27 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே.
 
            - திருஞானசம்பந்தர் (1-37-9)

 

பொருள்: சிவபெருமானிடம் வரங்களைப்பெறுதலை எண்ணி மகிழ்வோடு புறப்பட்டு வரும் அடியவர்களே, அப்பெருமான் திருமுன் தலை தாழ்த்தி வணங்குங்கள்; எளிதில் நல்வரம் பெறலாம். பிரமனும் திருமாலும் அறியாத அப்பரமன் உறையும் ஊர் திருப்பனையூராகும்.

26 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பான்மையில் சமைத்துக் கொண்டு
படைக்கலம் வினைஞர் ஏந்தத்
தேனலர் கொன்றை யார்தம்
திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சம்
ஆக்கிட அவர்க்கே பின்னும்
கானஊன் அமுத மாக்கும்
சிலையினைக் காப்புச் சேர்த்தார்.

            -கண்ணப்ப  நாயனார் புராணம் (32)

 

பொருள்: விழா எடுத்தற்குரிய முறையில் பணியாளர்கள் வில்லினை ஏந்த, தேன் பொருந்த அலரும் கொன்றையை அணிந்த சிவபெருமானுடைய சிவந்த பொன்மயமான மேருமலையானது முன்னர்ப் பாற்கடலில் மத்தாகக் கடைந்தபோது அவருக்கு நஞ்சை எடுத்து உண்ணும்படி கொடுத்ததற்குத் தீர்வாக, அப்பெருமானுக்குப் பின்னர், இம்மலையின்கண் ஊன் ஆகும் அமுதைக் கொடுக்க இப்பொழுது திண்ணனார் கையில் வில்லாயிற்று எனக் கூறுமாறு அமைந்த அவ் வில்லிற்குக் காப்புக்கட்டினர்.

25 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்

                - சேரமான் பெருமாள் நாயனார் (1,2)

பொருள்: மாலும், அயனும் தேடி அடைய முடியாதவனாய் நின்ற பெருமான், பிறக்காமல் தோன்றி, காணமல் கண்டு துறவாதே துறந்தவன்.  

24 February 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.
 
                       - திருமூலர் (10-7-5)

 

 பொருள்:பகலவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப் பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்வது இல்லை.
 

23 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்
கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை
தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே.
                    
                     - கருவூர்த்தேவர் (9-17-10)

 

பொருள்:  மெய்யுணர்வு இல்லாத மக்கள் இருகண்களும் ஒருசேர மூடி உறங்கும் இருள் செறிந்த பெரிய நடுஇரவிலே, விழித்துக்கொண்டிருக்கும் ஒருவனுடைய கண்களில் மாத்திரம் சிவந்த சுடரின் வெளிச்சம் கலந்தாற்போல, இறைவனுடைய திருவருளில் கலந்து மெய்ம்மையை உணர்ந்த கருவூர்த்தேவர் வழங்கும் கரும்பு போன்ற இனிய தமிழ்மாலையைப் பெரிய சோலை களில் மருத யாழ் ஒலியோடு பாட, அதனைக் கேட்கவரும் நீலகண்ட னாகிய, பல அண்டங்களிலும் உள்ள தேவர்கள் எல்லோருக்கும் தலைவனான சிவபெருமான், உகந்தருளியுள்ள இடம் திருஇடை மருதூரே ஆகும்

20 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இணையார் திருவடிஎன்
தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.
 
                   - மாணிக்கவாசகர் (8-13-1)

 

பொருள்: இரண்டாகிய அரிய திருவடியை, என் தலையின் மீது வைத்தவுடன், இதுவரையில் துணையென்று நினைத்திருந்த உறவினரெல்லாரையும், விட்டு நீங்கினேன். கரைகோலித் தடுக்கப் பட்ட நீர் சூழ்ந்த தில்லைநகர்க் கண்ணதாகிய, அம்பலத்தில் நடிக்கின்ற, நமதுபிறவிக் கடலுக்கு ஓர் மரக்கலம் போல்பவனாகிய சிவபெரு மானது பெருமையைப் புகழ்ந்து பாடி அல்லி மலர்களைப் பறிப்போம்.

19 February 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

மையார் கண்டத்தினாய் மத
மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந்
தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.
 
              - சுந்தரர் (7-28-5)

 

 பொருள்:கருமை பொருந்திய கண்டத்தையுடையவனே , யானையின் தோலைப் போர்த்தவனே , கையின்கண் பொருந்திநிற்கும் , படமெடுத்து ஆடுகின்ற பாம்பை உடையவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம்போல்பவனே , நீ தப்பாது என் உயிரினுள் புகுந்தாய் ; அங்ஙனம் புகுந்ததன்றி இதுகாறும் வெளிப் போந்தறியாய் ; ஆதலின் , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !