10 August 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


நீற்றால்நிறை வாகிய மேனியுடன்
நிறையன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியரை
மருளும்பிணி மாயை அறுத்திடுவான்
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
எனநீடிய கோதில் திருப்பதிகம்
போற்றாலுல கேழின் வருந்துயரும்
போமாறெதிர் நின்று புகன்றனரால்.

                -திருநாவுக்கரசர் புராணம்  (70)


பொருள்: திருநீற்றினால் நிறைந்த மேனியுடன், மிகுந்த அன்பு பொருந்திய மனத்தில் விருப்பம் மிகப், பகைவரின் முப்புரங் களை எரித்த வேதியரான வீரட்டானத்து இறைவரை, மயக்கத்தையும் சூலையையும், மாயையும் அறுக்கும் பொருட்டுக் `கூற்றாயினவாறு விலக்ககலீர்` எனத் தொடங்கும் பெருமையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் போற்றுவதால், உலகத்தில் ஏழு பிறப்புக்களிலும் வரும் துன்பமும் நீங்குமாறு திருமுன்பு நின்று பாடினார்

09 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே. 

            -திருமூலர்  (10-3-6,2)


பொருள்: உந்திக்குக் கீழ்ப்பன்னிரு விரற்கிடையளவில் உள்ள இடத்தில் மனத்தை நிலைபெறச் செய்வதாகிய இரகசிய முறையை உலகர் அறியார். அதனை அறிந்து மனத்தை அங்கே நிறுத்துவராயின், இறைவன் தானே வந்து அவர்களைத் தன்பால் வர அழைத்து, அங்கு வீற்றிருப்பான்.

07 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பரம்பயன் தன்னடி யேனுக்குப்
பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
தோன்றுமிக் குன்றிடத்தே.

             -திருக்கோவையார்  (8-17,2) 


பொருள்: இக்குன்றிடத்துத் தோன்றுமிடம்; தில்லையின் வானவனது வானகத்தைச் சேர்ந்த தெய்வமகளிர் தமதிடமோ; யானையினென்பை வேலியாக நட்ட குரம்பைகளையுடைய குறத்தியர் இடமோ? நீ கூறுவாயாக

06 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மறைக ளாயின நான்கும்
மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத் திறையும்
தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

                 -சுந்தரர்  (7-75-1)


பொருள்: வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும் , பல சமயங்களும் , அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும் , இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும் , வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே முதல்வன் ` என்று அறிந்து , நாள்தோறும் அடிபணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

03 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுண்முக்கண்
எம்மா னிவனென் றிருவரு மேத்த வெரிநிமிர்ந்த
அம்மா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

               -திருநாவுக்கரசர்  (4-84-10)


பொருள்: படம் எடுக்கும் மேம்பட்ட பாம்பினை ஒத்த அல்குலை உடையவளாய்ச் சிறிய பாதங்களை உடையளான பார்வதி அஞ்சக் கையிலே மேம்பட்ட கட்டமைந்த வில்லை ஏந்திய மன்மதனை அழித்த தெய்வமாகிய முக்கண்ணனாம் எம்பெருமான் என்று பிரமனும் திருமாலும் புகழும்படி தீத்தம்பமாக ஓங்கி வளர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடைய அடி நிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

02 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


வெரிநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வா ருயர்வா னடைவாரே.

                -திருஞானசம்பந்தர்  (1-83-11)


பொருள்:  வெள்ளம் உலகத்தை மூட, அவ்வெள்ளத்தே  மிதந்த வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியுள் தோன்றிய அழகியனவும் சிறந்தனவுமான வேதங்களில் வல்ல ஞானசம்பந்தனுடைய இத்திருப்பதிகப் பாடல்களை, விண்ணோர் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள அம்பர்மாகாளத்தை விரும்பித் தொழுது உருகி உரைசெய்பவர் உயர்ந்த வானோர் உலகத்தை அடைவார்கள்.

01 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சுலவிவயிற் றகம்கனலுஞ்
சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக்
கொண்டணையக் குலவரைபோன்
றிலகுமணி மதிற்சோதி
எதிர்கொள்திரு வதிகையினில்
திலகவதி யார்இருந்த
திருமடத்தைச் சென்றணைந்தார்.

                        -திருநாவுக்கரசர் புராணம்  (62)


பொருள்: சுழற்றிச் சுழற்றி வயிற்றுள் பற்றி எரியும் சூலை நோய் தம்முடனே தொடர, பொருந்தி எழும் விருப்பம் தம்மைக் கொண்டு செலுத்த, பெரிய மலை போன்று விளங்கும் மதிலின் ஒளி எதிர் தோன்றத், திருவதிகையில் திலகவதியார் இருந்த திருமடத்தைச் சென்று அடைந்தார்.