21 April 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இறைவனை ஏத்துகின்ற இளை
யாள்மொழி யின்தமிழால்
மறைவல நாவலர்கள் மகிழ்ந்
தேத்துசிற் றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின் அணி
ஆலைகள் சூழ்மயிலை
மறைவல வாலிசொல்லை மகிழ்ந்
தேத்துக வான்எளிதே. 

                     -திருவாலிய  அமுதனார்  (9-25-10)


பொருள் : இறைவனை  போற்றுகின்ற இளம்பருவத் தலைவியின் கூற்றாக,  நான்மறைகளின் பொரு ளுணர்ந்து ஒலி பிறழாது அவற்றை ஓதுதலில் வல்லவர்கள் மகிழ்ந்து துதிக்கின்ற சிற்றம்பலம் தொடர்பாக வரப்பால் வரையறுக்கப்பட்ட வயல்கள் செந்நெற்பயிர்களோடும் மேம்பட்ட கரும்புகளின் வரிசையான ஆலைகளோடும் சூழ்ந்திருக்கும் திருமயிலாடு துறையைச் சேர்ந்த, வேதங்களில் வல்ல திருஆலிஅமுதன் பாடிய பாடல்களை விருப்பத்தோடு பாராயணம் செய்தால்  சிவலோகம் மறுமையில் எளிதாகக் கிட்டும்.

20 April 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

                             -மாணிக்கவாசகர்  (8-20-1)


பொருள்: என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம் தலைவனே! வணக்கம். பொழுது விடிந்தது; தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற அழகிய நகையினைக் கண்டு உன் திருவடியைத் தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக.

19 April 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கணென் னத்தகும் அடிகள்ஆ ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.

                                       -சுந்தரர்  (7-37-2)


பொருள்: பறக்கும் இயல்புடைய எங்கள் கிளிகளே , பாடும் இயல்புடைய எங்கள் நாகணவாய்ப் புட்களே , அறத்திற்குக் கண் என்று சொல்லத் தக்க தலைவராகிய திருவாரூர் இறைவரை , யான் ஒரு ஞான்றும் மறக்க இயலாமையையும் , அது காரணமாக எனது கைவளைகள் நில்லாது கழன்று வீழ்தலையும் , கண்கள் உறங்குதல் இல்லாமையையும் , என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ

18 April 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கற்றனன் கயிலை தன்னைக் காண்டலு மரக்க னோடிச்
செற்றவ னெடுத்த வாறே சேயிழை யஞ்ச வீசன்
உற்றிறை யூன்றா முன்ன முணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.
 
                         -திருநாவுக்கரசர் (4-47-10)

 

 பொருள்: எம்பெருமான் கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான் . சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும் .

15 April 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

                           - திருஞானசம்பந்தர்  (1-49-11)


பொருள்: இன்பத்துக்கு நிலைக்களனாயுள்ளனவும் அணிகலன்கள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப்பாகமாக ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும், இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு ஆகும் 

13 April 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அப்பதியிற் குலப்பதியாய்
அரசர்சே னாபதியாம்
செப்பவருங் குடிவிளங்கத்
திருஅவதா ரஞ்செய்தார்
மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார்
விழுமியவே ளாண்குடிமை
வைப்பனைய மேன்மையினார்
மானக்கஞ் சாறனார்.
 
                    - (மானக்கஞ்சாற நாயனார்  7)

 

பொருள்: அத்தகைய கஞ்சாறூர் எனும் பதியில், வேளாண் குலத்தலைவராயும், அரசனுடைய தானைத் தலைவராய் விளங்கு தற்கு என்றும் வழிவழி உரிமையுடையவராயும் உள்ளார் ஒருவர் தோன்றினார். அவர் இவ்வுலகில் உண்மைப் பொருள் எது என்பதை அறிந்து உணர்ந்தவர். மிகவும் விழுமிய வேளாண் குடிக்குச் சேம வைப்பாக விளங்குபவர். அவர் மானக்கஞ்சாறனார் எனும் பெயரினர்.

12 April 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு