31 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர்க்கின்ற நீரும் அனலும்
மதியும்ஐ வாயரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும்
உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும்
பகலும் இரவுமெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன்
ஆகிக் கலந்தனவே.
 
                - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-50)

 

பொருள்:  கொன்றைப் பூவினா லாகிய மாலையைத் தனது அடையாள மாலையாகக் கொண்ட சிவ பெருமானிடத்தில் நீர் - நெருப்பு, திங்கள் -  பாம்பு, யோக நிலை - இல்லாள், உருவம் - அருவம், புலி - மான், பகல் - இரவு இவ்வாறு எல்லாம் ஒன்றுக்கொன்று பகை நீங்கி நட்புக் கொண்டு உடன் கலந்து வாழ்கின்றன.

30 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
 
                   - திருமூலர் (10-5-3)

 

பொருள்: உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படு வோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பல வற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.

29 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட
புனிதனை வனிதை பாகனை வெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
குழகனை அழகெலாம் நிறைந்த
தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந்
திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
பரமன துருவமா குவரே.
 
                 - கருவூர்த்தேவர் (9-14-10)

 

பொருள்: திருப்பூவணத்த்தலத்தில் கோயில்கொண்டு அடியேனைத் தன் அடியவனாகக்கொண்ட புனிதனாய், உமை  பாகனாய், வெள்ளிய கோவண ஆடையை உடுத்து வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தும் இளையனாய், எல்லா அழகுகளும் முழுமையாக நிறைந்த தீ நிறத்தவனாகிய சிவபெருமானுடைய செய்திகளாகச் சிறந்த வேதங்களை ஆராயும் விளக்கமுடைய கருவூர்த் தேவனாகிய அடியேன் சொல்லிய பாக்களின் தன்மை பொருந்திய தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பொருளோடு ஓதி நினைவிற்கொண்டு பாட வல்லவர்கள் சிவபெருமானுடைய சாரூப்பியத்தை அடை வார்கள்.

28 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருமந்த தேவர்
அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர்
உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக்
கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                     - மாணிக்கவாசகர் (8-11-5)

 

 பொருள்: திருமால், பிரமன் என்னும் அருமையாகிய தேவர்களுக்கும் அருகிய  சிவம் உலகத்துள்ளோர் வியப் படையும் வண்ணம் மானுடவுருவமாய் எழுந்தருளி என்னை அடிமை கொண்டு என்பிறவிக் காடுவெந்து நீறாகும்படி கடைக்கணித்து என் மனம் புகுந்ததனால் எனக்குளதாகிய பெருஞ்செல்வத்தைப் புகழ்ந்து பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.

27 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏரார் முப்புரமும் மெரி
யச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழ
பாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.
 
             - சுந்தரர் (7-24-10)

 

பொருள்: அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும் , கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை , புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள் , சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள் .

24 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடைச் சுவைகள் பாடி யாடிடும் பத்தர்க் கென்றும்
கண்ணிடை மணியர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
 
                   - திருநாவுக்கரசர் (4-31-2)

 

பொருள்: இந்நிலவுலகிலே உமக்குக் கிட்டியுள்ள மனித உடம்பாகிய கூட்டினைப் பெருமையாகக் கருதி நீங்கள் மயக்கந்தரும் இவ்வுலக வாழ்வில் ஈடுபடுவீராயின் , யமலோகத்திலுள்ள தருமராசர் உம் உடம்பிலிருந்து உயிரைப் பிரிக்க விரும்பினால் அதனை அப்பொழுது தடுக்க வல்லவர் யாவர் உளார் ? பண்களோடு சுவையாக எம்பெருமான் புகழைப் பாடிக் கூத்தாடும் அடியவர்களுக்கெல்லாம் கண்மணியைப் போன்றிருந்து அவர்கள் உய்ய வழிகாட்டுகிறார் கடவூர் வீரட்டனார் .

23 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்
பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே.
 
                - திருஞானசம்பந்தர் (1-32-11)

 

பொருள்: இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.

21 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்.
 
              - எரிபத்தனாயனார் புரணாம் 

 

பொருள்: எறிபத்த நாயனார், மேற்கூறிய முறையான வலிய பெருந்தொண்டை நாளும் இந் நிலவுலகத்தின்கண் அடியவர் களுக்குத் துன்பம் நேரிட்ட பொழுது அவர் முன் சென்று அத்துன் பத்தை நீக்கி, நாளும் நல்ல தவநெறியைப் பூண்டு, பின்பு மேன்மை மிக்க திருக்கயிலையில் வெற்றி பொருந்திய சிவகணங்கட்க்கு முன்னாக இருக்கும் முதன்மை பெற்றார்.

20 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முனியே முருகலர் கொன்றையி
னாயென்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லாற்
களைகண்மற் றொன்றுமிலேன்
இனியேல் இருந்தவஞ் செய்யேன்
திருந்தவஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம்
ஆர்க்கினிச் சாற்றுவனே.
 
                     - சேரமான் பெருமாள் நாயனார் (11-6-40)

 

பொருள்: முனிவனே, நறுமணம் கமழ மலர்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, எனக்குச் சாதலைத் தவிர்த்த கனியாய் உள்ளவனே, உனது வீரக் கழல் அணிந்த திருவடிகளைத் தவிர வேறு துணை ஒன்றும் இல்லேன்;   தவத்தைச் செய்ய இயலாமல் ஐம்புலன்களையே நினைந்து தமியேன் படுகின்ற இடர்ப்பாட்டினை யார்க்கு அறிவித்துத் தீர்வு காண்பேன்; இப்பொழுதே என்னை நீ ஏற்றுக்கொள்

17 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
 
              - திருமூலர் (10-5-1)

 

பொருள்: இரண்டு பாண்டங்கள் ஒருவகை மண்ணாலே செய்யப்பட்டனவாயினும், அவற்றுள் ஒன்று தீயிலிட்டுச் சுடப்பட, மற்றொன்று அவ்வாறு சுடப்படாதிருப்பின் அவற்றின்மேல் வானத்தி னின்றும் மழை விழும்போது, சுடப்பட்டது கேடின்றி நிற்க, சுடப் படாதது கெட்டு முன்போல மண்ணாகிவிடும். மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றதும் இதுபோல்வதே.

16 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.
 
                       - கருவூர்த்தேவர்  (9-14-5)

 

பொருள்: உயரமான அடுக்குக்களை உடைய மாட வீடுகளில் இரா நேரத்தில் இருளைப்போக்குவதற்கு அணையாது உள்ள விளக்குக்கள் சாளரங்களுக்கு வெளியே ஒளியை வீசுகின்ற, கடைத்தெருக்களையுடைய திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற பெருமானே! கொடிய வினையாகிய பாசக்கடலைக் கடந்து ஐம்பொறிகளாகிய திருடர்களை மெதுவாக விரட்டி உன் திருவடிகள் இரண்டனையும் நூல்களில் சொல்லப்பட்ட நெறிக்கண் நிற்கும் முறையானே அடைந்துவிட்டேன். அடியேனுக்கு அருள் செய்வதோ, அருள் செய்யாது விடுப்பதோ உன் திருவுள்ளம்

15 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருமாலும் பன்றியாய்ச்
சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம்
ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                   - மாணிக்கவாசகர்  (8-11-1)

 

 பொருள்: திருமாலும் வராகவுருவங் கொண்டு நிலத்தைப் பிளந்து சென்றும் அறியாத திருவடியை யாம் அறிந்துய்யும்படி ஒரு அந்தணனாய் எழுந்தருளி எம்மை ஆண்டு கொண்டவனும், திரு நாமங்கள், வடிவங்கள் இல்லாதவனுமாகிய சிவபெருமானுக்கு ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

14 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சந்தா ருங்குழையாய் சடை
மேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை
யேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
 
                 - சுந்தரர் (7-24-7)

 

பொருள்: பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே , சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே , வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே , இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே , அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , என் தந்தையே , நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

13 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 

சதுர்முகன் றானுமாலுந் தம்மிலே யிகலக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற வெரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன்றன்னைக் காறனிற் பிதிரவைத்தார்
கதிர்முகஞ் சடையில்வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
 
                          - திருநாவுக்கரசர் (4-30-9)

 

பொருள்:  பிரமனும் திருமாலும் தம் இருவருள் பரம்பொருள் யாவர் என்று மாறுபடுதலைக் கண்டு , கண்கூடாக ஆதியும் அந்தமும் காணமுடியாத தீத்தம்பத்தைப் படைத்தார் . கடுமையான முகத்தை உடைய கூற்றுவனைக் காலினால் சிதறவைத்தார் . பிறையைச் சடையில் வைத்தவருமான கழிப்பாலைச் இறைவனார். 

10 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

தடங்கொண்டதொர்தாமரைப்பொன்முடிதன்மேல்
குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்டப்
படங்கொண் டதொர்பாம் பரையார்த்த பரமன்
இடங்கொண் டிருந்தான் றனிடை மருதீதோ.
 
               -   திருஞானசம்பந்தர் (1-32-2)

 

பொருள்: தடாகங்களிற் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில், அடியவர் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரைமுகந்து சுமந்து வந்து அபிடேகிக்குமாறு, படம் எடுத்தாடும் நல்லபாம்பை இடையிலே கட்டிய பரமன் தான் விரும்பிய இடமாகக் கொண்டுறையும் இடைமருது இதுதானோ?

09 October 2014

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை

இருவரும் எழுந்து வானில்
எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார்
அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம
நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து
சிவகாமியாரும் நின்றார்.
 
                      - எறிபத்தநாயனார் புராணம் (50)

 

பொருள்: எறிபத்த நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் ஒருவரை ஒருவர் வணங்கி, எழுந்து நின்று, வானொலியைப் போற்ற, அரிய மறைப் பொருளாயுள்ள சிவபெருமானும், அழகிய திருப்பூங்கூடையில் முன்பிருந்த திருப்பள்ளித் தாமத்திற்குரிய மலர்கள் நிறையும்படி அருளிச் செய்ய, அத்தகைய திருவருளைக் கண்டு மகிழ்ந்து, சிவகாமி யாண்டாரும் அங்கு வந்து நின்றனர்.

08 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய்
இழுதழல் வாய்மெழுகு
தலிக்கின்ற காமங் கரதலம்
மெல்லி துறக்கம்வெங்கூற்
றொலிக்கின்ற நீருறு தீயொளி
யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை
சூடிய பல்லுயிரே.
 
                   - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-35)

 

பொருள்: நீரின்கண் விரவிய தீ வெளித்தோன்றாது நிற்றல்போல எப்பொருளினுள்ளும் நிறைந்திருப்பவரும், ஒளி பொருந்திய மேனியை உடையவரும், மூன்று கண்களையுடைய முதல்வரும் ஆகிய சிவபெருமானாகப் பிச்சை ஏற்பவராக வேடம் பூண்டு, `பிச்சை` என்று கேட்டு வீதியிலே வந்தார். அவர் வரவைக் கண்டதும் பல உயிர்கள் அவரது வாசனை பொருந்திய கொன்றை மாலையைப் பெற்றுத் தாம் சூடிக்கொள்ள விரும்பி, எம்பொருளையும் அழிக்கின்ற, கொடிய தீயினிடத்து வெண்ணெயும், வெயிலிடத்து மெழுகும் போல ஆகிவிட்டன. காலன்   வந்து அழைகின்ற ஓசைகள் அவற்றின் காதுகளில் ஒலிக்கின்றன.

07 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
 
                  - திருமூலர் (10-4-30)

 

பொருள்: உண்மை ஞானத்தை வழங்குகின்ற அருளுரு வினரான எங்கள் நந்தி பெருமானைத் தங்கள் நெஞ்சில் மறவாது நினைந்து ஞானம் முதிரப் பெற்றவர்களே இவ்வுலகில் சிவபெரு மானது ஆனந்த நடனத்தால் கண்ணும் களிகூர வாழ்ந்து, இவ்வுடம்பு நீங்கியபின் வேதமும் போற்றுமாறு சென்று பரவெளியை அடைந் தார்கள்; ஏனையோர் மீளவும் பிறவிக்கு ஆளாயினர்.

06 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
சிறியனுக் கினியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங் ககில்மரம் சாடி
வரைவளங் கவர்ந்திழி வையைப்
பொருதிரை மருங்கோங் காவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.
 
          - கருவூர்த்தேவர் (9-14-1)

 

பொருள்: மருது, அரசு, பெரிய கோங்கு, அகில் என்னும் மரங்களை முரித்துக்கொண்டு மலையில் தோன்றும் பொருள்களை அடித்துக்கொண்டு மலையிலிருந்து இறங்கி ஓடிவருகின்ற வையை நதியின் ஒன்றோடொன்று மோதும் அலைகள் தம் பக்கத்தில் ஓங்கக்கொண்ட, கடைவீதிகளையுடைய திருப்பூவணம் என்ற தலத்தில் கோயில் கொண்டெழுந்தருளிய பெருமானே! திருவருள் புரிந்து அடியேனை அடிமையாக இவ்வுலகில் ஆட்கொண்டு இன்பம் தரும் பொருள் இது என்று அறிவித்து மிகுதியாக அருள்புரிந்து ஆனந்தத்தை வழங்குகின்ற உன் பெருமையைவிட மேம்பட்ட பொருள் ஒன்று உளதோ?

01 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூமேல் அயனோடு
மாலும் புகலரிதென்
றேமாறி நிற்க
அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு
நன்றாப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
             - மாணிக்கவாசகர் (8-10-20)

 

பொருள்: பிரமவிட்டுணுக்கள் தடுமாறவும், நான் இறுமாந்திருக்கவும், நாய்க்கு ஆசனமிட்டாற்போல என்னைப் பொருள்படுத்தி அடிமை கொண்ட நெருப்புப் போலும் திருமேனியை யுடைய சிவபெருமானிடத்தே, தும்பியே நீ  சென்று ஊதுவாயாக.