28 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே.
 
           - (9-5-2)

 

பொருள்: கற்றவர்களால் அநுபவிக்கப்படும் தெய்வீக மரத்தில் பழுத்தகனி போன்றவனாய், எல்லை இல்லாத பெருங் கருணைக் கடலாய், மற்றவர்கள்தம் முயற்சி யில் அறியமுடியாத மாணிக்க மலைபோன்றவனாய், தன்னை வழிபடும் அடியவருடைய உள்ளத்தில் மாணிக்கச் சுடர் போன்ற ஞான ஒளி வீசுபவனாய், பகைவர்களுடைய முப்புரங்களையும் அழித்த, எங்களுக்கு நன்மையைத் தருபவனாய், அடியார்களுக்கு அருளுவதற்காகவே திருவீழிமிழலையில் வீற்றிருந்த வெற்றியனாகிய சிவபெருமானைப் கண்டு  தரிசித்ததனால் என் உள்ளம் குளிர என் கண்களும் குளிர்ச்சி அடைந்தன .

27 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எறும்பிடை நாங்கூ ழெனப்புல னால்அரிப்
புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய
கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேஉணர் வுற்றவர்
உம்பரும்பர்
பெறும்பத மேஅடி யார்பெய ராத
பெருமையனே.
 
            - மாணிக்கவாசகர் (8-6-25)

 

பொருள்:  இயமன் ஒடுங்கும்படி, அவன் மேல் பொருந்திய மணம் நிறைந்த தாமரை மலர்களையொத்த உன் திருவடிகளாகிய அவற்றையே அழுத்தி அறிந்தவர்கள் பெறுகின்ற மிக மேலான பதவியாய் உள்ளவனே! அடியவராயினர், பின்பு உன்னை விட்டு நீங்காத பெருமையுடையவனே! எறும்புகட்கு இடையே அகப்பட்ட, நாங்கூழ் புழு அரிப்புண்டு வருந்தினாற்போல, புலன் களிடையே அரிப்புண்டு அரித்துத் தின்னப்பட்டு வருந்திய தனி யேனை விட்டு விடுவாயோ?

26 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலையாரரு வித்திரள்
மாமணி யுந்திக்
குலையாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கலையார் அல்குற் கன்னியர்
ஆடுந் துறையூர்த்
தலைவாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

            - சுந்தரர் (7-13-1)

பொருள்: மலையின்  அருவிக் கூட்டம்,  மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண்,   அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே தவிர வேறொன்றையும் வேண்டிக் கொள்ளமாட்டேன்.  

25 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளும்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.

           - திருநாவுக்கரசர் (4-16-1)

பொருள்: சடை உடையபெருமான்  வெண்ணீறு அணிந்தவராய், கரிய மான் குட்டி துள்ளும் கையினராய், ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய காலினராய், உண்மையான நெறியில் ஒழுகும் அடியவர்களுக்கு மெய்யராய், அத்தகுதியில்லாதவர்க்குப் பொய்யராய் உள்ளார்.

22 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிணிபடு கடல்பிற விகளறல் எளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமல மினிதமர் அனலுரு வினனவிர் சடைமிசை
தணிபடு கதிர்வள ரிளமதி புனைவனை யுமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநலம் மலிகழ லிணைதொழன் மருவுமே.
 
            - திருஞானசம்பந்தர் (1-19-2)

 

பொருள்:  நம்மைப் இடைவிடாமல் பிணிக்கும் கடல் போன்ற பிறவிகள் நீங்குதல் மிக எளிதாகும். அப்பிறவிக்கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை உடையது. ஆதலின் அழகிய கழுமலத்துள் இனிதாக அமர்கின்ற அழலுருவினனும் விரிந்த சடைமீது குளிர்ந்த கிரணங்களை உடைய பிறைமதியைச் சூடியவனும், உமையம்மையின் மணாளனும், நீலமணிபோலும் நிறத்தினை உடைய கறைக்கண்டனும் ஆகிய சிவபிரானின்  திருவடிகளைத் தொழுதல் நலமாகும் .

21 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மற்ற வர்செய லின்ன தன்மைய
தாக மாலய னானஅக்
கொற்ற ஏனமும் அன்ன முந்தெரி
யாத கொள்கைய ராயினார்
பெற்ற மூர்வதும் இன்றி நீடிய
பேதை யாளுடன் இன்றியோர்
நற்ற வத்தவர் வேட மேகொடு
ஞால முய்ந்திட நண்ணினார்.
 
            - இளையான்குடிமாற நாயனார் புராணம் (8)

 

இளையான்குடிமாற நாயனாரின் செல்வம் படிப்படியாக குறைந்து கொண்டிரும்பொழுது , மாலான பன்றியும் அயனான அன்னமும் தாம் காணச் சென்ற அடியையும், முடியையும் அறிய இயலாதவராகிய சிவ பெருமான், ஆனேற்றை ஊர்தியாகக் கொள்ளாமலும், உமையம்மை யாரை ஒரு மருங்கில் கொள்ளாமலும், ஒரு நற்றவ வேடமுடைய அடியார் வேடத்தைக் கொண்டு இவ்வுலகம் உய்யும் பொருட்டு எழுந் தருளினார்.

20 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி.

             - காரைகாலம்மையார் (11-4-15)

பொருள்: வானவர்கள் இறைவனின் பொற்பாதங்களை நினைந்து இருக்கமாட்டார்கள். அவன் பொற்பாதங்களை நினைந்து இருக்கும் அடியார்களுக்கு அவன் என்ன தான் செய்யமாட்டான் ?