30 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.
 
             - திருமூலர் (10-6-9)

 

பொருள்: உடம்பொடு இருக்கின்ற  உயிர், உடம்பின்  தொடர்பை விடுத்து நீங்கும்பொழுது, அதனோடு உடன் செல்லும் பொருள் ஒன்றேனும் இல்லை. அவ்வுயிரை விட்டுத் தனித்து நிற்கும் உடம்பு பின் சுட்டெரிக்கப்படும் பொருளாய்விடும், யம தூதர் அதனையும் உடன்கொண்டுபோக நினைத்தல் இல்லையாதலால். ஆகவே, எல்லாவற்றையும் விடுத்துச் சிவபெருமானை நினையுங்கள்.

29 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின்
அழிவழ கியதிரு நீற்று
மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே.
 
             - கருவூர்த்தேவர் (9-17-1)

 

பொருள்: சிவந்த பாம்பு ஒன்று செம்மணியை உமிழ்தலால் அடியேன் பெரிதும் விரும்பும் எம்பெருமானுருடைய காதில் அழகிய செம்பொன்மயமான தோடுபோல அவர் அணிந்த பாம்பாகிய குழை விளங்க, விளங்கும் சடைமுடியிலிருந்து கசியும் கங்கைநீரினால் அழிந்த அழகிய திருநீற்றினை உடையவராய், ஞாயிற்று மண்டலம் விளங்க அதனிடையே மிக்க இருளை உடைய நள்ளிரவும் உள்ளதுபோலத் தோன்றுகின்ற கரிய நிறத்தைக்கொண்ட சிவந்த கழுத்தினை உடையவராய் உள்ள, அண்டங்களில் உள்ள தேவர்களுக்கு எல்லாம் தலைவராகிய சிவபெருமான் தங்கியிருக்கும் இடம் திருஇடைமருதூர் என்ற திருத்தலமாகும்.

28 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடகரியும் பரிமாவும்
தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா
றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந்
தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான்
திருமால்காண் சாழலோ.
 
              -மாணிக்கவாசகர்  (8-12-15)

 

 பொருள்: யானை குதிரை தேர் இவற்றின் மீது ஏறாமல் இடபத்தின் மீது சிவபெருமான் ஏறினதற்குக் காரணம் யாது என்று புத்தன் வினாவ, முப்புரங்களை எரித்த காலத்தில் தேரின் அச்சு முறியத் திருமால் இடப உருவாய்த் தாங்கினான் என்பது தான் காரணம்.

27 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வருங்கா லன்னுயிரை மடி
யத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரி
வித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடி
யேனையும் வேண்டுதியே.
 
                 - சுந்தரர் (7-27-9)

 

பொருள்: பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி , அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி , அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகை யாளனே , கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே , எங்கள் இறைவனே , அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக ஏற்றுக்கொள் .

23 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலு மங்கை யூடத்
தென்கையான் றேர்க டாவிச் சென்றெடுத் தான்ம லையை
முன்கைமா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவா ளருளி னானூ ரணிமறைக் காடு தானே.
 
                        - திருநாவுக்கரசர் (4-34-10)

 

பொருள்: கங்கையை  சிவபெருமான் சடையில் வைத்திருந்ததைக் கண்ட பார்வதி ஊடல் கொண்ட நேரத்தில் , தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக , பெருமான் கால்விரல் ஒன்றினால் அவனைக் கயிலை மலையின் கீழ் நசுக்க , அவன்தன் நரம்புகளை எடுத்து யாழ் அமைத்து யாழ் இசையோடு வேதத்தைப்பாட அதனால் உள்ளம் மகிழ்ந்து அவனுக்குத் தாம் கையில் வைத்திருந்த  வாளினை அருளினார் . அப்பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலம் அழகிய திருமறைக்காடாகும் .

22 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே.
 
            - திருஞானசம்பந்தர் (1-36-1)

 

பொருள்: ஒரு கலைப்பிறைமதியோடு வலிய கங்கை நீரும் நிலையாகப் பொருந்திய சடையை உடைய சிவபிரானது இடம், மலையிலிருந்து கொணர்ந்த முத்துக்கள் சிறந்த மணிகள் சந்தனம் ஆகியவற்றை அள்ளி வரும் அலைகளை உடைய காவிரிபாயும் திருவையாறு ஆகும்.

21 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெண்ணீறு நெற்றி
விரவப் புறம்பூசி
உண்ணெஞ்சில் வஞ்சக்
கறுப்பும் உடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள்
மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச்
சொன்னவி டம்புகுந்தான்.
 
               - ஏனாதி  நாயனார்  புரணாம் (35)

 

பொருள்: திருவெண்ணீற்றைத்தன் நெற்றி முழுதும் பொருந்துமாறு புறத்தே பூசி, நெஞ்சில் வஞ்சனையாகிய கறுப்பையும் உடன் கொண்டு, அழகிய ஒளி பொருந்திய வாளினையும் மணிக ளால் இழைக்கப் பெற்ற பலகையையும் கைகளில் கொண்டு, புண் ணியத்தன்மை வாய்ந்த போர் வீரராம் ஏனாதிநாதர் முன், தான் சொல் லிவிட்ட அவ்விடத்திற்குச் சென்றான்