28 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முழுதும் பழுதே புரிமூர்க்கன்
உலந்த போதின்
எழுதுங் கொடிபோல் பவருட்பட
ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வுற் றதுமற்றவன்
அன்ன மாலைப்
பொழுதும் புலர்வுற் றதுசெங்கதிர்
மீது போத.

                - மூர்த்தி நாயனார்  (26)


பொருள்: முழுதும் தீய செயல்களையே செய்து வந்த மூர்க்கன் இறக்க, எழுதப் பெறும் கொடி போன்ற எழிலுடைய அவன் தேவியர் உட்பட, கவலையால் சுற்றம் முழுதும் வாடலுற்றனர். மற்று அக்கொடியவினைபோன்று மயங்குதற்குரிய இரவும், சிவந்த ஒளியையுடைய கதிரவன் வரக் கழிந்தது

23 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே. 

                -திருமூலர்  (10-2-5,1)


பொருள்: கருமலைகள் பலவற்றையும் உள்ளடக்கி மேல்  எழுந்து திருமால், அயன் இருவரும் தாமே தலைவர் எனத் தனித்தனிக் கூறிப் போர்புரியச் சிவபெருமான் ஒருவனும் அந்நீர் வறப்பச் செய்து அவர்க்கிடையே ஓங்கிய ஒளியாகிய, அணுகுதற்கு அரிய நெருப்பு மலையாய் நின்று, பின்னர் அவர்கட்கு அருள் செய்தான்.

22 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஞானவாள் ஏந்தும்ஐயர்
நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர்
மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம்
அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம்நாம்
மாயப்படை வாராமே. 

               -மாணிக்கவாசகர்  (8-46-1)

 

பொருள்: ஞானமாகிய வாளைத் தாங்கிய இறைவரது நாதப்பறையை முழக்குங்கள்! பெருமையாகிய குதிரையை ஏறுகின்ற இறைவனை அறிகின்ற அறிவு என்கிற வெண்குடையைக் கவியுங்கள்! திருநீறாகிய கவசத்திற்குள் புகுந்து கொள்ளுங்கள்! இவ்வண்ணம் செய்தால்  மாயப் படையை வென்று முத்தி உலகைக் கைக்கொள்ளலாம்.

21 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அந்தி திரிந்தடி யாரும்நீரும் அகந்தொறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே.

                     -சுந்தரர்  (7-43-8)


பொருள்:  ஆண், பெண் குரங்கிற்கும் உண்ணுதற் குரிய பழங்களை அவைகள் தேடிக்கொண்டு மலைப்புறங்களில் முற்பட்டுச் சென்றபொழுது அவைகள் கண்டு, அன்புகொண்டு வணங்குமாறு நின்றருளுகின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, நீரும் அடியாருமாக இல்லந்தோறும், அந்தியிலும், சந்தியிலும் பிச்சைக்குச் சென்று திரிவது தக்கதோ?

20 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பேரிடர்ப் பிணிக டீர்க்கும் பிஞ்ஞக னெந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக் கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கி னாரே.

                         -திருநாவுக்கரசர்  (4-58-8)


பொருள்: பெரிய துயர்களைத் தரும் பிணிகளைப் போக்குபவரும் , தலைக்கோலத்தை அணிந்தவரும் எமக்குத் தந்தையாருமாகிய பெருமான் , நீலகண்டராய் , ஒரு கையில் மண்டையோட்டை ஏந்திச் சிறப்புப்பொருந்திய சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை ஏறி ஊர்ந்த செல்வராய்ப் பெரிய பூதங்கள் தாளம்போடப் பருப்பதம் நோக்கினார் .

17 February 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கு மினிதாக மொழியுமெழி லிளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
கோனாரை யென்னிடைக்கே வரவொருகாற் கூவாயே.

                     -திருஞானசம்பந்தர்   (1-60-8)


பொருள்: பால்மணம் கமழும் மலர்களைக் கொண்ட மாமரத்தின் தளிர்களைக் கோதி உண்டு, எல்லோர்க்கும் இனிதாகக் கூவும் அழகிய இளமையான குயிலே! தேன் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய தேவர் தலைவனாகிய சிவபிரான் என்னிடம் வருமாறு ஒருமுறையேனும் கூவுவாயாக.

16 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அன்பின்துணி வால்இது செய்திடல்
ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண்
எல்லாங் கொண்டு
முன்பின்னல் புகுந்தன முற்றவும்
நீத்துக் காத்துப்
பின்புன்பணி செய்துநம் பேருல
கெய்து கென்ன.

                     -மூர்த்தி நாயனார்  (22)


பொருள்: ஐயனே! அன்பின் துணிவால் இதனைச் செய்யற்க! உனக்குக் கொடிய துன்பத்தைச் செய்வித்த அக்கொடி யோன் வலிந்து கொண்ட நாடு முழுவதையும் நீயே கொண்டு, முன்பு அவனால் இந்நாட்டில் புகுந்த இன்னல் யாவற்றையும் நீக்கி, உயிர்களைச் செப்பமுறக் காத்து, இதுவரை மேற்கொண்டிருந்த பணியையும் செய்து, பின் நமது பேருலகை அடைந்திடுவாய்,` என்று அருளினார் 

15 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே. 

                       -திருமூலர்  (10-2-4,5)


பொருள்: அக்கினிதேவன் கிளர்ந்தெழுந்தமைக்குத் தக்கன் முன்னிலையில் தேவர் பலரும் அவனைப் புகழத் தேவ கூட்டத்துள் கடைப்பட்டவனாகிய அக்கினிதேவன் முதற் குற்றவாளி யாயினமையை அறிந்து சிவபெருமான் கொண்ட சினமாகிய மேலான தீ அவ்வேள்விச் சாலையிற் சென்று பற்ற, அக்கினிதேவன் தனக்குப் பொருந்தியதொரு பெரிய கள்ள வழியினால் வேள்விச் சாலையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான்.

14 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பெருமான் பேரா னந்தத்துப்
பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந்
திறந்த போதே சிவபுரத்துத்
திருமா லறியாத் திருப்புயங்கன்
திருத்தாள் சென்று சேர்வோமே.

                      -மாணிக்கவாசகர்  (8-45-8)


பொருள்: இறைவனது பேரின்பத்தில் பிரியாமல் மூழ்கி யிருக்கப் பெற்றவர்களே! நீங்கள் அருமையான மயக்கத்தில் பொருந்திப் பின்பு ஐயோ என்று, வருந்தி அலறாவண்ணம் அழகிய சிறந்த மணிகள் இழைக்கப் பெற்ற திருக்கதவு, திறந்திருக்கும் போதே, சிவபுரத்திலுள்ள, திருமாலறியாத, அழகிய பாம்பணிந்த பெருமானது திருவடியை நாம் சென்றடைவோம்.

13 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆடி யசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும்
பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ
மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம்
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.

                            -சுந்தரர்  (7-43-5)


பொருள்: மாடங்கள், மதில், அழகிய கோபுரங்கள், மணிமண்டபங்கள்மேலும், மேகங்கள் மூடிக்கொண்டு தவழ்கின்ற, சோலை சூழ்ந்த திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, அடியாரும் நீருமாகச் சென்று இல்லந்தோறும் ஆடியும், பாடியும் வருந்திச் சேர்த்த பொருள்களெல்லாம், உம் தேவிக்கு மட்டில்தான் உரியனவோ? எம்போல்வார்க்குச் சிறிதும் உரியது இல்லையோ?

10 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கன்றினார் புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னா னீர்மையு நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமு மூர்பலி தேர்ந்து 
பின்னும்பன்றிப்பின் வேட ராகிப் பருப்பத நோக்கி னாரே.



                    - திருநாவுக்கரசர் (4-58-1)

பொருள்தம்மைவெகுண்ட பகைவர்களின் மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு கோபித்து , தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிந்து நின்ற தம் வேடப் பாங்கால் பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும் அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப் பின் வேடராய்ச் சென்றவருமாவார் . அப்பெருமான் திருப்பருப் பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார்.

09 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க விசைபாடு மளியரசே யொளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற் பகராயே.

                          -திருஞானசம்பந்தர்  (1-60-1)


 பொருள்:வளமையான அலைகளோடு கூடிய நீர் நிலைகளில், மலர்ந்த தாமரை மலர்களின் விளைந்ததேனை வயிறார உண்டு, தன் பெண் வண்டோடு களித்து, சிறந்த அலைபோல மேலும் கீழுமாய் அசையும் நடையில் இசைபாடும் அரச வண்டே! என் மேல் பரிவு கொண்டு, ஒளிபொருந்திய இளம்பிறையை முடியிற் சூடியவரும், எலும்பு மாலைகளை அணிகலனாகப் பூண்ட மார்பினருமாகிய, திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக் கூத்து ஆடும் பரமரைக் கண்டு, அவரிடம் எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும் பகர்வாயாக.

08 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நட்டம்புரி வார்அணி நற்றிரு
மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை
முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து
முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோல்நரம் பென்பு
கரைந்து தேய.

                 -மூர்த்தி நாயனார்  (20)


 பொருள்: சிவபெருமான் அணிதற்குரிய திருமேனிப் பூச்சாகிய சந்தனக் காப்பு அணியும் தொண்டிற்கு, இன்று எனக்குத் தடை நேர்ந்திடினும், கல்லில் தேய்ப்பதற்கு உரிய என் கை தடையின்றி உள்ளது என்று நினைந்து, வட்டமாகத் திகழ்ந்திருக்கும் சந்தனக் கல்லில் தம் முழங்கையைப் போர்த்த தோல், நரம்பு, எலும்பு எல்லாம் உராய்ந்து கரைந்து தேயுமாறு தேய்த்தார்.



03 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

                    -திருமூலர்  (10-2-4,1)


பொருள்: தக்கனது வேள்விக் குண்டத்தில் தீ நன்கு வளர்க்கப் பட்டபொழுது அங்குக் கூடியிருந்த தேவர், யாவர்க்கும் தந்தையும், தலைவனுமாகிய சிவபிரானை இகழ்ந்த அத்தக்கனுக்கு, முதல் ஆகுதியைச் சிவபெருமானுக்குச் செய்யுமாறு அறிவு புகட்டி அவ்வாறு செய்வித்து அவ்வேள்வியை முடிக்க மாட்டாதவராய், அவனுக்கு அஞ்சி முறை திறம்பித் திருமாலுக்கு முதல் ஆகுதியைச் செய்ய இசைந்திருந்தமையால், பின் அப்பெருமான் சினந்து வீரபத்திரரை விடுத்தபொழுது அவரால் அனைவரும் அழிந்தனர்.

02 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விடுமின் வெகுளி வேட்கைநோய்
மிகஓர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ
டுடன்போ வதற்கே ஒருப்படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
அணியார் கதவ தடையாமே
புடைபட் டுருகிப் போற்றுவோம்
புயங்கன் ஆள்வான் புகழ்களையே. 

                    -மாணிக்கவாசகர்  (8-45-5) 


பொருள்: மேன்மைப்படுவதற்கு இனிமேல் ஒருகாலம் கிடையாது. ஆகையால் சிவலோகத்தின் அழகிய கதவு நமக்கு அடைக்கப்படாதிருக்கும்படி கோபத்தையும் காம நோயையும் விட்டு விடுங்கள். நம்மை உடைய பெருமானுடைய திருவடிக்கீழ் பெரிய கூட்டத்தோடு உடன் செல்வதற்கு மனம் இசையுங்கள். பாம்பை அணிந்தவனும் நம்மை ஆள்பவனுமாகிய இறைவனுடைய பெருமை களை எங்கும் சூழ்ந்து மனமுருகிப் போற்றுவோம். போற்றினால் சிவலோகத்தில் நாம் போய்ச் சேர்ந்து விடுவோம்.

01 February 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொண்டர்கள் பாடவிண் ணோர்க ளேத்த உழிதர்வீர்
பண்டகந் தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர்
மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே.

                                    -சுந்தரர்  (7-43-3)


பொருள்: கைவாள் ஏந்தியவர், பெருவாள் ஏந்தியவர், வில் ஏந்தியவர் ஆகிய பலரும் புறத்து நின்று காக்கின்ற, புகழையுடைய, நெய் முதலியவற்றை முகந்து சொரிகின்ற கைகளால் வளர்க்கப்படு கின்ற வேள்விகளின் முழக்கம் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந் தருளியிருப்பவரே, நீர், அடியவர்கள் பாடவும், தேவர்கள் துதிக்கவும் தலைவராய்த் திரிவீர்; ஆதலின், பழைமையான இல்லங்கள்தோறும் பிச்சைக்குச் செல்வது தகுதியோ?