28 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நாளும் நன்னிலந் தென்பனை
யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக்
காவு நெடுங்களம்
காள கண்டன் உறையுங்
கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டுவே ளூர்விளத்
தூர்நாட்டு விளத்தூரே.
 
              - சுந்தரர் (7-12-8)

 

பொருள்: நன்னிலம் , பனையூர் , கஞ்சனூர் , நீண்ட சடையையுடைன்  நெல்லிக்காவில்  , நெடுங்களம் ,  மிக , நஞ்சணிந்த கண்டத்துடன் கடைமுடி என்ற ஊரிலும்   , கண்டியூர் , வேளா நாட்டில் உள்ள வேளூர் , விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர்  என்ற ஊரிலும் ,  இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பன் .

27 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை யமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
 
                    - திருநாவுக்கரசர் (4-15-5)

 

பொருள்: கோலக்காவில் உள்ள நல்மணி , குடமூக்கில் உறையும் விடமுண்டபெருமான் , ஆலங்காட்டில் உறையும் அழகிய தேன் , தேவர்கள் தலைகளுக்குச் சூட்டப்படும் அழகிய மலர் , பால்போல் இனிக்கும் புதுமை மாறாத பழம் , பராய்த்துறையில் உள்ள பசிய பொன் , சூலம் ஏந்தியவன் , ஒப்பற்றவன் ஆகிய பெருமானை தோள்கள் குளிர  கைகளால் தொழுதேன் .

26 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.
 
         - திருஞானசம்பந்தர் (1-18-2)

 

பொருள்: ஆலாலநஞ்சைமிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும்,  கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன துன்பம் இல்லாதவரவர் 

25 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர மென்புபு னைந்த ஐயர்தம்
அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும்
நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்கு
வித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி
வெய்த முன்னுரை செய்தபின்.
 
           - சேக்கிழார் (இளையான்குடிமாற நாயனார் புராணம் - 3)

 

பொருள்: எலும்பு மாலைகளை  அணிந்த சிவபெருமா னுடைய அடியவர் என்னும் முறைமையால், தம்மிடத்துப்  வந்தவர்கள் யாவராயினும், தாம் நாளும் இயல்பாகச் செய்து வரும் பத்திமையால் முற்பட வந்து அவர்களை எதிர்கொண்டு, கை குவித்து வணங்கி, நின்று, அவர்தம் செவிகளில் குளிர்ந்த, மென்மை யான, இனிய மொழிகளை அவர் விரும்புமாறு முதற்கண் சொல்லுவார் .

22 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று

         - காரைக்காலம்மையார் (11-4-10)

பொருள்:  ஈசனை நான் என்றும் என்  மனத்தில் இனியவனாக வைத்தேன் . அவனை என் தலைவனாக கொண்டுள்ள எனக்கு அரிய காரியம் என்று ஒன்றும் இல்லை. 

21 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
 
              - திருமூலர் (10-1-8)

 

பொருள்: மால், அயன்  முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை கண்டு அளந்து  தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யாரும் இல்லை. அப்படிப்பட்ட எங்கள் சிவபிரான் எல்லாவற்றையும்  உள்அடக்கி  கடந்து நிற்கின்றான்.

20 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உருக்கிஎன் உள்ளத் துள்ளே
ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப் பருளுந் தில்லைச்
செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய
கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே.
 
        - திருமாளிகைத்தேவர் (9-4-7)

 

பொருள்: என் உள்ளத்தை உருக்கி அதன் உள்ளே ஊறுகின்ற தேனின் பெருக்கு மாறாதபடி, நடனத்தால் தன் உள்ளகக் குறிப்பினை அடியவர்களுக்கு அருளுகின்ற தில்லைப் பெருமான் பக்கல் செல்லும் மனப்பக்குவம் இல்லாத சுருக்கம் உடையவர்களையும், நரகத்தில் அழுந்துதற்குரிய வஞ்சகர் களையும், கெடாத தீவினைகளை நாளும் மிகுதியாகச் செய்து கொள் பவர்களையும், என் கண்கள் காணா. என் வாய் அப்பேயர்களோடு பேசாது .