10 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மங்கையைப் பாக மாக
வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி
ஏழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள்நா யகருக் கன்பர்
தாளலால் சார்பொன் றில்லார்.
 
       - மெய்ப்பொருள் நாயனார் புராணம் (3)

 

பொருள்: உமையம்மையாரை ஒரு பாகத்தில் வைத்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயில்கள் அனைத்தினும் நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் குறையாது நடத்தி, ஏழிசையோடு கூடிய பாடல்களும், ஆடல்களும் சிறப்பாக ஓங்க அவற்றைப் பாதுகாத்து வாழ்கின்றவர். தம் தலைவராகிய சிவபெரு மானின் அடியவர் திருவடிகளையன்றி வேறொரு சார்பும்  இல்லாதவர்.

09 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று.
 
             - காரைகாலம்மையார் (11-4-25)
 
பொருள்:  சிவபெருமான், எங்கும் சென்று பிச்சை யேற்பதையும், இரவிலே சுடுகாட்டில் ஆடுவதையும், இவை இவர் செய்யும் காரியமா ? என்று சிறிதும் எண்ணிப் பாராமலே செய்தற்குரிய காரணத்தை நாம் இங்கேயிருந்து கொண்டு என்ன என்று சொல்ல முடியும்? முடியாது. ஆகவே, நாம் அவனை நேரிற் காணமுடிந்த பொழுது அவனிடமே, `இவை எதற்கு` என்ற கேட்டுத் தெரிவோம். அது வரையில் சும்மா இருப்போம்

08 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
 
              - திருமூலர் (10-1-21)

 

பொருள்: சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாதவன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.

07 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இத்தெய்வ நெறிநன் றென்றிருள் மாயப்
பிறப்பறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
புராணசிந் தாமணி வைத்த
மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்
அறிவரோ அறிவுடை யோரே.
 
               - (9-5-5)

 

பொருள்: இத்தெய்வத்தை வழிபடும் வழி நல்வழி என்று உட்கொண்டு அஞ்ஞானமும் வஞ்சனையும் கூடிய பிறவிப் பிணி யிலிருந்து தாமே தம்மைக் காத்து கொள்ள இயலாத பொய் நெறியை  போன்று விரைவில் அழியும், நிலைபேறில்லாத தெய்வங்களைப் பரம் பொருளாகக் கருதி வழிபடும் வழியிலே அடியேன் ஈடுபடாத வகையில் அருள்புரிந்த, வேண்டியவர்க்கு வேண்டியன நல்கும் சிந்தாமணியாய், ஆதிபுராதனனாய் உள்ள சிவபெருமான் அமைத்து வைத்த உண்மையான தெய்வநெறியில் வாழும் அந்தணர்களின் திருவீழிமிழலையில், தேவருலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்த செழுமையான கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவ பெருமானை விடுத்து, அறிவுடையார்கள் பயனில்லாத பிறபொருள்களைப் பொருளாக நினைப்பாரோ?

 

06 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற்
றச்சிலையாம்
விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின்
மின்னுகொன்றை
அலங்கலந் தாமரை மேனிஅப் பாஒப்
பிலாதவனே
மலங்களைந் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு
மத்துறவே.
 
            - மாணிக்கவாசகர் (8-6-29)

 

பொருள்: பொன் போன்ற கொன்றை மாலை அணிந்த, செந்தாமரை மலர் போன்ற திருமேனியை உடைய அப்பனே! ஒப்பற்றவனே! என் சுற்றத் தொடர்பை அறுத்தவனே! என்னைக் குற்றத்தினின்றும் நீக்கியவனே! வெற்றி வில்லாகிய மேருவையுடைய எந்தையே! கடைகின்ற மத்துப் பொருந்தினவுடன் சுழல்கின்ற தயிர்போல, ஐந்து மலங்களாலும் அலைவுற்று வருந்துகின்ற என்னை விட்டு விடுவாயோ

03 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செய்யார்கம லம்மலர்
நாவலூர் மன்னன்
கையால்தொழு தேத்தப்
படுந்துறை யூர்மேல்
பொய்யாத்தமிழ் ஊரன்
உரைத்தன வல்லார்
மெய்யேபெறு வார்கள்
தவநெறி தானே.
 
            - சுந்தரர் (7-13-11)

 

பொருள்:  தாமரை மலர் சூழந்த திரு நாவலூருக்குத் தலைவனும் , மெய்ம்மையையே கூறும் தமிழ்ப் பாடலைப் பாடுபவனும் ஆகிய நம்பியாரூரன் , யாவராலும் கையால் கும்பிட்டுத் துதிக்கப்படும் திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது பாடிய இப் பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர் .

02 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணம்
தற்றவர் தம்வினை யானவெ லாமற
அற்றவ ராரூ ரரநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.
 
             - திருநாவுக்கரசர் (4-17-5)

 

பொருள்: பிரம்மகபாலத்தில்  பிச்சைவாங்கி உண்பவரும் , சுருண்ட கோவணத்தை இறுக்கிக் கட்டியவரும் , இயல்பாகவே வினையின் நீங்கியவருமாய் உள்ள எம்பெருமானாருடைய ஆரூர் அரநெறிக் கோயிலைத் தம் வினைகளாயின எல்லாம் நீங்குமாறு கையால் தொழும் வாய்ப்புப் பெற்றவர் , ஞான ஒளி பெற்றவராவர் .