30 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம் எய்தி யிருப்பரே. 

                  -சேதிராயர்  (9-28-5)


பொருள்: பொருந்தும் வகையில் தில்லை நாயனாராகிய சிவபெருமானைப் பற்றி அழகிய சேதி நாட்டு மன்னன் விரும்பி உரைத்த இப்பாடல்களை, எழுத்துப்பிழை, சொற்பிழை தோன்றாத வாறு தூய்மையாகப் பாடுபவர்கள் சிவலோகத்தில் உள்ள இன்பத்தை மறுமையில் பொருந்தி என்றும் மகிழ்வாக இருப்பர்.

26 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதீ.

                    -மாணிக்கவாசகர்  (8-22-8)


பொருள்: பூமியும் மேலே உள்ள பதங்களும் இவற்றை உள்ளடக்கிய பல்வேறு அண்டமும் ஆகிய எல்லாப் பொருளுமாய்த் தோன்றி விரிந்ததாகிய ஒளிப்பிழம்பே! நீரில் கலந்துள்ள நெருப்பு போன்றவனே! நினைப்பதற்கு அருமையான தூய பொருளே! உனது திருவருளாகிய வெள்ளம் பாய்கின்ற சிறப்புப் பொருந்திய சித்தத்தில் உண்டாகியதாகிய ஒப்பற்ற தேன் போன்றவனே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! எனக்கு இன்பத்தை உண்டாக்குகின்ற என்னொளியுடைய பொருளே! இவ்விடத்தில் உறவாயிருப்பவர் யார்? அயலாய் இருப்பவர் யார்?

25 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
   இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
   விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
   ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே


                              -சுந்தரர்  (7-39-10)

19 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஏற்றநீர்க் கங்கை யானே யிருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மே லேறு நான்முக னிவர்கள் கூடி
ஆற்றலா லளக்க லுற்றார்க் கழலுரு வாயி னானே
கூற்றுக்குங் கூற்ற தானாய் கோடிகா வுடைய கோவே.

                       -திருநாவுக்கரசர்  (4-51-9)


பொருள்: கங்கையைச் சடையில் ஏற்றவனே ! பெரிய உலகங்களை ஈரடியால் அளந்த திருமாலும் நறுமணம் கமழும் தாமரை மலர்மேல் தங்கும் பிரமனும் ஆகிய இருவரும் கூடித் தம் ஆற்றலால் அளக்க முயன்றவர்களுக்குத் தீத்தம்ப வடிவாயினவனே ! யமனுக்கும் யமனாயினாய் கோடிகா உறை  பெருமானே ! 

18 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தேவராயு மசுரராயுஞ் சித்தர்செழு மறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரிகால் நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயதுமு துகுன்றே.

                        -திருஞானசம்பந்தர்  (1-53-1)


பொருள்: தேவர், அசுரர், சித்தர், செழுமையான வேதங்களை ஓதும் நாவினராகிய அந்தணர், நாம் வாழும் மண், விண், எரி, காற்று, நீர் ஆகிய ஐம்பூதங்கள், மணம் மிக்க தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், சிவந்த கண்களை உடைய திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள் ஆகிய எல்லாமாகவும் அவர்களின் தலைவராகவும் இருக்கின்ற சிவபிரான் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றத் தலமாகும்.

17 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெல் இன்னமு தோடுசெங் கீரையும்
மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
தன்ன வென்றும் அமுதுசெய் விப்பரால்.

                   -அரிவாட்டாயநாயனார்  (6) 


பொருள்: அவர், விளங்குகின்ற செஞ்சடையை உடைய அறவாழி அந்தணராய சிவபெருமானுக்கு ஆகும் என்று, நாளும் செந்நெல்லின் இனிய உணவுடன் செங்கீரையும் சிறந்த கொத்தாக விளங்கும் மாவடுவையும் கொணர்ந்து, அவற்றைப் பெருமானுக்கு அமுது செய்வித்து வருவார்.

16 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.

                       -திருமூலர்  (10-23-1) 


பொருள்: மாசில்லாத, உயர்ந்த கல்வியை யான் கற்றேன்; அதனால் உயிர் உடலோடு கூடிநின்றேனாய், அறியத்தக்க பொருளை அறிந்தேன்; அதன் பயனாக இறைவனை உள்ளத்திலே இருத்தத் தெரிந்தேன். அதனால், அவனும் மீண்டுபோகாதவனாய் என் உள்ளத்திலே வந்து புகுந்து நின்றான்.

12 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம் எய்தி யிருப்பரே.

10 August 2016

தினம் ஒரு திருமுறை


 தினம் ஒரு திருமுறை


மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடைய அன்பே. 

                         -மாணிக்கவாசகர்  (8-22-1) 


பொருள்: தேனின் தெளிவானவனே! சிவபிரானே! திருப் பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவனே! அளவு இல்லாத பதவிகள் எல்லாவற்றையும் கடந்து நின்ற ஆனந்தமே! என்னுடைய அன்பு உருவமே! பகைத்து, என்னை மயக்கச் செய்யும் வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களின், வாயில்களையும் அடைத்து அமுதமே சுரந்து நின்று என்னகத்தே தோன்றுகின்ற ஒளியே! உன்னை நான் உள்ளவாறு காணும்படி வந்தருள்வாயாக.

05 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீறுமெய் பூசி னானே நிழறிகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே யிருங்கட லமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேத மறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே கோடிகா வுடைய கோவே.

                       -திருநாவுக்கரசர்  (4-51-3)


பொருள்: திருநீற்றைத் திருமேனியில் பூசியவனாய் , ஒளிவீசும் மழுப்படையினனாய் , காளையை விரும்பி ஏறிஊர்ந்தவனாய் , பெரிய கடலில் தோன்றிய அமுதத்தை ஒப்பவனாய் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகிய அறத்தை உபதேசித்தவனாய் , பார்வதி பாகனாய் உள்ளவன் கோடிகாப் பெருமான் ஆவான் 

04 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

                         -திருஞானசம்பந்தர்  (1-52-9)


பொருள்: யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ்பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினது கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன்போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் திருநெடுங்களம் மேவிய இறைவனே நீ களைந்தருள்வாய்

03 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மனந்தளரும் இடர்நீங்கி
வானவர்நா யகரருளால்
புனைந்தமலர்க் குழல்பெற்ற
பூங்கொடியை மணம்புணர்ந்து
தனம்பொழிந்து பெருவதுவை
உலகெலாந் தலைசிறப்ப
இனம்பெருகத் தம்முடைய
எயின்மூதூர் சென்றணைந்தார்.

                     -மானக்கஞ்சாற நாயனார்  (36) 


பொருள்: மனந்தளர்ந்த நிலையினின்றும் நீங்கியவராய், தேவர்களின் தலைவரான இறைவனின் இன்னருளால், மீளவும் பழமைபோல் வளரப்பெற்ற கூந்தலையுடைய பூங்கொடியாய அப்பெண்ணைத் திருமணம் செய்து, யாவர்க்கும் பொருள் வழங்கி, அனைவரும் இன்புறும்படியாகப் பெரிய இத்திருமண நிகழ்வை உலகெலாம் போற்ற, தம் சுற்றத்தார் பலரும் பெருகிச் சூழ்ந்து வர மதிலுடைய தன்முதிய நகரம் சென்று சேர்வுற்றார்.