30 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே.
 
                 -திருஞானசம்பந்தர்  (1-44-1)

 

பொருள்: பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

29 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பேறினி யிதன்மேல் உண்டோ
பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண்
இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர் தங் கையால்
பிடித்துக்கொண் டென்வ லத்தின்
மாறிலாய் நிற்க வென்று
மன்னுபே ரருள்பு ரிந்தார்.

                     -கண்ணப்ப நாயனார்  புராணம் (180)

 

பொருள்: பெருமானார் திருக்கண்ணில் வந்த ஊறாய புண்ணைக் கண்டு அஞ்சி, அதற்காகத் தமது இடக்கண்ணை இடக்க எடுத்த கண்ணப்ப நாயனாரின் கையை, ஆனேற்றுக் கொடியை உயர்த்தியருளிய பெருமானார் தம் கையால் பிடித்துக் கொண்டு, `ஒப்பில்லாத அன்பனே! என் வலப் பக்கத்தில் என்றும் நீ நிற்பாயாக` என எக்காலமும் குன்றாத சீர்மன்னி விளங்கும் பெரிய அருள் புரிந்தார்.

28 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால் நாங்கள் கடல்வாய்க்
கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து

25 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும்
செய்நின்ற செல்வமும் தீயது வாமே.
 
                     - திருமூலர் (10-14-5)
 
 
பொருள்: நெய்யால் எரிகின்ற பெரிய வேள்வித் தீயின் வழியே சென்று, அஞ்ஞானம் வெந்தொழியும் நெறியை அறி கின்றவர்கட்கு, அஞ்ஞானம் நீங்கும் வாயிலாகிய மந்திரமும், முயன்று பெற நிற்கின்ற முத்திப் பெருஞ் செல்வமும் வேள்வியே யாகும்.
 

24 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
படரொளி தருதிரு நீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழற்றிருச் சடையுந்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
டிருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
தழல்மெழு கொக்கின்றதே.
 
                     -திருவாலியமுதனார்  (9-23-1)

 

பொருள்: பவளத்தால் ஆன  பெரிய மலையைப்பனிபரவி மூடினாற்போல வெண்ளொளி வீசும் திருநீற்றினைப்பூசி, பெரிய குவளைமலர்களாலாகிய முடிமாலையும் கொன்றைப் பூவும் பொருந்திய பொன்னிறமுடைய சுருண்ட அழகிய சடையை உடைய வனாய், ஒளிவீசும் மாளிகைகள் சூழ்ந்த தில்லைநகரிலே திருக்கூத்து நிகழ்த்துகின்ற வெண்ணிறம் பொருந்திய சிவபெருமானை நினைக்குந் தோறும் அடியேனுடைய உள்ளம் நெருப்பின் அருகிலிருக்கும் மெழுகுபோல உருகுகின்றது.

23 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும்.
 
                        -மாணிக்கவாசகர்  (8-17-1)

 

பொருள்: வேதங்களாகிய சொல்லையுடையவர்; வெண்மையான திருநீற்றினை அணிந்தவர்; செம்மையான திரு மேனியை உடையவர்; நாதமாகிய பறையினையுடையவர் என்று நின் மகள் சொல்லுவாள். மேலும், தாயே! நாதமாகிய பறையையுடைய இத் தலைவரே, பிரம விட்டுணுக்களுக்கும் தலைவராவார். 

22 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந்
தேத்தி னேன்பணி யீரருள்
வடியி லான்திரு நாவ லூரன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன்
செடிய னாகிலுந் தீய னாகிலுந்
தம்மை யேமனஞ் சிந்திக்கும்
அடிய னூரனை யாள்வ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.
 
                  - சுந்தரர் (7-33-10)

 

பொருள்: அடியவர் செய்யும் செயல்களைப் படியெடுக்கும் தன்மையில் , திருத்தம் இல்லாதவனும் , திருநாவலூரில் தோன்றியவனும் , வனப்பகைக்கு தந்தையும் ஆகிய வன்றொண்டனேன் உங்களை வணங்கித் துதித்தேன் ; கீழ்மையை உடையவனாயினும் , கொடியவனாயினும் , தம்மையே எப்பொழுதும் மனத்தில் நினைக்கின்ற அடியவனாகிய நம்பியாரூரனை , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் கைவிடாது ஆளுதல் செய்வரோ நம் பெருமான் 

21 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குண்டரே சமணர் புத்தர் குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள் கருத்தெண்ணா தொழிமி னீர்கள்
விண்டவர் புரங்க ளெய்து விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்க டுணையி னானைத் துருத்திநான் கண்ட வாறே.
 
                            -திருநாவுக்கரசர்  (4-42-9)

 

பொருள்: சமணரும் புத்தரும் அடையவேண்டிய குறிக்கோளை அறியாமல் தம் தம் ஆராய்ச்சியால் கண்டவற்றையே முடிந்த பொருள்களாகக் கருதுவர். அவர்கள் கருத்தை உண்மையாகக் கருதாமல் புறக்கணித்து விடுங்கள்.  மும்மதில்களையும் அம்பு எய்து அழித்துத் தேவர்களுக்கு அருளி  அடியார்களுக்குத் துணைவனாக இருக்கும் பெருமானை அடியேன் திருத் துருத்தியுள் தரிசித்து உய்ந்தேன். 

18 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாளமர் வீர நினைந்த விராவணன் மாமலை யின்கீழ்த்
தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்
தாளமர் வேய்தலை பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-43-8)

 

பொருள்: மூங்கிலினது தழையைப்பற்றி வளைத்து உண்ட களிறு, அதனை வேகமாக விடுதலால் அம்மூங்கில், விசையோடு சென்று, கரிய நிறம் பொருந்திய மேகங்களைக் கீறும், திருக்கற்குடி மாமலை இறைவர், வாட்போரில் வல்ல தனது பெருவீரத்தை நினைந்த இராவணனைப் பெருமை பொருந்திய கயிலைமலையின்கீழ் அவன் தோள்களும், வலிய தலைகளும் நெரியுமாறு தமது பழம்புகழ் வாய்ந்த கால் விரலால் ஊன்றியவர்  ஆவர். 

16 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செங்கண்வெள் விடையின் பாகர்
திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி
அற்புதர் திருக்கை யன்பர்
தங்கண்முன் னிடக்குங் கையைத்
தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக்
கண்ணப்ப நிற்க வென்றே.

                -கண்ணப்பநாயனார் புராணம்   (178)

 

பொருள்: செங்கண்களையுடைய விடை மீது எழுந்தருளுவோரும், திண்ணனார் தம்மை ஆண்ட அருளாளரு மாகிய இறைவராய, திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானாரின் திருக்கை தோன்றி, திண்ண னார் தம் கண்ணை இடந்து தோண்டும் கையைத் தடுத்து நிற்ப, பாம்பினைத் திருக்கையில் அணிந்த அப்பெருமானின், அமுதமாய வாக்கு, `கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க!` என முன்று முறை ஒலித்தது 

15 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்
கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் வந்தித்து
வால்உகுத்த வண்கயிலைக் கோமான் மணிமுடிமேல்
பால்உகுத்த மாணிக்குப் பண்டு.

10 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே          -திருமூலர்  (10-14-1)

 

பொருள்: சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும், நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்

09 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தூவி நீரொடு பூவ வைதொழு
தேத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி யுள்நிறுத்தி யமர்ந்
தூறிய அன்பினராய்த்
தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக்
கூத்த னைத்திரு வாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடை
யான் அடி மேவுவரே.
 
                     -திருவாலியமுதனார்  (9-22-11)

 

 பொருள்: நீரினால் திருமுழுக்காட்டி மலர்களைத் தூவித் தொழுது கும்பிடும் கைகளை உடையவர்களாய் மேம்பட்ட ஆவியை உள்ளே அடக்கி விரும்பச் சுரந்த அன்புடையவர்களாய்த் தேவர்கள் தாம் வணங்குமாறு திருக்கூத்து நிகழ்த்திய தில்லைக் கூத்தப்பிரானைத் திருஆலி அமுதன் சொல்லிய சொற்களை விரும்பிப் பாட வல்லவர்கள் விடையுடை சிவபெரு மானுடைய திருவடிகளை மறுமையில் அடைவார்கள்.

08 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.
 
                         -மாணிக்கவாசகர் (8-16-9)

 

பொருள்: தென்னை மரங்கள் பரவியுள்ள சோலையையுடைய திருவுத்தர கோச மங்கையில் தங்குதல் பொருந்திய ஒளிமயமான  உருவத்தை உடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறவியைத் தொலைத்து யாவரையும்  அடிமை கொள்ளும் பொருட்டு, ஒரு பாகமாகப் பொருந்திய மங்கையும் தானுமாய்த் தோன்றி, என் குற்றேவலைக் கொண்ட, மணம் தங்கிய கொன்றை மாலையணிந்த சடையை யுடையவனது குணத்தைப் புகழ்ந்து, நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்

07 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோணன் மாமதி சூட ரோகொடு
கொட்டி காலொர் கழலரோ
வீணை தான்அவர் கருவி யோவிடை
யேறு வேதமு தல்வரோ
நாண தாகவொர் நாகங் கொண்டரைக்
கார்ப்ப ரோநல மார்தர
ஆணை யாகநம் மடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே.
 
                   -சுந்தரர் (7-33-5)

 

பொருள்:  நமக்குத் தலைவராய் உள்ளவர் , வளைந்த  பிறையைத் தலையிற் சூடுதல் உடையவரோ,  கொடுகொட்டி   என்னும் கூத்தினை ஆடுபவரோ,   காலில் ஒரு கழலை அணிவரோ, அவரது இசைக் கருவி வீணைதானோ,   அவர் ஏறுவது விடையோ,  அவர் வேதத்திற்குத் தலைவரோ,   அரை நாணாகப் பாம்பு ஒன்றைப் பிடித்து அரையில் கட்டுவரோ ? நம்மேல் ஆணையாக நமக்கு நன்மை நிரம்புமாறு நம்மை ஆளுவரோ ? சொல்லுங்கள். 

04 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல விறைவனை யேத்து மின்னோ
அவைபுர மூன்று மெய்து மடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
 
                         -திருநாவுக்கரசர்  (4-42-2)

 

பொருள்: குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலுக்கான வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல என்றறிந்து எம் பெருமானையே துதியுங்கள் . மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்து இன்பம் கண்டேன் 

03 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனன் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாம்
கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
 
                           -திருஞானசம்பந்தர்  (1-43-1)

 

பொருள்: திருக்கற்குடி மாமலையை விரும்பி அதன்கண் வாழும் இறைவர், முத்துவடம் விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடப்பாகமாகக் கொண்டு பெரிய அலைகள் வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடைமிசை வைத் துள்ள சதுரப்பாடுடையவர்: திருமேனியின் இடப்பாகத்தே விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்பதுன்பங்களைக் கடந்தவர்.

02 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்டபின் கெட்டேன் எங்கள்
காளத்தி யார்கண் ணொன்று
புண்தரு குருதி நிற்க
மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்மற் றிதனுக் கஞ்சேன்
மருந்துகைக் கண்டே னின்னும்
உண்டொரு கண்அக் கண்ணை
இடந்தப்பி யொழிப்பே னென்று.
 
                     -கண்ணப்பநாயனார் புரணாம்  (176)

 

பொருள்: இதைக் கண்டதும்,அந்தோ! நான் கெட்டேன்! எங்கள் காளத்தியார் தம் கண்களில் ஒன்றான வலத் திருக்கண்ணில் குருதி வருதல் நின்றிட, மற்றைக்கண்ணாய இடக் கண்ணில் குருதி பொங்குகின்றதே! என்று எண்ணியவராய், இதற்கு யான் அஞ்ச மாட்டேன், மருந்து கையில் இருக்கக் கண்டேன், இன்னும் என்னி டத்தில் ஒரு கண் உண்டு, அக்கண்ணை நான் அம்பால் இடந்து எம் பெருமானுடைய கண்ணில் அப்பி, அக்கண்ணிலிருந்து வரும் குருதி யையும் ஒழிப்பேன் என்றார்.