெய்மை வடிவான திருநீற்றைப் பூசி, விடையேற்றை ஊர்ந்து வரும் சிவபிரானது இடம், கைகளில் வளையல்களை அணிந்துள்ள இளமகளிர் தம் காதலர்களோடு புணர்ச்சி விருப்புடையராய் நெருங்கிச் செய்யப்படும் கலவி பற்றிய பாடல்களின் ஓசை நீங்காத அழகிய திருப்பூவணமாகும்.