09 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தலை யகத்தமர்ந் தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன்
பனிமலர்த் திருவடி யிணைமேல்
ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
சிவபதம் குறுகிநின் றாரே.
 
            - கருவூர்த்தேவர் (9-11-10)

 

பொருள்: எல்லாவற்றிக்கும்  ஆதியாய் அந்தமாய், முடிவு என்பதே இல்லாத முதற்பொருளாய்த் திருமுகத்தலை என்ற தலத்தில் அமர்ந்து, பாலும் அமுதமும் போன்ற இனிய னாய், பாம்பை அணிகலன்களாக உடையவனுடைய குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற திருவடிகள் இரண்டனையும் பற்றிக் கரும் பாலையில் காய்ச்சப்படும் பாகுபோன்ற சொற்களால் கருவூர்த்தேவர் பாடிய அமுதத்தை ஒத்த இனிய தமிழ்மாலையைக் கடமையாகக் கொண்டு பாடும் அடியவர் யாவரும் சிவலோக பதவியை மறு பிறப்பில் அணுகிநிற்பர்.

08 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்
காதியும் அந்தமும் ஆயி னாருக்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
                - மாணிக்கவாசகர் (8-9-20)

 

பொருள்: வேதமும்  வேள்வியும்  ஆனவரும், மெய்ப்பொருளும் பொய்ப் பொருளும் ஆனவரும், ஒளியுமாகி, இருளும் ஆனவரும், துன்பமுமாகி இன்பமும் ஆனவ ரும், பாதியுமாகி முழுதுமானவரும், உயிர்களுக்குப் பந்தமும் ஆகி வீடும் ஆனவரும், உலகுக்கு முதலும் முடிவுமானவரும் ஆகிய இறைவருக்கு, நீராடும் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

07 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாரூர் பல்லவனூர் மதிற்
காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவிற் றிரு
மேற்ற ளிச்சிவனை
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்டன்ஆ ரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார் சிவ
லோகஞ் சேர்வாரே.
 
            - சுந்தரர் (7-21-10)

 

பொருள்: பல்லவனது அரசிருக்கை ஊராகிய , மதிலை உடைய காஞ்சி மாநகரின்கண் சிறப்புப் பொருந்திய இடத்தில் விளங்கும் திரு மேற்றளியின்கண் உள்ள சிவபெருமானை , திருவாரூர்ப் பெருமானுக்கு அடியவனான அணுக்கத் தொண்டனாம் நம்பியாரூரன் பாடிய ,  இப் பாடல்களைப் பாடவல்லவர் , சிவலோகத்தை சேர்வர்கள். 

04 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி யரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை யஞ்சப் பெருவிர லதனை யூன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்துஞ் சிதறுவித் தவனை யன்று
ஆர்த்தவா யலற வைத்தா ரதிகைவீ ரட்ட னாரே.
 
                 - திருநாவுக்கரசர் (4-27-9)

 

பொருள்: கயிலைமலையை நோக்கி வந்து போரிடும் வலிமையை உடைய இராவணன் அதனைப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்சத் தம் கால்விரலை அழுத்தி ஊன்றிச் சிறப்புடைய அவனுடைய தலைகள் பத்தும் சிதறச் செய்து , ஒரு கணத்தில் , மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்த அவன் வாய்கள் துயரத்தால் கதறுமாறு செய்தவராவர் அதிகை வீரட்டனார் ஆவார்  .

03 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மெய்த்து லாவு மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச் சரத்தை யுயர்காழி
அத்தன் பாத மணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே.
 
              - திருஞானசம்பந்தர் (1-29-11)

 

பொருள்: வாய்மையே பேசி வாழும் மறையவர் வாழும் திருநறையூரின்கண் சித்தன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானது சித்தீச்சரத்தை, மேலான காழி மாநகரில் விளங்கும் சிவபிரானது திருப்பாதங்களைத் தனது திருமுடிக்கு அணியாகக் கொண்ட ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடிப்பரவப் பாவங்கள் நீங்கும்.

02 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வென்றிமால் யானை தன்னை
மேல்கொண்ட பாக ரோடும்
சென்றொரு தெருவின் முட்டிச்
சிவகாமி யார்முன் செல்ல
வன்தனித் தண்டில் தூங்கும்
மலர்கொள்பூங் கூடை தன்னைப்
பின்தொடர்ந் தோடிச் சென்று
பிடித்துடன் பறித்துச் சிந்த.
 
             - எறிபத்த நாயனார்  புராணம் (13)

 

பொருள்: வெற்றி பொருந்திய அப்பெரிய யானையானது தன் மீது இவர்ந்து வரும் பாகரோடும் சென்று, ஒரு தெருவில் அப்பாகர்களின் கட்டுக் கடங்காமல் தனக்கு முன் சென்று கொண்டிருக் கும் சிவகாமியாண்டாரைக் கண்ட அளவில், அவர்தம் வலிமை மிக்க ஒப்பற்ற தண்டில் தொங்குகின்ற மலர்கள் நிறைந்த திருப்பூங் கூடையை, அவர் பின் தொடர்ந்து ஓடிப் பற்றி, நிலத்தில் சிந்த.

01 July 2014

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

தவனே உலகுக்குத் தானே
முதல் தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ
லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி
கடலிடை நஞ்சம்உண்ட
பவனே எனச்சொல்லு வாரும்
பெறுவரிப் பாரிடமே.
 
               -  சேரமான் பெருமாள் நாயனார் (11-6-5)
 
 பொருள்: சிவபெருமானே எல்லோரிலும் முதல்வனும்,
எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும் அவன் படைத்தனவே.
 அவன் அனைத்துப் பொருள் களிலும் அவையேயாய் நிறைத்திருக்கின்றான்` என இவ்வாறு உணர்கின்றவர்கள் சிவலோக வாழ்க்கையைப் பெறுவர்.
 அவன் திருமாலை இடபமாகக் கொண்டு ஏறி நடாத்துபவன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தேவர் பொருட்டு உண்டவன், நினைப்பவர் நினைத்த இடத்தில் அவர் நினைத்த வடிவில் தோன்றுபவன் என இவ்வாறு அவனைப் புகழ்பவரும் இவ்வுலக ஆட்சியைப் பெறுவர்.