28 October 2016

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னு மாற்பேற் றடிகளை
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே.

                     -திருஞானசம்பந்தர்  (1-55-11)


பொருள்: மாலும் சந்திரனும் இருந்து  பணிசெய்து வழிபட்ட நிலைபேறுடைய திருமாற்பேற்றுள் விளங்கும் இறைவனை நிலைத்த காழிமாநகருள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் கெடும்.

27 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.

                       -ஆனாய நாயனார்  (8)


பொருள்: ஒப்பற்ற பெருங்குடிகள் நெடுங்காலமாகத் தழைத்துச் செழித்திருக்கும் தன்மையில் ஓயாது, தீதின்றி நன்னெறி யில் ஈட்டிய பொருள் வளத்துடன் அறமே நிலவிய சிறப்புடன் விளங்க இருப்பது அக்கணமங்கலம் என்னும் ஊராகும். அப்பதியில் வாழ்ந் திருப்பவர் இடையர் குலத்துத் தோன்றிய ஆனாயர் என்பார்.

26 October 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 

               - திருமூலர் (10-26-1)


பொருள்: நடுவுநிலைமையிற் தவராதவர் ஒருபோதும் நரகம் புகார். தேவராய்த் துறக்கம் புகுதலும் செய்வர்; அதுவேயன்றி ஞானமும் பெற்று வீடெய்துவர். அதனால், நானும் அவ்வழியிலே நிற்கின்றேன்.

25 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

             - சேந்தனார் (9-29-9)


பொருள்: பாலை உண்பதற்கு வியாக்கிர பாதமுனிவர் புதல் வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால்பெறாது அழுது, வருந்த அவனுக்குப் பாற்கடலையே அழைத்து வழங்கிய பெரு மானாய், ஒருகாலத்தில் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருள் செய்தவனாய், நிலைபெற்ற தில்லைத்திருப்பதியிலே வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற சிற்றம்பலத்தையே இடமாக்கொண்டு, அருளைவழங்கி நாட்டியத்தை நிகழ்த்தும் எம் பெருமான் பல்லான்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

24 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பெரும்பெரு மான்என் பிறவியை வேரறுத்
துப்பெரும்பிச்சுத்
தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என்
மனத்தினுள்ளே
வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி
யாமல்நின்ற
அரும்பெரு மான்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

              -மாணிக்காகவாசகர்  (8-42-3)


பொருள்: இறைவனே! பெரிய பெருமானும், என் பிறவியை வேரறுத்து எனக்குப் பெரும் பித்தேற்றும் பெருமானும்; சதுரப் பெருமானும்; என் மனத்தில் எழுந்தருளும் பெருமானும்; பிரம விட்டுணுக்கள் அறியவொண்ணாமல் நின்ற அரும்பெருமானும் ஆகிய தலைவனே! அடியேன் உன் அடைக்கலமே!.

21 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்
உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞால மாண்டவர்க்குந் தாம்போய்
வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.

                   -சுந்தரர்  (7-40-11)


பொருள்: கடல்சூழ்ந்த தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணனைச் செருக்கடக்கியவனும் , செம்மையான சடையின்மேல் வெண்மையான சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை , கரையின்கண் நிரம்பிய நீரைப் பொருந்திய கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு அடிவணங்கி , வணங்கப்பெற்ற அவ் வுரிமையினால் புகழ்மிகுந்த ,   திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய இவ்வொளி பொருந்திய தமிழ்ப்பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லையாற் பொருந்திய வகைகளையுடைய நில வுலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய் , பின்புசென்று வானுலகத்தார்க்கும் தலைவராய் நெடிது வாழ்வர் .

20 October 2016

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


தொழுதகங் குழைய மேவித் தொட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றா ரவரவர் போலு மாரூர்
எழிலக நடுவெண் முத்த மன்றியு மேர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட் புதுமுகிழ் சூடி னாரே.

                          -திருஞானசம்பந்தர்  (4-53-3)


பொருள்: தம்முள் ஒத்த தன்மை உடைய தொண்டர்கள் தொழுது மனம் உருகுமாறு விரும்பி அழுதனராக , ஆரூரிலே பல வேலிப்பரப்புடைய சோலையின் நடுவே விளங்கும் பூங்கோயிலின் மூலத்தானத்திலே உறைந்து முத்துக்களையும் பிறையையும் சூடிய பெருமான் அவ்வடியவருடைய உள்ளத்திலே புகுந்து நிற்குமாற்றால் , தாமும் அவ்வவ்வடியவர் போல்வாராநின்றார் .

19 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே.

                   - திருஞானசம்பந்தர்  (1-55-2)


பொருள்: மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் நிலையான திருமாற்பேற்றைத் இருப்பிடமாக உடையவரே, உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து ஏந்திய கையினராய்க் காலை, மாலை இருபோதும் உம்மைத்தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.

18 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


என்றவர் போற்றி செய்ய
இடபவா கனராய்த் தோன்றி
நன்றுநீ புரிந்த செய்கை
நன்னுத லுடனே கூட
என்றும்நம் உலகில் வாழ்வாய்
என்றவ ருடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர்
மழவிடை உகைத்துச் சென்றார்.

                       -அரிவாட்டாயநாயனார்  (21) 


பொருள்: என்று அவர் போற்றி வணங்க அவர்முன், ஆனேற்றின்மீது தோன்றியருளி, `நீபுரிந்த செயல் நன்று. நல்ல நெற்றியினையுடைய உனது மனைவியுடன் என்றும் நீங்காது நமது உலகில் வாழ்வாயாக` என அருள் புரிந்து, அவரும் தம்முடன் வந்திடத் திருமன்றுள் ஆடியருளும் முதல்வனாய பெருமானும் அறக்கடவுளாம் ஆனேற்றின் மீது எழுந்தருளிச் சென்றார்.

17 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.
   
                       - திருமூலர் (10-25-7)


பொருள்: நல்ல நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப் பொருளின் இயல்பை உணர்ந்து, வெளியில்  கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியா தவர்க்கு அவை கூடாவாம்.

14 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.

              -சேந்தனார்  (9-29-7)


பொருள்: சிவநெறி ஒழுக்கமும் அவன் திருவருளும் அடியேனிடத்து நிலைபெற்று விளங்கும்படி, அச்சிவலோக நாயக னான பெருமானுடைய திருவடிகளின் கீழ் மற்ற யாவரும் பெறாததான யாவரையும் யாவற்றையும் உடையவன் சிவபெருமானே என்று அறியும் அறிவினைப் பெற்றேன். அவ்வறிவால் அடியேன் பெற்ற பேற்றினை வேறுயாவர் பெறக்கூடும்? இவ்வுலகில் நாட்டில் உள்ளா ரும் ஊரில் உள்ளாரும் எடுத்துக் கூறும்படி, அவன்புகழைப் பிதற்றி உமாதேவியின் கணவனாகிய எம்பெருமானுக்கு நாம் அடிமையாகிய திறத்தை இந்நிலவுலகத்தாரும் தேவர் உலகத்தாரும் அறியும் வகையில் அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

13 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந்
தமைந்த
பழுத்தமனத் தடியர்உடன் போயினர்யான்
பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி
ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன்
அடைக்கலமே.

                 -மாணிக்கவாசகர்  (8-24-1)


பொருள்: இறைவனே! தாமரை மலர் போன்ற உன் திருவடியைச் சேர்ந்த அடியார் உன்னோடு சென்றார்கள். புழுக்கள் வாழ்தற்கு இடமாகிய இழிந்த உடலுடன் கல்வியும் ஞானமும் இல்லாத பொல்லா அழுக்கு மனத்தை உடைய பாவியேனாகிய நானும் உன் அடைக்கலமே!.

12 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
குங்குமங்க ளுந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

                       - சுந்தரர் (7-40-6)


பொருள்: விடைக்கொடியை ஏந்துகின்ற தேவர் பெருமானும் , நீரில் துயில்கின்ற திருமாலும் , வேதத்திற்குத் தலைவனாகிய பிரமனும் அடி இணையையும் , அழகிய முடியினையும் காண்டல் அரிதாகிய , ` சங்கரன் ` என்னும் காரணப் பெயரை உடையவனும் , மெய்ப்பொருளானவனும் ஆகிய இறைவனை , அடியேன் , இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும் , மாலையை அணிந்த கூந்தல் அவிழவும் மூழ்கி விளையாடுதலால் கிடைத்த குங்குமச் சேற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற கொள்ளிடநதியின் கரைமேல் உள்ள , கடையர்கள் தாங்கள் களைந்த நீண்ட குவளைக் கொடிகளைச் சேர்த்து எடுக்கின்ற திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன் .

11 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தடக்கைநா லைந்துங் கொண்டு தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க வோடி யிரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை பத்துந் தோளு முறிதர விறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே யாரூர்மூ லட்ட னீரே.

                   -திருநாவுக்கரசர்  (4-52-10)


பொருள்: ஆரூர்ப் மூலட்டானத்தாரே ! நீண்ட இருபது கைகளைக்கொண்டு பெரிய கயிலைமலையைப் பிடித்துப் பெயர்த்து எடுக்கமுயன்ற இராவணன் செயலால் பூதங்கள் எல்லாம் அஞ்சி ஓட , அவனுடைய முடிகள் அணிந்த தலைகளும் இருபது கைகளும் முறியுமாறு சிறிதளவு கால் விரல் ஒன்றனை ஊன்றி வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்த நும் செயல் இருந்தவாறென்னே

07 October 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா வென்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயரு ணல்குமே.

                    -திருஞானசம்பந்தர்  (1-54-7)


பொருள்: மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே!  உமது அழகினைப் புகழ்ந்து ஓதாதவர் உள்ளனரோ 

05 October 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மாசறு சிந்தை யன்பர்
கழுத்தரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற
அம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையும்
மாவடு விடேல்வி டேலென்
றோசையுங் கமரி னின்றும்
ஒக்கவே எழுந்த வன்றே.

                        -அரிவாட்டாயநாயனார்  (18) 


பொருள்: குற்றம் அற்ற சிந்தையுடைய அன்பர், தமது கழுத்தை அரிந்திட, அரிவாளைப் பிடிக்கும் குற்றம் இலாத அக் கையைத் தடுத்து மாற்றிட, அம்பலத்து ஆடும் பெருமானது வீசி நின்றாடிய இடத் திருக்கையும், மாவடுவைக் கடித்திடும்போது `விடேல்` `விடேல்` என்று எழும் ஓசையும் அங்குள்ள நிலவெடிப் பினின்றும் ஒருங்கு எழுந்தன.

04 October 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 

                       -திருமூலர்  (10-25-1)


பொருள்: கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும்.

03 October 2016

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட்
டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்
கென்செய வல்லம்என்றும்
கரந்துங் கரவாத கற்பக னாகிக்
கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே
பல்லாண்டு கூறுதுமே.

                   -சேந்தனார் (9-29-5)


பொருள்: இந்திரன், திருமால், பிரமன் முதலியோர் செருக்குத் தோன்ற முதன்மை பாராட்டி ஆரவாரம் செய்து, பின் இன்று வரை எம்பெருமானைச் சரண் என்று அடைய இயலாதவராய், பல காலும் கெஞ்சிக்கெஞ்சி அழைக்கவும், அடியேமுடைய உயிரை ஆட் கொண்ட தலைவனுக்கு என்ன கைம்மாறு அடியேம் செய்யும் ஆற்றலுடையேம்? எக்காலத்தும் கண்ணுக்குப் புலனாகாமல் இருந்தும் வேண்டியவற்றை வேண்டியவாறு நல்கும் கற்பக மரம் போல் பவனாய், எல்லையற்ற கருணைக் கடலாய் எல்லா இடங்களிலும் விரிந்தும் இடையீடின்றி நிறைந்தும் எல்லைகடந்து நிற்கும் அடிகள் ஆகிய நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்.