30 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர வறநெறி மறையொடும் அருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
திணிபொழி றருமண மதுநுகர் அறுபத முரல்திரு மிழலையே.
 
             - திருஞானசம்பந்தர் (1-20-5)

 

பொருள்: கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து தம் திருவடி இணைகளைச் சனகர் சனந்தனர் ஆகிய இருவர் ஒருபுறமும், சனாதனர் சனற்குமாரர் ஆகிய இருவர் மறுபுறமும் பணிய அவர்கட்கு அறநெறியை மறையோடும்  அருளிச்செய்த சிவபிரான் உறையும் இடம், ஒளி பொருந்திய மணிகள் ஒப்பில்லாத மரகதம் ஆகியவற்றை அடித்துவரும் ஆற்று நீர் நிலமெல்லாம் நிறைந்து வளங்களால் அணி செய்யப் பெறுவதும் செறிந்த பொழில்கள் தரும் மணத்தை நுகரும் வண்டுகள் முரல்வதுமான திருவீழிமிழலையாகும்.

29 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.
 
               - மெய்ப்பொருள் நாயனார் புராணம் (1)

 

பொருள்:  சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மையாராகிய சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.

26 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.

                - காரைகாலம்மையார் (11-4-23)


பிறையும், கங்கையும், சீரும் அரவமும் சூடிய நம் சிவபிரான் எமக்கு இறங்க வில்லை என்றாலும், கண்டத்தில் நஞ்சை நிறுத்திய அவருக்கு ஆட்பட்டுவிட்டோம் என்று எது
நடந்தாலும் எம் உள்ளம் இருக்கும்.
   

25 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.
 
                - திருமூலர் (10-1-17)

 

பொருள்: கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற சிவன், யார் எதனை எண்ணினாலும்  அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுவதில்லை . நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.

24 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டுகொண் டேனே.
 
                - (9-5-4)

 

 பொருள்: தன் திருவடிநிழலின் கீழ் அடியேனையும் தடுத்து ஆட்கொண்ட பிறைவிளங்குகின்ற முடியை உடையவனாய், தானே உகந்து என்னிடத்தில்  மூன்று ஆதாரங்களாகிய மூன்று தாமரைகளிலும் உதித்து எழும் சிறந்த சுடராய், அருளாகிய ஒளிபொருந்திய கடலின் நீர்ப்பெருக்காய், திருவீழிமிழலையுள் விளங்குகின்ற வெண்மையான பளிங்குபோன்ற சிவபெருமானுடைய பொன்போன்ற திருவடிக்கண் தொண்டு செய்தலை மேற்கொண்ட அடியேன் அத்திருவடிகள் அடியேன் உள்ளத்தை விடுத்து நீங்கவிடுவேனோ?

22 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச்
சென்றுகுன்றி
விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம்
முழுதுங்கம்பித்
தழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண்
டருளிஎன்னைக்
கழுமணி யேஇன்னுங் காட்டுகண் டாய்நின்
புலன்கழலே.
 
            - மாணிக்கவாசகர் (8-7-27)

 

பொருள்: உடல் முழுதும் நடுங்கப் பெற்று, அழுகின்ற அடியார் நடுவே, என்னைப் பொருத்தி வைத்து அடிமை கொண் டருளி, தூய்மை செய்த மாணிக்கமே! செழுமையாகிய முத்துப் போன்ற அழகிய பல்லினை உடைய மாதரது வலையில் போய் மயங்கி விழுகின்ற அடியேனை விட்டு விடுவாயோ? இனியும் முன்போல உனது ஞானமாகிய திருவடியை அடியேனுக்குக் காட்டுவாயாக.

19 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மட்டார்மலர்க் கொன்றையும்
வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி
ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
 
           - சுந்தரர் (7-13-6)

 

பொருள்: தேன் நிறைந்த மலர்களை யுடையகொன்றை மரம் , வன்னி மரம் இவைகளை முரித்து , அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் , வாத்திய  முழக்கமும் , ஆடலும் , பாடலும் நீங்காது கொண்டு விளங்குகின்ற திருத் துறையூரில் எழுந்தருளியுள்ளவனே  , உன்பால் அடியேன் தவ நெறியையே தவிர வேறொன்றையும் வேண்டேன் கொள்ளேன் .